Published : 09 May 2022 12:10 PM
Last Updated : 09 May 2022 12:10 PM

சினிமா பாணியில் தேர்தல் போஸ்டர்


கேரளத்தில் வரும் 31-ம் தேதி திருக்காக்கரையில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.டி.தோமஸ் கடந்தாண்டு டிசம்பரில் புற்றுநோய்ப் பாதிப்பால் மரணமடைந்தார். அந்தத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் அந்தத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வென்ற பி.டி.தோமஸின் மனைவி உமா தோமஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மருத்துவர் ஜோ.ஜோசப் நிறுத்தப்பட்டுள்ளார். இருதய அறுவைச் சிகிச்சை நிபுணரான இவர், இந்திய அளவில் புகழ்பெற்றவர். மாற்று இருதய அறுவைச் சிகிச்சை மூலம் பலருக்கும் உயிர் கொடுத்துள்ளார் இவர். ஜோசப்பின் இந்தச் சிறப்புகளை வைத்து மார்க்சிஸ்ட் கட்சி கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரச்சார போஸ்டர்களை வடிவமைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் இந்த போஸ்டர்கள் பகிரப்பட்டுள்ளன. பிரபலமான சினிமா போஸ்டர்களை நினைவூட்டும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

‘டாக்டர் ஜோ ஜோசப்’ என்ற தலைப்பிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள சுவரொட்டியில் அவரது பணிகள் காட்டப்பட்டுள்ளது. அவர் ஹெலிகாப்டரில் சென்று மாற்று இருதயத்தை பெற்றுத் திரும்பி வெற்றிகரமாகச் செய்த அறுவைச் சிகிச்சைகளை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு போஸ்டரில் ‘உறுதி 100’ என சினிமா விளம்பரங்களில் 100வது நாள் சித்தரிக்கப்படுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணிக்கு இப்போது 99 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்தத் தொகுதியிலும் வெற்றி பெற்றுவிட்டால் 100 ஆகும். அது உறுதி என்பதைத் தெரிவிக்கும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர். இந்த புதிய போஸ்டர் வடிவமைப்பு இப்போது வைரல் ஆகிவருகிறது. ஆனால் வெற்றிக்கு வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படும் உமா தோமஸ் போஸ்டர்களில் இந்தப் புதுமை இல்லை. ‘பிடி தோமஸின் தொடர்ச்சி உண்டாக உமா தோமஸை வெற்றிபெறச் செய்யுங்கள்’ என ஒரு போஸ்டரில் உமா சிரித்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x