Published : 05 Sep 2019 02:07 PM
Last Updated : 05 Sep 2019 02:07 PM
கொல்கத்தா,
இணையத்தில் வைரல் டிக்டாக் வீடியோக்களுக்கு எப்போதுமே தட்டுப்பாடு இல்லை. ஆனால், இது வேற லெவால் வைரல் டிக்டாக் வீடியோ என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில், ஒரு சிறுமியும் சிறுவனும் பள்ளிச் சீருடையில் சாலையில் அனாசயமாக குட்டிக்கரணம் அடிக்கும் அந்த குறிப்பிட்ட வீடியோ மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட் வீராங்கனை நாடியா கோமனேசி ஆகியோரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோ வைரலான நிலையில், நாடியா கொமேனேசி தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோவைப் பகிர்ந்து "இது அற்புதமானது" எனப் பதிவிட்டார்.
அதனை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "நாடியா கோமனேசி இந்த வீடியோவில் உள்ள குழந்தைகளை அங்கீகரித்துப் பாராட்டியுள்ளதில் எனக்கு மகிழ்ச்சி. 1976-ல் மாண்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 10 புள்ளிகள் பெற்ற முதல் ஜிம்னாஸ்ட் என்ற சாதனையைப் படைத்தவர் நாடியா. அதன்பின்னர் 6 முறை அந்த சாதனையை நிகழ்த்தினார். அவருடைய பாராட்டு மிகவும் சிறப்பானது. அந்தக் குழந்தைகள் சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லியுள்ளேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
நேற்று மீண்டும் தனது ட்விட்டரில், "விளையாட்டு ஆணையத்திலிருந்து யாரேனும் ஒருவர் அந்தக் குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் வேலையில் அமர்த்தப்படுவார். அந்தக் குழந்தைகள் விரும்பினால் அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறலாம்" எனப் பதிவிட்டார்.
இந்நிலையில் அந்தக் குழந்தைகளின் அடையாளம் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த முகமது அஜாதுதீன் மற்றும் ஜாஷிகா கான் தான் அந்த சிறுவன், சிறுமியின் பெயர். இவர்கள் இருவரும் நடனம் கற்று வருகின்றனர்.
தங்களின் வீடியோ வைரலானது குறித்து ஜஷிகா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், இது எனக்குத் தெரியவந்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் மகிழ்ந்தனர். இதை நான் கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருகிறேன். நாடியா போன்று எதிர்காலத்தில் நானும் ஒரு ஜிம்னாஸ்டாக வரவேண்டும் என்றே விரும்புகிறேன்" என்றார்.
அஜாதுதீன் கூறும்போது, "எனக்கு இவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்த எனது நடன ஆசிரியரைப் பெருமைப்படுத்த நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் ஜிம்னாஸ்டிக் செய்வேன். ஆனால், எந்தக் காலத்திலும் நடனத்தை கைவிடமாட்டேன்" என்றார்.
இவர்களின் நடனப் பயிற்சியாளர் சேகர் ராவ் அளித்த பேட்டியில், "நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த நடன மையத்தை நடத்தி வருகிறேன். நடனம்தான் என் மூச்சு. இங்கே பயிலும் சிறு குழந்தைகளுக்கு இன்னும் வசதிகள் செய்துதர விரும்புகிறேன்.
அலி, லவ்லி (இது அஜாதுதீன், ஜஷிகாவின் செல்லப் பெயர்கள்) பற்றி அமைச்சர் கிரணின் ட்வீட்டைப் பார்த்தபோது மகிழ்ச்சியில் அதிர்ந்துபோனேன். பின்னர் நாடியாவின் ட்வீட்டைப் பார்த்தவுடன் இந்தக் குழந்தைகள் அவரைப் போலவே ஜிம்னாஸ்டிக்ஸில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு துவக்கமே. அவர்கள் இருவரும் ஜிம்னாஸ்டிக்ஸில் சாதிக்க இன்னும் நிறைய பயிற்சி தேவை. விளையாட்டுத் துறை அமைச்சர் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT