Published : 01 Feb 2020 12:57 PM
Last Updated : 01 Feb 2020 12:57 PM

சாலைகளில் ஹாரனைத் தெறிக்க விடுபவர்களா நீங்கள்? இந்த வீடியோ உங்களுக்குத்தான்!

இந்தியப் பெரு நகரங்களின் தலையாய பிரச்சினைகளில் ஒன்று வாகன நெரிசல். குறிப்பாக பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் வாகன ஓட்டிகள் சாலைகளில் காத்துக் கிடப்பது வழக்கமாகிவிட்டது.

அனைத்திலும் வேகத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்ட மக்கள், பெரும்பாலான நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பதில்லை. சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது கூட, வாகன ஓட்டிகள் ஹாரனை அடித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறது மும்பை காவல்துறை.

இது தொடர்பாக மும்பை காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், சாலையில் சிக்னலுக்காகக் காத்திருக்கும் பேருந்து, ஆட்டோ, கார், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைத்துத் தரப்பினரும் பாரபட்சமில்லாமல் ஹாரனை ஒலிக்கவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஹாரன் ஒலியால் சிவப்பு விளக்கு பச்சையாக மாறிவிடும் என்று வாகன ஓட்டிகள் நினைக்கிறார்கள் போல என்று கிண்டல் அடிக்கிறது வீடியோ. இந்த நிலை தொடர்வதைப் பார்த்த காவல்துறையினர், ஒலி மாசுபாட்டைக் குறைக்க நூதன தண்டனையை வழங்க முடிவெடுத்தனர்.

ஒருநாள் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள சிக்னல்களில் டெசிபல் மீட்டரைப் பொருத்தினர். ஹாரன் சத்தம் கட்டுக்கடங்காமல் போய் 85 டெசிபலைத் தாண்டும்போது, சிக்னல் மீண்டும் 90 விநாடிகளில் இருந்து இயங்கத் தொடங்கும்.

பச்சை விளக்கு எரிய 4, 3, 2, 1 என சில விநாடிகளே இருந்தாலும் ஹாரன் ஒலி 85 டெசிபலைத் தாண்டினால், சிவப்பு விளக்கு தானாகவே 90 விநாடிகளுக்குச் சென்றுவிடும். இதனால் வாகன ஓட்டிகள் மீண்டும் ஒன்றரை நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

நமக்குச் சாதாரணமாக இருக்கும் ஹாரன் ஒலி, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், மாணவர்களுக்கு எவ்வளவு இடையூறை ஏற்படுத்தும் என்பதை அனைத்து வாகன ஓட்டிகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் எத்தனை முறை ஹாரன் அடிக்கிறீர்களோ, அத்தனை நேரம் காத்திருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது இந்த வீடியோ.

வெளியான ஒரே நாளில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஹலோ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x