Published : 13 Jun 2020 01:12 PM
Last Updated : 13 Jun 2020 01:12 PM
கிருஷ்ணகிரியில் டிக் டாக்கில் குரங்கை வைத்து வீடியோ வெளியிட்டவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்த தாய் குரங்கிடம் இருந்து பிறந்து சில தினங்களே ஆன குரங்குக் குட்டி ஒன்றை எடுத்து வந்து வளர்த்துள்ளார். டீக்கடை வைத்திருக்கும் இவர், அந்த குரங்குக்குத் தேவையான உணவு அளித்து தன் பிள்ளையைப் போல் குளிக்க வைத்துச் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னையர் தினத்தை முன்னிட்டு குரங்கைக் குளிக்க வைத்து அதனைப் பராமரிக்கும் வீடியோ ஒன்றை தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிட்டார். இதனைக் கண்ட வனத்துறையினர், நேற்று (ஜூன் 12) வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சரவணகுமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அவர் வளர்த்து வந்த குரங்கைப் பிடித்துச் சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
பெற்ற பிள்ளையைப் போல் 4 ஆண்டுகளாக வளர்த்து வந்த குரங்கை வனத்துறையினர் பிரித்துச் சென்றதால் சரவணகுமார் மனம் உடைந்து போயிருந்தார். இந்த நிலையில், வனப்பகுதியில் விட்ட குரங்கு மீண்டும் சரவணகுமாரைத் தேடி அவரிடமே வந்துள்ளது. இதற்கு முன்பு வனத்துறையினர் 3 முறை சரவணகுமாரை எச்சரித்து குரங்கைப் பிரித்துச் சென்றுள்ளனர். ஆனாலும் அந்தக் குரங்கு மீண்டும் மீண்டும் சரவணகுமாரைத் தேடியே வருகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT