Published : 06 Sep 2017 02:09 PM
Last Updated : 06 Sep 2017 02:09 PM

யானைகளின் வருகை 28: 10 லட்சம் பேருடன் வர்ண ஜாலம் காட்டிய காடு

அந்த மையத்து பொறுப்பாளரை பேட்டி கண்டு நான் அழைத்து வந்தவருடன் அதே பைக்கில் திரும்பும் போது மணி இரவு எட்டுக்கு மேலாகி விட்டது. அப்போது அநாயசமாக காடுகளுக்குள் நீளும் ஒற்றையடிப்பாதையில் வண்டியை ஓட்டினார் அந்த மனிதர். மாலை ஐந்தாறு மணிக்கு போகும்போதே கருங்குன்றுகளாய் மரங்களுக்கு பின்னே நின்ற காட்டு யானைகள் இப்போது சாலைக்கு அல்லவா வந்து நிற்கும்? நல்லவேளை. அப்படி எந்த காட்டு யானைகளும் குறுக்கே வந்து நிற்கவில்லை. என்றாலும் வழியெங்கும் திக், திக் பயம்தான்.

'எப்படித்தான் பயமில்லாமல் வண்டி ஓட்டுகிறீர்கள்?' என்று பைக்கை ஓட்டியவரிடம் கேட்டபோது, 'அதுதாண்ணா நான் கற்றுக் கொண்ட யோகா கலையின் அற்புதம்!' என்று ஆரம்பித்து விநோத காரணமும் கூறினார். ''காட்டு யானைகள் மட்டுமல்ல, யோகா கலை மிருகங்களையும் கட்டுப்படுத்தும். அவற்றுடன் சிநேகிக்கவும் வைக்கும். நம்முள் இருக்கும் மிருக குணத்தை வெளியிலும் தள்ளும். தூர நிற்கும் மிருகங்களை நமக்கு உள்ளூர காட்டிக் கொடுக்கும். நம்மை பார்த்தாலும் கூட எதிரியில்லை என விலகிச் செல்லும். அந்த அளவுக்கான சூட்சும சக்திகள் நம் அகத்திற்குள்ளேயே இருக்கின்றன. அதை தூண்டி விடுவதுதான் யோக சக்தி. நீங்க ஒரு பதிமூன்று நாள் கிளாஸ் அட்டெண்ட் பண்ணி பாருங்க. அந்த அற்புதம் புரியும்!' என்றெல்லாம் எது, எதுவோ பேசினார்.

அதையேதான் நான் சிறப்பு பேட்டி கண்ட சர்ச்சைமிகு யோக குருவும் சொன்னார். நாங்கள் காடுகளை காப்பாற்றுகிறோம். வனவிலங்குகளை சிநேகிக்கிறோம். இப்போது மனிதனாக பிறந்திருக்கும் நீ முற்பிறவில் ஓநாயாக, நாயாக, நரியாக, கரடியாக, சிறுத்தையாக எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அதனுடைய அபிலாஷைகள் மிச்சம் சொச்சம் இப்போது மனிதப் பிறவி எடுத்த உனக்குள்ளும் இருக்கும். அந்த மிருகத்தைத்தான் இங்கே வருபவர்களிடமிருந்து வெளியேற்றுகிறேன். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் நாயை, நரியை, கரடியை வெளியேற்றவே நாய் போல குரைக்கிறார்கள். நரி போல ஊளையிடுகிறார்கள். கரடி போல் சத்தம் எழுப்புகிறார்கள். அந்த விலங்குகளை வெளியேற்றிய பின்பு பேரமைதி அடைகிறார்கள். மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

