Published : 02 Sep 2017 05:38 AM
Last Updated : 02 Sep 2017 05:38 AM
ப்ளூ வேல்... இன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட பயங்கர விளையாட்டாக உள்ளது. ரஷ்யாவின் உளவியல் துறை மாணவர் பிலிப் புடீக் என்பவர் திட்டமிட்டே உருவாக்கிய விளையாட்டுதான் ப்ளூ வேல். தினம் ஒரு சவால் என்று மெதுவாக ஆரம்பித்து 50-வது நாளில் தற்கொலை செய்ய தூண்டும் அல்லது மிரட்டும் விளையாட்டுக்குப் பெயர்தான் ப்ளூ வேல்.
ரஷ்யாவில் மட்டும் 130 பேர் இந்த விளையாட்டின் முடிவில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா என்று தொடங்கி தமிழ்நாடு வரை வந்து விட்டது. மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் 2 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். ப்ளூ வேல் பற்றி எச்சரிக்கை வாசகம் எழுதிவைத்துள்ளார் விக்னேஷ்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அசாம் மாணவர் சசிகுமார் போரா என்பவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். அவரது செல்போனில் ப்ளூ வேல் விளையாட்டுக்கான தடயங்கள் இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்கள் கதிகலங்கி போயுள்ளனர்.
செல்போனில் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்தால், உங்கள் தகவல்கள் அனைத்தும் ‘ஹேக்கர்’கள் மூலம் தானாக அவர்கள் கைகளுக்கு சென்று விடும். நீங்கள் வீட்டுக்கு தெரியாமல் எந்தத் தவறு செய்திருந்தாலும் அதை வைத்துதான் மிரட்டுகின்றனர். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சினை என்று நினைத்து, அவர்கள் சொல்வது போல் நடந்து கொள்ள நேரிடலாம். இதுதான் மரணம் வரை கொண்டு செல்கிறது.
இவ்வளவு அதிர்ச்சியான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், ஆபத்தில்லாத, அன்பை வலியுறுத்தும் வகையில் ப்ளூ வேல் விளையாட்டுக்கு மாற்றாக சத்தமில்லாமல் வந்துள்ளது ‘பிங்க் வேல்’.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பனானாதேவ் என்பவர் இந்த ‘பிங்க் வேல்’ விளையாட்டை வடிவமைத்துள்ளார். ‘பலீயா ரோசா’ என்று போர்ச்சுகீசிய மொழியில் இந்த விளையாட்டு அழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டில் உங்களுக்கு உத்தரவிடும் நபர் யாரும் கிடையாது. இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம். ப்ளூ வேல் போலவே தினமும் ஒரு சவால் கொடுக்கப்படும். 50-வது நாளில் ஒரு உயிரைக் காப்பாற்ற அறிவுறுத்தப்படும்.
ஆதாரம் தேவையில்லை
ப்ளூ வேல் விளையாட்டில் ஒவ்வொரு நாளும் சவால்களை செய்த பின் அதற்கு ஆதாரங்களை அனுப்ப வேண்டும். பிங்க் வேல் விளையாட்டில் அப்படி இல்லை. அதற்குப் பதில், மார்க்கர் பேனா மூலம் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை நீங்களே கையில் எழுத வேண்டும், தாத்தாவிடம் போனில் பேச வேண்டும், கண்ணாடி முன் நின்று கொண்டு வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவேன் என்று உற்சாகமாக பேசுவது போன்ற சவால்கள்தான் வழங்கப்படுகின்றன.
பேஸ்புக், ட்விட்டரில் பிங்க் வேல் சவால் பக்கங்களை 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். ஏப்ரல் மாதம்தான் இந்த விளையாட்டு தொடங்கப்பட்டுள்ளது. அதற்குள் இதற்கு நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். நல்ல விஷயங்கள், அன்பு ஆகியவை இந்த விளையாட்டில் வலியுறுத்தப்படுகின்றன. இணையதளம் மூலம் அன்பை பரவச் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த விளையாட்டு பிறந்தது என்று பிங்க் வேல் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT