Published : 02 Aug 2019 12:54 PM
Last Updated : 02 Aug 2019 12:54 PM

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த மூலகர்த்தா பிங்கிலி வெங்கய்யா பிறந்த தினம்: அறியாத 10 தகவல்கள்

காந்தியின் ஆலோசனைப்படி, இந்திய தேசிய கொடியாம் மூவர்ணக்  கொடியை முதலில் வடிவமைத்த ஆந்திராவைச் சேந்த பிங்கலி வெங்கய்யா பிறந்த தினம் இன்று.

நாட்டின் தேசியக்கொடியை வடிவமைத்த பெருமைக்குரிய அவரைப்பற்றிய அரிய தகவல்கள்:

* இந்தியாவின் தேச தந்தையான  காந்தியின் ஆலோசனையை  ஏற்று, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்ததுதான் இந்தியா தேசியக் கொடி.

 * ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1878-ம் ஆண்டு  பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் வெங்கய்யா.  இந்திய தேசிய ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் விடுத்த அழைப்பை ஏற்று, 19-வது வயதில் ராணுவப் பயிற்சி பெற்று, ஆப்பிரிக்காவில் நடந்த போயர் யுத்தத்திலும் (1899-1902) பங்கெடுத்துக் கொண்டார் வெங்கய்யா.

* தனது இளமை பருவத்தில்  நேதாஜியை பின்பற்றிய வெங்கய்யா பின்னாளில் தென் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்தபோது காந்தியைச் சந்தித்து, பின்னர் காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 

* இந்தியா திரும்பியதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தலைமறைவு இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டார். இளமைக் காலத்திலிருந்து வேளாண்மையின் மீதிருந்த ஆர்வமும்  வெங்கய்யாவுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக  பருத்திச் சாகுபடியில் தீவிரக் கவனம் செலுத்தினார். வேளாண் துறையில் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். 

*  கல்வியின் மீதிருந்த ஆர்வத்தால், லாகூருக்குச் சென்று ஆங்கிலோ-வேதிக் பள்ளியில் சேர்ந்து சம்ஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

* அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட கம்போடிய பருத்தி விதைகளையும் இந்தியப் பருத்தி விதைகளையும் கலப்புண்டாக்கி, புதிய பருத்தி ரகங்களை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய தரமான பருத்தி விதைகளைப் பற்றி அறிந்துகொண்ட ‘ராயல் அக்ரிகல்சுரல் சொசைட்டி ஆஃப் லண்டன்’ அவரைக் கௌரவ உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டு பெருமைப்படுத்தியது. இதையடுத்து வெங்கய்யாவுக்கு பட்டி வெங்கய்யா என்று இன்னொரு அடைமொழியும் சூட்டப்பட்டது.

* 1916-ல் அவர், இந்தியாவுக்கு ஒரு தேசியக் கொடி (எ நேஷனல் ப்ளாக் ஃபார் இந்தியா) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். தேசியக் கொடிக்கான 13 வடிவமைப்புகளைக் கொண்டிருந்தது அந்தப் புத்தகம். 1918 தொடங்கி 1921 வரைக்கும் காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்திலும் இந்தியாவுக்கு ஒரு தனிக் கொடி வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோளை விடுத்து வந்தார். அப்போது ஆந்திர தேசியக் கல்லூரியில்  விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் வெங்கய்யா.

* 1921-ல் விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் நடந்தபோது, வெங்கய்யா மீண்டும் ஒருமுறை காந்தியைச் சந்தித்தார். அப்போது தேசியக் கொடி பற்றிய தனது புத்தகத்தையும் தான் வடிவமைத்த கொடியின் வடிவமைப்புகளையும் காந்தியிடம் காட்டினார்.

* எல்லா காலத்திலும், அனைத்துத் தலைமுறையையும் எழுச்சியுறச் செய்யும் வகையில் ஒரு புதிய தேசியக் கொடியை  உருவாக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் காந்தி. அதையடுத்து ஒரே இரவில் வெங்கய்யா உருவாக்கிக் கொடுத்த தேசியக் கொடியை காங்கிரஸ் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி  காந்தியிடமிருந்து ஒப்புதலையும் பெற்றார்

* வெங்கய்யா. 1947-லிருந்து தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டார் வெங்கய்யா. தான் இறந்த பிறகு தன்னைத் தேசியக் கொடியால் மூட வேண்டும் என்று விரும்பினார் வெங்கய்யா. அந்த ஆசை நிறைவேறியது. 1963-ல் அவர் காலமானபோது, அவர் வடிவமைத்த தேசியக் கொடி அவர் மீது போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

* பிங்கிலி வெங்கய்யா வடிவமைத்த கொடியில், வெண்மை நிறத்தின் நடுவே முதலில் கைராட்டை சின்னம் தான் இருந்தது. பின்னர், அது அசோக சக்கரமாக மாற்றப்பட்டது. இந்த இறுதி வடிவமைப்பைச் செய்தவர் பக்ருதின் தியாப்ஜி. இந்த வடிவமைப்புதான் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு மூலகர்த்தாவான வெங்கய்யாவின் பிறந்த தினம் இன்று.

* பிங்கலி வெங்கய்யா, பக்ருதின் தியாப்ஜி வடிவமைத்த மூவர்ண கொடிதான் தற்போது இந்தியாவின் தேசியக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x