Published : 16 Oct 2017 02:36 PM
Last Updated : 16 Oct 2017 02:36 PM
2006 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22-ம் நாள். இதுவும் ஓர் அதிகாலை நேரம். சிறுமுகை கூத்தாமண்டி பிரிவில் ஓடும் பவானி ஆற்றில் நான்கு பேர் பரிசலில் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆற்றில் ஆழமான பகுதிக்கு போய் அவர்கள் வீசிய வலைக்கு மீன்கள் கிடைக்கவில்லை. ஒரு வழுக்கைத் தலை ஆசாமியின் பிணம் கிடைத்திருக்கிறது. வலையை வீசிய மீனவர்கள் சற்றே அதிர்ச்சியாகி, வலையிலிருந்து பிணத்தைப் பிரித்துவிட்டு 'சகுனம் சரியில்லை' என வந்த வழியே திரும்பியிருக்கின்றனர்.
வழியில் பார்த்தால் அங்கேயும் இரண்டு ஆண் பிணங்கள் மிதந்திருக்கிறது. அதற்கு அப்பால் சில பரிசல்கள் ஆற்றில் சென்று கொண்டிருக்க, அவர்களை இவர்கள் அழைக்க, அவர்களோ, அங்கே இரண்டு பெண் பிணங்கள் மிதப்பதாக அலறியிருக்கிறார்கள். மழையில்லை. வெள்ளம் இல்லை. பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மலைமேலிருந்து பவானி ஆறு தவழ்ந்து வரும் வழியில் சுழியில் சிக்கியோ, குடங்குகளில் சிக்கியோ யாரும் இறந்து காணாமல் போனதாகவும் தகவல் இல்லை. ஆனால் ஒரே நாள் காலைப் பொழுதில் இப்படி அடுத்தடுத்து நதியெங்கும் பிணங்கள்.
அதிர்ந்து போன மீனவர்கள் மீன் பிடிக்காமலே கரைக்குத் திரும்பினர். ஊருக்குள் சென்று இந்த பரிசல்காரர்கள் தான் கண்ட காட்சிகளை சொல்ல அங்கிருந்த மற்றொரு பரிசல்காரர் பவானியின் வேறொரு கரையில் ஒரு மர்மப் பிணம் ஒதுங்கியிருந்ததாக, அதை நடு ஆற்றில் நகர்த்தி விட்டே வந்ததாக மேலும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து மீனவர்கள் போலீஸிற்கு தகவல் தர, அவர்கள் சாவகாசமாக 4 நாள் கழித்து வந்து பரிசல்காரர்களையே துணைக்கு அழைத்து பிணங்களைத் தேடினார்கள். அவர்களுக்கு அப்போது கிடைத்தது 2 பிணங்கள். அதை மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரியின் மார்ச்சுவரிக்கு அனுப்பி விட்டு அமைதி காத்தனர்.
விஸ்கோஸ் ஆலையின் நேர் பின்புறம்தான் பவானி ஆறு ஓடுகிறது. இந்த பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ளவர்களில் பெரும்பாலனோருக்கு மீன்பிடிக்கும் தொழில்தான். விஸ்கோஸ் தொடங்கப்பட்டதற்கு முந்தைய காலத்திலிருந்தே இங்கே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்கள் பவானியில் அனாமத்தாக பிணங்கள் மிதப்பதை காண்பதென்பது அபூர்வத்திலும் அபூர்வம்.
அதிலும் பில்லூர், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயில் பகுதிகளில் மழை வெள்ளக் காலங்களில், அணை திறந்துவிடப்படும் சமயங்களில் யாராவது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டால் அவர்கள் உறவுக்காரர்கள் உடலை இங்கே வந்து தேடுவார்கள். அவர்களுக்கு இந்த மீனவர்கள் உதவி புரிவார்கள்.
ஆனால் விஸ்கோஸ் மூடப்பட்ட பின்னரோ, கதையே மாறியது. யாரும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டவர்கள் என ஓடி வராமலே ஆற்றில் பிணங்களாக மிதந்தது. மூடிக் கிடக்கும் விஸ்கோஸில் புகுந்து கொள்ளையடிப்பதும், கொள்ளையர்களுக்குள் சண்டை மூளுவதும், அதில் ஒன்றுக்கு பத்து குழுக்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்து மோதிக் கொள்வதும், ஒருவர் மீது ஒருவர் வெடிகளை வீசிக் கொள்வதும், அகால நேரங்களில் ஆலைக்குள் வெடி, வெடிக்கும் சப்தம் கேட்பதும், விடிந்து பார்த்தால் ஆற்றில் பிணங்கள் மிதப்பதும் வருடக்கணக்கில் சகஜமாகிப் போனது.
ஒரு பக்கம் விஸ்கோஸ் ஆலையை தொட்டமாதிரி உள்ள புதர்க்காடுகளில் காட்டு யானைகள் உள் நுழைய, தங்களால் கொல்லப்பட்டவர்களை யானை மிதித்து கொன்றதாக செட்டப் செய்தனர்; இன்னொரு பக்கம் ஆற்றில் தூக்கி போட்டு மீன்களுக்கும், கழுகுகளுக்கும் இரையாக்கினர் கொள்ளையர்கள். இந்த கொள்ளையர்களுக்கும், உள்ளூர் போலீஸிற்கும் உள்ள நெருக்கத்தினால் இந்த கொலைகள் பல வெளியில் வராமலே போயின என்பது அப்போது உளவுப்பிரிவு போலீஸாரின் கூற்றாக இருந்தது.
'ஆலைக்குள் திருடும்போது அடிச்சுகிட்டு சாகறது மட்டுமல்ல; திருடும் போது விபத்திலும் நிறைய பேர் சாகாறாங்க. செத்தவனை பரிசலில் தூக்கிட்டு போறதுக்கு பதில் இரண்டு மோட்டார்களை தூக்கிப் போனால் காசு பார்க்கலாம் என்பதாலேயே கொள்ளையர்கள் ஆற்றில் பிணத்தை வீசி விடுகிறார்கள். பத்து நாள் முன்னாடி தொழிற்சாலை கோபுர உச்சியில் உள்ள காப்பர் இடிதாங்கியை எடுக்கப்போய் ஒருத்தன் கீழே விழுந்து இறந்து போயிருக்கான். அவன் உடலைக்கூட ஆற்றில் தூக்கிப் போட்டிருக்காங்க. தவிர திருடுவதில், பங்குபிரிப்பதில் வரும் கோஷ்டி சண்டையில் ஆட்களைக் கொன்று, அவனை கல்லைக் கட்டி ஆற்றில் மூழ்கடிச்சிருக்காங்க. இந்த ஒரு வருஷத்தில் மட்டும் நாற்பது பேரின் உடல்களாவது ஆற்றுக்குள் போடப்பட்டிருக்கும், சாகிறவங்க, கொள்ளைக்காரங்க என்பதால் யாரும், 'காணவில்லை' புகாரும் கொடுப்பதில்லை. இது உள்ளூர் போலீஸிற்கு தெரியும். அதை வழக்குப் பதிவு செய்து விசாரித்தால் பல போலீஸ் அதிகாரிகளின் வண்டவாளம் வெளி வந்துவிடும். அதனால் அவங்க யாரும் இதைக் கண்டுக்கறதே இல்லை!'
இந்த செய்தி சேகரிப்புக்காக இங்கே சென்றிருந்த சமயம் பேசிய உளவுப் பிரிவு போலீஸின் வாக்கு மூலம் இது. அப்போது பவானி ஆறு முழுக்க ஒரே அருவெறுப்பான நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.
அதில் பிணங்கள் மட்டுமல்ல, விஸ்கோஸில் திருடப்பட்ட பல பொருட்களும் டன் கணக்கில் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் நமக்கு துணை வந்த பரிசல்காரர். விஸ்கோஸ் ஆலையின் நேர் பின்புறம் பவானி ஆற்றில் மூன்று கிலோமீட்டர் கடந்தால் மொக்கை மேடு, பேய் மொக்கை மேடு வனப்பகுதிகள் வரும். இதைத்தான் அப்போது கொள்ளையர்கள் தங்கள் நிரந்தர வாசஸ்தலமாகவே ஆக்கியிருந்தனர். இங்கே பழங்கால மன்னர்களின் பரிவாரங்கள் போல டெண்ட் கொட்டகை அமைத்து தங்கியிருந்தார்கள். கொள்ளையர்களுக்கு சமைத்துப் போட கூடவே பெண்களும் இருந்தனர்.
இரவானதும் யானைகளை விரட்டும் சியர்ச் லைட்டுகள் போன்ற டார்ச் லைட்டுகளுடன் பரிசல்களில் ஏறிவிடுவது வாடிக்கையாக இருந்தது. தவிர இதே பவானி நதியின் இன்னொரு கரையோரத்தில் இருந்த கரட்டுமேடு சமூக விரோதிகள் பலர் இவர்களுடன் கைகோர்த்தனர். ஏற்கெனவே கள்ளச்சாராயம் காய்ச்சுதல், பன்றிக்கு வைக்கப்படும் அவுட்டுக் காய் வெடி தயாரிப்பில் பெயர் போன அவர்கள் இந்த கும்பலுடன் கைகோர்த்தனர். அவர்களும் கொள்ளை வேட்டைக்கு அணி, அணியாக இரவுகளில் பரிசலில் விஸ்கோஸ் நோக்கி புறப்பட்டார்கள்.
அப்போது பார்த்தால் பவானி நதியில் பரிசல் வரும் இடமெல்லாம் டார்ச் லைட்டுகளின் வெளிச்சம் ஒளிரும். முன்னிரவிலேயே ஆலைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடுபவர்கள், கொள்ளையடித்த பொருள்கள் பரிசலில் ஆற்றைக் கடந்து தயார் நிலையில் உள்ள லாரிகளில் ஏற்றப்படும். இதில் தூக்க முடியாத பொருட்கள் கிடைத்தால் அப்படியே எடுத்து கல்லைக்கட்டி ஆற்றுக்குள் போட்டு விடுவதும் உண்டு. பிறகு சாவகாசமாக அந்தப் பொருளை எடுப்பார்கள். இப்படி திருட்டுப் பொருட்களை வாங்கவே மேட்டுப்பாளையம் முதல் சிறுமுகை வரை பழைய பொருட்கள் விலைக்கு எடுக்கும் வியாபாரிகள் நிறைய இருந்தார்கள் (இந்த திருட்டுப் பொருட்களை வாங்கிய வியாபாரிகள் முதல் திருடர்கள் வரை போலீஸிற்கு அள்ளி அள்ளி மாமூல் கொடுத்தனர். அதில் ஒரு டிஎஸ்பி நிலை அதிகாரி மட்டும் கோடி,கோடியாய் சம்பாதித்தார். ஐஜி வரை அந்த புகார் போய் விஜிலென்ஸ் வந்து அவர் வங்கிக் கணக்கில் ரூபாய் ஒரு கோடி ஒரே வருடத்தில் சேர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் தனி வரலாறு)
ஆற்றுக்குள் போடப்பட்ட பொருட்கள் காலங்கடந்து எடுக்கப்படும்போது யாருக்கானது என்ற சண்டை கோஷ்டிகளுக்குள் பரிணமித்தது. குத்து வெட்டுகளும் ஏற்பட்டது. வலுத்தவன் எதிர்த்தவனை கொன்றான். பிணத்தை ஆற்றில் போட்டான். தன் வசதிக்கேற்ப காடுகளிலும் எறிந்தான். ஆறும், காட்டு யானைகளும் இந்த கொலைப் பழிகளை சுமந்தது. அது மட்டுமல்ல, இவர்கள் அடித்த கூத்துகளால் நதி நீர் பாழானது. அதைக்குடித்த வனவிலங்குகள் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன. அதே சமயம் அவை ஊருக்குள்ளும் வர ஆரம்பித்தது. ஒன்றல்ல, இரண்டல்ல சிறுமுகை தொடங்கி மேட்டுப்பாளையம் வரை உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகளிலேயே யானைகள் உலா வர ஆரம்பித்தன.
மேட்டுப்பாளையத்திலிருந்து வடக்கே உள்ளது இந்த சிறுமுகை கிராமம். இதற்கு வடமேற்கே உள்ளது லிங்காபுரம், ஊழியூர் கிராமங்கள். அதே மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நெல்லித்துறை. இந்த ஊர்களில் எல்லாம் வீரப்பனும், அவன் கூட்டாளிகளும் வாழ்ந்துள்ளார்கள். சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தியதை விட, யானைகள் வேட்டையாடி தந்தங்கள் கடத்தியதுதான் கணக்கில் இல்லாதது. இந்த சிறுமுகை கடந்தால் எட்டுவது சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதிகள். அங்கே வீரப்பன் நடத்திய அட்டூழியங்கள், யானைகள் பட்ட பாடு உலகம் அறியும். வீரப்பனை விடவும் பயங்கரவாதியாக விளங்கிய ஐஎஸ்ஐ பயிற்சி பெற்ற இமாம் அலி நெல்லித்துறையில்தான் வருடக்கணக்கில் பதுங்கியிருந்தார். பிறகு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு தப்பிச்சென்றவன்தான் பெங்களூருவில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டான்.
அப்படிப்பட்ட தீவிரவாதி, பயங்கரவாதிகளும் அவர்களின் கூட்டாளிகளும் இந்த காடுகளில் உலா வந்த காலகட்டங்களில் கூட காட்டு யானைகள் ஊருக்குள் வந்ததாக சரித்திரம் இல்லை. இவ்வளவு ஏன்? அவ்வளவு பெரிய சூழல் கேட்டை ஏற்படுத்தி நாட்டில் பெரிய அளவில் வழக்கை சந்தித்த விஸ்கோஸ் தொழிற்சாலை இயங்கின போது கூட காட்டுயானைகள் சாலைகளில் உலா வந்ததில்லை. இந்த விஸ்கோஸ் மூடப்பட்டு, அதற்குள் கொள்ளையர்கள் நுழைந்த பிறகுதான் இந்த துன்பமே ஆரம்பமாகியது என்பதை இன்றைக்கும் இங்குள்ள மக்கள் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். எப்படி?
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT