Last Updated : 28 Jul, 2020 07:06 PM

 

Published : 28 Jul 2020 07:06 PM
Last Updated : 28 Jul 2020 07:06 PM

கரோனா காலத்தில், கதைப்போம் வாங்க!- இன்ஸ்டாகிராம் வழியே பிரபலங்களோடு கலந்துரையாடும் இளைஞர்

இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் முக்கிய அலுவலகக் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வகைக் கூட்டங்களும் ஜூம் செயலி மூலம் இணைய வழிக் கூட்டங்களாகவே நடைபெறுவது தற்போது சகஜமாகிவிட்டது. அந்த வழியைப் பின்பற்றி, திருச்சியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாகக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

திருச்சி பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று வரும் 22 வயதே ஆன சந்தோஷ் தனது கல்லூரிக் காலங்களில் பலகுரல், வானொலித் தொகுப்பாளர், மேடைப்பேச்சு, நிகழ்ச்சித் தொகுப்பு எனக் கலக்கியவர். அந்த ஆர்வத்தில் புனித வளனார் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவுடன் அடுத்ததாகப் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் படிப்பில் சேர்ந்து விட்டார்.

இதழியல் ஆர்வம் இவரை வீட்டில் சும்மாயிருக்க விடவில்லை. கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலிருந்தபடியே புது முயற்சியாக டிஜிட்டல் ஊடகங்களைப் போல நாமும் ஒரு நிகழ்ச்சியை முன்னெடுப்போம் என்று யோசித்தார். இதுகுறித்துத் தனது தோழியிடம் ஆலோசித்தபோது இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு கலந்துரையாடல் நடத்தலாம் என்றும் அதற்கு, ‘கதைப்போம் வாங்க’ என்று தலைப்பு வைக்கலாம் என்றும் தோழி ஆலோசனை கூறியிருக்கிறார்.

இதையடுத்து உடனடியாக நிகழ்ச்சியைத் தொடங்கி விட்டார் சந்தோஷ். தினமும் மாலை 7 மணிக்கு இவரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடங்குகிறது. முதல் ஆளாக இவரிடம் கதைத்தவர் ’விக்ரம் வேதா’வின் எடிட்டர் ரிச்சர்டு கெவின். அவருடனான முதல் கலந்துரையாடல்தான் தனக்கு மிகுந்த ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தந்ததாகச் சொல்கிறார் சந்தோஷ்.

"அறிமுகமில்லாத சின்னப்பையன் என்று நினைக்காமல் கேட்டதும் உடனே சம்மதித்தார் கெவின். சுமார் ஐம்பது நிமிட நேரம் வெகு இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார். நிறையத் தன்னம்பிக்கை கொடுத்தார். அதனாலதான் அடுத்தடுத்துத் திரையுலகப் பிரபலங்கள், சின்னத்திரைக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களைக் கலந்துரையாடல் செய்ய முடிந்தது" என்கிறார் சந்தோஷ்.

ரிச்சர்டு கெவின் தவிர ‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, செய்தித் தொகுப்பாளர் சுஜாதா பாபு, சீரியல் கதாநாயகி ஸ்வேதா பண்டேகர், டிவி தொகுப்பாளர் விஜே ஆண்ட்ரூஸ் மற்றும் சின்னத்திரை நடிகர் சத்யா, காட்சி ஊடக நெறியாளர்கள் வேதவல்லி மற்றும் லாவண்யா ஶ்ரீராம், பத்திரிகையாளர் ஹேமா ராகேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களுடன் தனது கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறார் சந்தோஷ்.

இவரோடு கதைத்தவர்களும் தங்களது வாழ்க்கைப் பயணம், துறை சார்ந்த சுவாரசியமான அனுபவங்கள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து இவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் புதுமுயற்சி இவருக்குப் பல முனைகளில் இருந்து பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x