Published : 12 Aug 2019 03:01 PM
Last Updated : 12 Aug 2019 03:01 PM
கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பரவலாக உதவி வருவது பாராட்டைப் பெற்றுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலப்புரம், வயநாடு, கொச்சி, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 24 மணிநேர நிலவரப்படி (நேற்று காலை 8 மணிவரை) கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் அதிகபட்சமாக 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் பலர் தங்கள் மன்றங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் செய்தியாளர் ஒருவர், நிவாரணப் பொருட்கள் அரசாங்கத்திடமிருந்து வந்ததா?...என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பெண் ஒருவர், ''அரசாங்கத்தில் கொஞ்சம் பொருட்கள் அனுப்பினார்கள். அதன் பிறகு விஜய் ரசிகர்கள்தான் இங்கு வந்து உதவினார்கள். வேறு யாரும் வரவில்லை'' என்று பதிலளித்தார்.
கேரள வெள்ள நிவாரணத்துக்கு உதவும் விஜய் ரசிகர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
Nothing Personal Just Service ♥️
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT