Published : 01 Nov 2019 03:05 PM
Last Updated : 01 Nov 2019 03:05 PM
நம் அனைவரையும்அண்மையில், வயது வித்தியாசமின்றி உலுக்கியெடுத்த சம்பவம் 2 வயதுக் குழந்தை சுஜித்தின் துயர மரணம். சுஜித்துக்காக ஒற்றைத் துளி கண்ணீரையாவது சிந்தியவர்கள் அநேகம். இந்த ஆண்டு தீபாவளியை என்னால் ஒழுங்காகவே கொண்டாட முடியவில்லை என்று ஏராளமானோர் சொன்னதைக் கேட்க முடிந்தது.
நாடு முழுவதும் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் துயரம் வாடிக்கையாகிவிட்ட நிலையில், சுஜித் நிகழ்வுக்கு அதீத கவனம் கிடைத்தது எப்படி? அதன் பாதிப்புகள் என்னென்ன?
உளவியல் காரணங்களை விளக்கமாகப் பகிர்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.
''இந்த சம்பவத்தை 3 விதமான மனிதர்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். சுஜித் மீட்பு நடவடிக்கைகளை நான் தொடர்ச்சியாகப் பின்பற்றவில்லை. இடையிடையே என்ன நடக்கிறது என்று மட்டும் தெரிந்துகொண்டேன். மன பாதிப்பை அடையவில்லை. என்னுடைய மருத்துவ நண்பர் ஒருவர் தொடர்ந்து சுஜித் செய்திகளைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனாலும் அவர் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. என்னுடைய தோழி ஒருவர் மிகவும் சென்சிட்டிவானவர். நேரலைகளைத் தொடர்ந்து பார்த்த அவர் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். எந்தவொரு செய்தியின் தாக்கமும் தனிநபர்களைப் பொறுத்து மாறும்.
மூளை வழியாகவும், ஆளுமைத்தன்மை மூலமாகவும் இதை அணுகலாம். மூளை வழியாக 3 விதங்களில் அதை அணுகுகிறோம். 'ஐயோ பாவம்!' என்ற இரக்க மனநிலை, 'என்ன நடக்கிறது?' என்னும் ஆர்வம், 'நமக்கு இது நடந்துவிடக் கூடாது' என்னும் எச்சரிக்கை மனநிலை. இந்த எச்சரிக்கை மனநிலை வெளிப்படையாகத் தெரியாது. ஆழ்மனதில் இருக்கும்.
ஆளுமைத் தன்மை என்னும்போது மன உறுதி கொண்ட ஒருவர் திரும்பத் திரும்ப அதையே பார்க்கும்போது, மூளையில் நம்மை அறியாமலேயே அவை பதிந்து பாதிப்பை ஏற்படுத்தும். குற்ற உணர்ச்சியை உண்டாக்கும். சிலருக்கு துயர நிகழ்வுக்குப் பிறகான மன அழுத்த நோய் அதாவது, Post-traumatic stress disorder எனப்படும் நாட்பட்ட அதிர்ச்சியும் ஏற்பட வாய்ப்புண்டு. அவர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவர். சுனாமியால் நீண்ட நாட்களுக்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இங்கு நினைவுகூரலாம்.
சுஜித் இறப்புக்குப் பிறகும்கூட 3 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் சுஜித் நிகழ்வுக்கு மட்டும் இத்தனை கவனம் கிடைத்தது எப்படி?
முதல் காரணம் தொலைக்காட்சி ஊடகங்கள்; அவற்றின் நேரலைகள். அதைவிட முக்கியமானவை சமூக வலைதளங்கள். உண்மையான செய்திகள், உணர்வுபூர்வமான நிகழ்வுகள், போலி செய்திகள் எனத் தொடர்ந்து சுஜித் விவகாரம் பேசுபொருளாக மாறியதுதான் காரணம். சிலர் தமது இருப்பைக் காட்டவும் சுஜித் குறித்த தகவல்களைப் பகிர்ந்தனர். வேறு சில பிரச்சினைகளைத் திசைதிருப்பவே சுஜித் விவகாரம் பெரிதாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இதுமாதிரியான சம்பவங்களால் யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?
புரிந்துகொள்ளக் கூடிய வயதில் உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக சிறுவர்கள். சிறுமிகள் உணர்வு பூர்வமாக பயத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆனால், சிறுவர்கள் வெளிப்படையாக எதையும் பேசுவதில்லை, உள் மனதில் வைத்துக் கொள்கின்றனர். இது தவறானது.
அதேபோல மனதளவில் பலவீனமானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். வேலை, அலுவலகம், தொழில் என்று கவனத்தைத் திருப்பாமல், அதே நிகழ்வு சார்ந்து பார்க்கவோ, படிக்கவோ செய்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். முந்தைய நாள் தொற்றுக்கு அடுத்த நாளே ஏற்படும் காய்ச்சலைப் போன்றதல்ல உளவியல். மனதின் மூலையில் குவிந்து, ஒருநாள் பீறிட்டுக் கிளம்பும். அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும். அவர்களிடம் மனம்விட்டுப் பேசவேண்டும்.
ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித்தின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பப்படுகிறதே?
சுஜித்தின் மனநிலை அதீத பயத்தாலும் அதிர்ச்சியாலும் சூழப்பட்டிருக்கலாம். குழப்பமான மனநிலையில் அம்மா எங்கே? என்று தேடியிருக்கலாம். ஆனால் இதுகுறித்தும் பெற்றோரின் மனநிலை குறித்தும் கேட்பது சரியா என்று யோசிக்க வேண்டும். சிலர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலும் குழப்பத்திலும் இதைக் கேட்கின்றனர். ஆனால் எந்த சூழலில், என்ன மாதிரியான பார்வையில் இதைக் கேட்கிறோம் என்பது முக்கியம்.
இதை எப்படிக் கையாள வேண்டும்?
எந்த ஒரு சம்பவத்தையும் நமக்கு நடந்தது போலச் சித்தரிப்பது தவறு. அதை உணர்வுபூர்வமாக மட்டுமே பார்த்து வேதனைப்படக் கூடாது. தர்க்க ரீதியாகவும் சிந்திக்க வேண்டும். அத்தகைய துயர சம்பவங்களில் இருந்து என்ன கற்க முடியும் என்று பார்க்கவேண்டும்.
மனநல ஆலோசகர் வந்தனா
முன்னெச்சரிக்கையோடு அதை அணுக வேண்டும். பேரிடர் மேலாண்மை போல அதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கலாம். நடந்த சம்பவத்துக்காக வருத்தப்படலாம். ஆனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது. அதில் இருந்து வெளியே வரவேண்டும்.
துயரம் சார்ந்த செய்திகளில் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். மற்றவர்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், தீர்வை நோக்கி நகர வேண்டும். சோக சம்பவம் நடந்துவிட்டது. அதில் இருந்து சமூகத்துக்கு நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசியுங்கள்'' என்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT