Published : 05 Sep 2017 06:44 PM
Last Updated : 05 Sep 2017 06:44 PM

அறம் பழகு எதிரொலி: ஏழை மாணவரின் பொறியியல் கல்விச் செலவை ஏற்ற சிங்கப்பூர் வாழ் தி இந்து வாசகர்!

படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.

உதவி தேவைப்படும் மாணவர்கள் குறித்த செய்தி 'அறம் பழகு' தொடர் மூலம் 'தி இந்து' இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அவற்றைப் படித்த சிங்கப்பூர் வாழ் தமிழரான 'தி இந்து' வாசகர் ரகுபிரகாஷ், ஏழ்மை நிலையில் இருந்தாலும் கடின உழைப்பால் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்னும் மாணவர் குறித்து தகவல் கிடைத்தது. 12-ம் வகுப்பில் 1,112 மதிப்பெண்களும் 10-ம் வகுப்பில் 486 மதிப்பெண்களும் பெற்றவர் அவர். ஓய்வு நேரங்களில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொறியியல் படிப்புக்கு இடம் கிடைத்தும் பணமில்லாமல் கல்லூரியில் சேரக் காத்திருந்தார் ராஜ்குமார்.

ராஜ்குமார் குறித்த தகவல்களை தக்க சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களோடு, ரகு பிரகாஷிடம் பகிர்ந்தோம். தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்டுக் கட்டணமான ரூ.55,635 செலுத்த 3 நாட்களே இருந்தன. இந்நிலையில் குறிப்பிட்ட தொகையை உடனே அனுப்பி வைத்தார் ரகுபிரகாஷ். கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டதால் ஆனந்தத்துடன் கல்லூரி செல்ல ஆரம்பித்தார் ராஜ்குமார்.

காலத்தினாற் செய்த உதவி குறித்து ரகுபிரகாஷிடம் பேசினோம். ''தாய்நாட்டை விட்டு சிங்கப்பூர் வந்துவிட்டாலும் தமிழகம் மீதான அன்பு குறையவில்லை. தொடர்ந்து தமிழக செய்திகளைப் படிப்பேன். அப்படி ஒரு நாள் இணையத்தில் இருந்தபோதுதான் 'அறம் பழகு' தொடரைப் படித்தேன்.

என்னுள் பொதுவாகவே ஓர் எண்ணம் உண்டு. அதிக மதிப்பெண்கள் பெற்றும், உயர் கல்விக்குச் செல்ல முடியாமல் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசைதான் அது. பொருளாதாரம் என்ற ஒற்றைக் காரணியால் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது. இதனால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 மாணவர்களுக்கு, நண்பர்களின் உதவியுடன் உதவத் திட்டமிட்டிருக்கிறேன். அவர்களின் வருடாந்திர மதிப்பெண்களைப் பொறுத்து ஒட்டுமொத்த படிப்புக்கான செலவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

'ஏழை மாணவர்களுக்கு உதவத் தயார்'

அத்தகைய மாணவர்கள் குறித்து உங்களில் யாருக்காவது தெரிந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம். இவை அனைத்துக்கும் பின்புலமாக இருப்பது என்னுடைய ஆசிரியர் ராஜேந்திரன் சார்தான். அவரின் ஊக்கம் மற்றும் உறுதுணையால்தான் என்னால் இத்தகைய செயல்களில் ஈடுபட முடிகிறது.

ஆசிரியர் தினமான இன்று அவர் குறித்து கூற வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்'' என்கிறார் ரகுபிரகாஷ்.

ரகுபிரகாஷைத் தொடர்பு கொள்ள - raghu.educationtrust@gmail.com

downloadராஜ்குமாரின் குடும்பம். படம்: எல்.சீனிவாசன்100 

உதவி கிடைத்த மகிழ்ச்சியில் உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார் மாணவர் ராஜ்குமார். ''இந்த உதவியை நிச்சயம் மறக்க மாட்டேன். தொடர்ந்து நன்கு படித்து, முன்னேறி, உதவி தேவைப்படும் மக்களுக்கு என்னால் ஆனதைச் செய்வேன்'' என்கிறார் ராஜ்குமார்.

இதைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x