அந்த மகிழ்ச்சியை இந்த காட்டுக்குள் அனுபவிக்கிறார்கள். மனிதனுக்குள் இருக்கும் மிருகங்களையே வெளியேற்றும் நான், இங்கே காட்டுக்குள் இருக்கும் விலங்குகளை இங்கிருந்து வெளியேற்றுவோமா? இங்கே வனவிலங்குகள் வேட்டையாளர்கள் சிலர் இருக்கின்றனர். அதில் ஒரு நிலச்சுவான்தாரும் உள்ளார். நாங்கள் இங்கே இம்மையம் அமைத்த பிறகு அவர்கள் நடத்தும் மரக் கடத்தல், வனவிலங்குகள் வேட்டை பற்றியெல்லாம் டெல்லி வரை தெரிவித்து விடுகிறோம். அதனால் மரக் கடத்தல், வனவிலங்கு வேட்டையர்களுக்கு எங்களால் இம்சை. எனவே அவர்கள்தான் என்னைப் பற்றியும், இம்மையத்தை பற்றியும் பல்வேறு அவதூறு கிளப்புகிறார்கள்!'' என்பதுதான் அப்போது அவர் பேட்டியின் சாராம்சமாக இருந்தது.

அந்த சமயம் இந்த மையத்தில் பிரம்மாண்ட தியான லிங்க சிற்பம் தயாராகிக் கொண்டிருந்தது. அதற்காக ஊத்துக்குளியிலிருந்து பெரிய பாறைகள் கொண்டு வந்து இறக்கப்பட்டு, அதில் சிற்பிகள் பணி புரிந்து கொண்டிருந்தனர். இந்த லிங்கம் உருவாகும்போது குரு இல்லாமலே இச்சிற்பத்தின் முன் உட்கார்ந்து யோகாநிலையை அடைந்திட முடியும் என்று பிரம்மிப்பு உத்தியுடன் எனக்கு இம்மைய சீடர்கள் நிறைய விளக்கினார்கள். இதன் பிரதிஷ்டைக்கு உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருவார்கள் எனவும் தெரிவித்தார்கள். அப்படி அந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்குள் இம்மையத்தின் சீடர்கள் காவல்துறை, சிறைத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை என அரசில் உள்ள அத்தனை துறை அலுவலர்களுக்கும் யோகா வகுப்புகள் மூலம் ஊடுருவியிருந்தனர்.

அந்த சமயம் வந்த மகா சிவராத்திரிக்கு இங்கே என்னதான் நடக்கிறது என்பதைக் காணச் சென்றிருந்தேன். இரவு நேரத்தில் முட்டத்துவயல் தொடங்கி இம்மையம் வரை மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வாகன நெரிசல். பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், வேன்கள் என கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாகனங்கள் அங்கு பரந்த வெளி காடு முழுக்க நிறுத்தப்பட்டிருந்தன. வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் அர்த்த ராத்திரியில் டோக்கன் போட்டு தனியார் வசூல் வேறு நடந்து கொண்டிருந்தது.

எப்படிப் பார்த்தாலும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதற்கு முன்னதாக இம்மையத்திற்கு வந்திருந்தனர். கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், யோகா தீட்சை பெற்ற சீடர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பிரபல பாடகர் குழுவின் இசை வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர். பலர் தம்மை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர். அந்த அரங்கமே ஒளி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தது. போளுவாம்பட்டி வனச்சரகத்தை ஒட்டியுள்ள இந்த வெள்ளியங்கிரி மலைகளுக்கு அருகாமையில் இப்படியொரு மனிதத் திருவிழா நடக்கும் என்பதை மனிதர்கள் உணர்கிறார்களோ இல்லையோ வன மிருகங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை 50 ஆயிரத்திற்கு அடக்கமாகவே சிவாராத்திரியன்று மக்கள் கூடுவார்கள். மையம் சர்ச்சைக்கு ஆட்பட்டு மீடியாக்களில் செய்திகள் பலதரப்பட்ட வந்த பிறகு மக்கள் வெள்ளம் லட்சங்களில் உயர்ந்து விட்டது.

அதன் தொடர்ச்சியாக மெகா சைஸ் லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட, அது விளம்பர மயமாக, வெள்ளியங்கிரிக்கு வரும் பக்தர்கள் எல்லாம் அதையும் மறந்து இங்கே கூடி களிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தென் கயிலாய யாத்திரை வருபவர்கள் பக்தி சிரத்தையுடன் வந்தார்கள் என்றால் இங்கு வருபவர்களோ சுற்றுலா மனநிலையிலேயே அதிகமாக வந்தனர். அதனால் இது ஒரு சுற்றுலா தளம் போலவே வளர்ந்தது.

பல்வேறு மத்திய அமைச்சர்கள் முதல் பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என வந்து செல்லும் தபோவனமானம் போல் ஆனது இந்த மையம். அதன் சக்தி மிக்க பலன் இம்மையத்திற்கு வெளியே பிரம்மாண்ட வெளியிலும் இதன் அகலக்கரங்கள் விரிந்தது. அதில் தன் கட்டிடங்களை பல ஆயிரம் சதுர மீட்டர்களில் விஸ்தரிக்க பிரச்சினைகளும் வெடித்தது.

சூழலியலாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பழங்குடியின சங்கங்கள் என சகலமும் இதன் விதிமீறல்களை சுட்டிக்காட்டி போராட்டங்கள் செய்தன. நீதிமன்றங்களுக்கும் சென்றனர். ஆனால் இந்த நேரத்தில் யோக குரு ஐ.நா சபையிலேயே பேசுகிறார். உலக பிரபலங்களுடன் எல்லாம் உரையாடுகிறார். அந்த பிரபலங்கள் எல்லாம் இம்மையம் வருகை புரிகின்றனர்.

இதன் உச்சகட்டமாக பிரம்மாண்ட யோகி சிலை என்று ஒன்று அமைக்கப்பட, அதை திறக்க பிரதமரும் வருகை புரிகிறார். தமிழக ஆளும் சக்திகள் எல்லாம் அவருடனே நெருங்கி நிற்கின்றன. அதில் எல்லா பிரச்சினைகளும் சரியானது. இம்மையத்தின் கட்டிடங்கள் கட்டியதற்கு சிறப்பு அனுமதி கொடுத்துள்ளதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் பதில் மனு அளிக்கும் வரை சென்றது. அந்த மனுவும், அந்த வழக்கும் இந்த அத்துவானக்காட்டில் இருக்கும் வன மிருகங்களுக்கு, குறிப்பாக பெரிய மிருகமான காட்டு யானைகளுக்கு தெரியுமா?

உலகெங்குமிருந்து பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பத்து லட்சம் மனிதத் தலைகள், திரும்பின பக்கமெல்லாம் புகை கக்கும் வாகனங்கள். பாதுகாப்பில் பல்லாயிரம் போலீஸார், இரவு பகல் என்றில்லாமல் வர்ண ஜாலம், ஆடல், பாடல் கூத்து, நாட்டை ஆளும் பிரதமரே ஆனந்தம் பொங்க அம்மேடையேற, ஒரே ஆரவாரம். அதனால் இந்த சுற்றுவட்டார யானைகள் எல்லாம் பிளிறிக் கொண்டு அக்கம்பக்கத்து காடுகளுக்குள் புகுந்தன.

அதில் பாதிக்கப்பட்டது இங்கிருந்து 3 கிலோமீட்டர் தென்மேற்கே இருந்த கோவை குற்றாலம், சாடிவயல் பகுதிகள். குறிப்பாக அங்கே காட்டு யானைகளை பார்த்து அஞ்சிக் கொண்டிருந்த கும்கிகள். அதில் ஒரு கும்கி ஏற்கெனவே காட்டுயானைகள் சூழ்ந்து தாக்கியதில் ஒரு கொம்பை இழந்து பரிதாபத்துடன் விழித்துக் கொண்டிருந்தது. 

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x