Published : 31 Oct 2017 04:04 PM
Last Updated : 31 Oct 2017 04:04 PM
நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று போற்றப்படும் தலம், திருவண்ணாமலை. பிறக்க முக்தி நிச்சயம் என்று போற்றப்படும் திருத்தலம். திருவாரூர். பஞ்சபூதத் தலங்களுள், நிலத்துக்கு உரிய தலம். சப்த விடங்கத் தலங்களுள் இந்தத் தலமும் ஒன்று. வி+டங்கம் என்றால் உளியினால் செதுக்கப்படாதது என்று பொருள்.
1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் கோயில் குறித்து, ’அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டார்” என்று அப்பர் பெருமான் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதையே, ‘கோயில் ஐந்து வேலியாம். தீர்த்தக் குளம் ஐந்து வேலியாம். செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலியாம்’ என்பார்கள். திருவாரூர் நகரமும் ஆலயமும் சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள்.
வருட ஆரம்பமான வசந்த காலத்தில் பௌர்ணமி அன்று, குரு சந்திர யோகம் சேர்ந்த கடக லக்கினத்தில், புண்ணியபுரம் எனும் திருவாரூரின் நடுவில் தியாகபதியாகத் தோன்றினார் சிவபெருமான் என்கிறது ஸ்தல புராணம். அப்போது திருக்கோயிலின் நடுவே லிங்கமாகவும், தியாகராஜ வடிவமாகவும் தோன்றினார் ஈசன். இங்கு உள்ள தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பட்டவர். பின்னர் இந்த தியாகராஜ மூர்த்தம், திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்ரவர்த்திக்கும் அளிக்கப்பட்டது என்பதாகத் தெரிவிக்கிறது புராணம்.
திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், , அகத்தியர், விசுவாமித்திரர், மகாபலி, துர்வாசர், சுகுந்தன், தசரதன், ஸ்ரீராமன், லவ-குசர். புரூரவஸு, தேவர், யட்சர், கின்னரர், கிம்புருடர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தண்டி அடிகள் என பலரும் தியாகேசரை வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் இது!
செங்கல் கட்டுமானமாக இருந்த ஆலயம் இது. சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால் பிறகு கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டது. முதலாம் ஆதித்த சோழனால் கி.பி. 9-ம் நூற்றாண்டு கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்கர், விஜய நகர, மராட்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்டிருக்கிறது.
மூலவர் வன்மீகநாதர் சுயம்புத் திருமேனி. தியாகராஜர் இங்கே, சோமாஸ்கந்தராகக் காட்சி தருகிறார். தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதை சோமகுல ரகசியம் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யர்கள். ஸ்ரீசக்ரம் இறைவனின் மார்பை அலங்கரிப்பதால் கூடுதல் சிறப்பையும் சாந்நித்தியத்தையும் பெறுகிறது ஆலயம்!
நித்திய பூஜை, திருமஞ்சனம் ஆகியவை மூலவரின் அருகிலிருக்கும் மரகத லிங்கத்துக்கே நடைபெறுகிறது. பஞ்ச தாண்டவங்களில் இங்கு அஜபா தாண்டவம் நடைபெறுகிறது. வாயால் சொல்லாமல் சூட்சுமமாக ஒலிப்பதால் இதற்கு அஜப என்று பெயர். அஜபா என்றால் ஜபிக்கப்படாதது என்று அர்த்தம். இந்த வித்தையை விளக்குவதே திருவாரூர் தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம்.
எல்லாக் கோயில்களிலும் பாடும் முன் திருச்சிற்றம்பலம் என்பார்கள். இங்கு ‘ஆரூரா தியாகேசா’ என இரு முறை கூறுவர். தில்லை நடராஜ சபை- பொன் அம்பலம். ஆரூர் ஸ்ரீதியாகராஜ சபை- ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர் அமைந்தது.
மணித் தண்டு, தியாகக் கொடி, ரத்தின சிம்மாசனம், செங்கழுநீர் மாலை, வீரகண்டயம், அஜபா நடனம், ஐராவணம், அரதன சிருங்கம், பஞ்சமுக வாத்தியம், பாரி நாகஸ்வரம், சுத்த மத்தளம், குதிரை-வேதம், சோழ நாடு, ஆரூர், காவிரி, பதினெண் வகைப் பண்- ஆகியவை தியாகராஜரின் 16 விதமான அங்கப் பொருட்கள்.
தியாகேசர் சந்நிதியில், மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும்.
சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. அத்துடன், தியாகராஜர் சந்நிதியில் ‘திருச்சாலகம்’ எனும், தென்றல் தவழும் சாளரம் உள்ளது குறிப்பிடத் தக்கது.
தியாகராஜருக்கு மாலை நேர பூஜையின் போது 18 இசைக் கருவிகள் (சுத்த மத்தளம், கர்ணா, சங்கு, எக்காளம், நகரா, நமுகி (நட்டுமுட்டு), கிடுகிட்டி (கொடுகொட்டி), புல்லாங்குழல், தாரை, பாரிநாயனம், பஞ்சமுக வாத்தியம், தவண்டை, பேரிகை, பிரம்மதாளம், வாங்கா, திருச்சின்னம், தப்பட்டை, முக வீணை) இசைக்கப் பட்டன என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்!
ஆரூர்ப் பெருமானை ‘பவனி விடங்கர்’, ‘விடங்கராய் வீதி போந்தார்’ என்றெல்லாம் சிறப்பிக்கிறது தேவாரம். இவருக்கு ‘தக்கார்க்குத் தக்கான்’ எனும் பெயரும் உண்டு. மற்றும் சில பெயர்களைப் பார்ப்போமா.
அசைந்தாடும் பெருமாள், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், ரத்தின சிம்மாசனாதிபதி, கருணாகரத் தொண்டை மான், கனகமணித் தியாகர், தியாக விநோதர், மணித் தண்டில் அசைந்தாடும் பெருமான், செவ்வந்தித் தோடழகர், செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், கம்பிக் காதழகர், வசந்த வைபோகத் தியாகர், தேவசிந்தாமணி, முன்னிலும் மும்மடங்கு பின்னழகர், தியாக சிந்தாமணி, அந்திக் காப்பழகர், தியாகப் பெருமான், செம்பொன் தியாகர், கிண்கிணிக்காலழகர், தேவரகண்டன் இப்படிப் பல திருநாமங்கள் இறைவனுக்கு!
இங்கு மாலை வேளையில் தேவேந்திரன் வந்து பூஜிப்பதாகவும், சாயரட்சை பூஜையின் போது தேவர்களும் ரிஷிகளும் கலந்து கொள்வதாகவும் ஐதீகம்.
தியாகேசரின் அசல் விக்கிரகத்தை ‘செங்கழுநீர்ப்பூ மூலம் சரியாகக் கணித்தான் முசுகுந்தன். எனவே, தியாகேசருக்கு செங்கழுநீர்ப்பூ சாத்துவது சிறப்பு.
மூன்றாவது பிராகாரத்தில், வடமேற்குத் திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த அம்பிகை மூன்று தேவியரின் சங்கமம். (க- & கலைமகள், ம- & மலைமகள், ல- & அலைமகள்). அம்பிகைக்குத் தனிக் கொடி மரம் உண்டு. சர்வேஸ்வரனைப் போன்று தன் சிரசில் கங்கையையும், பிறையையும் சூடி, யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள்.
அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில், 51 அட்சரங்கள் எழுதப்பெற்ற அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. கமலாம்பிகை கருவறையின் அணுக்க வாயிலின் இரு புறமும் சங்க- பதும நிதிகள் உள்ளன.
இந்தத் தலத்தின் ஆதிசக்தியான நீலோத்பலாம்பிகைக்கும் (அல்லியங்கோதை) தனிச் சந்நிதி உள்ளது. நான்கு கரங்கள் கொண்ட இவளின் அருகே இடுப்பில் முருகப் பெருமானைத் தாங்கியபடி தோழி ஒருத்தி காட்சி தருகிறாள். அம்பிகை, தன் இடக் கரங்களுள் ஒன்றால் முருகப் பெருமானின் தலையைத் தொட்டபடி காட்சியளிக்கிறாள்.
இந்தக் கோயிலில் எரிசினக் கொற்றவை (ரௌத்திர துர்கை) சந்நிதி உள்ளது. இவளை ராகு காலத்தில் வழிபட்டால் திருமணத் தடை அகலும்.
கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம். கமலாலயம் என்று பெயர். இந்தக் குளக்கரையில் மாற்றுரைத்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். விருத்தாசலத்தில் இறைவனிடம் பொன் பெற்ற சுந்தரர் அதை அங்குள்ள மணிமுத்தா நதியில் இட்டு, திருவாரூர் வந்து கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டார் என்று ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது. பொன் தரமானவையா என்று மாற்றுரைத்துப் பார்த்ததால், இந்தப் பெயர். இங்கு தெப்பத் திருவிழா 3 நாட்கள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு மூன்று சுற்று வீதம் நடைபெறும் தெப்பத்தில் ஸ்ரீகல்யாண சுந்தரரராக பவனி வருவார் சிவபெருமான்!
துர்வாச முனிவருக்காக கமலாலயத் தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார் சிவபெருமான். அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ‘கங்காஹ் ரதம்’ என்றும், துர்வாசரின் தாபத்தைத் தீர்த்ததால், ‘தாபஹாரணீ’ என்றும் திருநாமம் வந்தது. இதில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்தத் தீர்த்தத்தின் தென்கரையில் துர்வாச மகரிஷி மடம் இருக்கிறது.
தீர்த்தக் கரையில் பர்ணசாலை அமைத்து, கமலநாயகி எனும் பெயரில் தவம் செய்தாள் அம்பிகை. இதனால், பங்குனி மாதம், பௌர்ணமி, சுவாதி நட்சத்திரத்தில் தியாகராஜர் - கமலநாயகி திருமணம் நடந்தது.
இங்கு உள்ள அழகான ஆழித் தேருக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் விஷமி ஒருவன் தீவைத்தான். தேரை புனரமைப்பு செய்யும் பணியில் முக்கியமானவர் எழுலூர் ஸ்ரீமான் சுப்பராய வாத்தியார். இவர் பின்னாளில் ‘ஸ்ரீநாராயண பிரம்மேந்திரர்’ எனப்பட்டார்.
இங்கு ஆனந்தீஸ்வரர், தட்சிணேஸ்வரர், அகத்தீஸ்வரர், சித்தீஸ்வரர், அல்வாதீஸ்வரர், பந்தேஸ்வரர், பிரம்மேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், பாதாளேஸ்வரர், பாண்டியநாதர், சேரநாதர் என்று சந்நிதிகள் நிறைய உண்டு!
எட்டு துர்கைகள், இங்கு அருள்பாலிக்கின்றனர். முதல் பிராகாரத்தில் மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்கையாக திகழ்கிறாள். தவிர, முதல் பிராகாரத்தில் மூன்றும், 2-ம் பிராகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்று. ஆக, எட்டு துர்கைகள். இங்கு சுமார் 15 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். இதை விசேஷமாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.
இங்குள்ள நவக்கிரக மூர்த்தியர் வக்கிரம் இன்றி ஒரே வரிசையில் தென் திசையில் உள்ள ஸ்ரீ தியாகராஜஸ்வாமி நோக்கி அமைந்துள்ளனர். நளனும் சனியும் வழிபட்ட தலம் இது.
வடக்கு கோபுரத்தின் எதிரில் வெளிப்புறச் சுவரை ஒட்டி சிவன் சந்நிதி உள்ளது. இவர் ஒட்டுத் தியாகேசர் என்பார்கள். விறன் மிண்ட நாயனார், ஆலயத்துக்குள் போக விடாமல் தடுத்ததால் மனம் வருந்தினார் சுந்தரர். அவரது வருத்தத்தைப் போக்க ஸ்ரீதியாகராஜ பெருமான் சுந்தரருக்குக் காட்சியளித்தார்.
இங்குள்ள விஸ்வகர்ம லிங்கத்துக்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் செங்கல் வைத்து அபிஷே கித்து வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும்.
2&ம் பிராகாரத்தில் ‘ஜுரஹரேஸ்வரர்’ சந்நிதி உள்ளது. நோயாளிகள் இவரை வேண்டி, ரசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், நோய்களிலிருந்து விடுபடலாம். இதே பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது அசலேஸ்வரர் சந்நிதி. அப்பரால் பாடப்பட்டது. சமற்காரன் என்ற அரசனின் கடும் தவத்துக்கு மகிழ்ந்து அவன் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனியில் எழுந்தருளியதால் அசலேசர் ஆனார். அசலேஸ்வரருடன் பஞ்சபூத லிங்கங்களாக இறைவன் காட்சி தருவது சிறப்பு.
நமிநந்தியடிகள், எண்ணெய்க்குப் பதிலாகக் குளத்து நீரைக் கொண்டு இறைவனுக்கு விளக்கு எரித்த திருத்தலம் இது. சங்கீத மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி அவதரித்த தலமும் இதுவே!
ஆரூரா... தியாகேசா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT