Published : 02 Sep 2017 09:15 AM
Last Updated : 02 Sep 2017 09:15 AM
மு
ன்பெல்லாம் ஊருக்கு ஊர் வாரச் சந்தைகள் கூடும். காய் கனிகள் மாத்திரமல்லாது வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் அங்கு மலிவாக வாங்க முடியும். ஆனால் இப்போது, நகரங்களும் நாகரிகமும் பெருத்துப் போனதால் பல ஊர்களில் வாரச் சந்தைகள் இனி வாராச் சாந்தைகளாகிவிட்டன. எங்கோ ஒரு சில கிராமங்களில் மட்டும் வாரச் சந்தைகளுக்கு இன்னும் வாழ்வழித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்!
பாரம்பரியப் பொருட்களைத் தேடி..
கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் கருப்பூர், மருதாநல்லூர், வலங்கைமான், ராஜகிரி, பசுபதிகோயில், மெலட்டூர், ஆவூர், கோவிந்தக்குடி, சந்திரசேகரபுரம், நாச்சியார்கோயில், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்றைக்கும் வாரச் சந்தைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்தச் சந்தைகளில், காய்கனிகள், சோப்பு, சீப்பு வகைகள், அரிசி, பருப்பு, புளி, மிளகாய், எண்ணெய் வகைகள் மாத்திரமின்றி மலிவு விலையில் துணிமணிகளும் விற்கப்படுகின்றன.
பெரும்பாலும் மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த சந்தைகள், இரவு 11 மணி வரைக்கும் கல்லாக்கட்டுகின்றன. எவ்வளவுதான் பிராண்டடு கம்பெனிகளின் பொருட்கள் வந்தாலும் வாரச் சந்தைகளில், செக்கு எண்ணெய் உள்ளிட்ட நமது பாரம்பரியப் பொருட்களை தேடிப்போய் வாங்குவதையே கிராம மக்கள் இப்போதும் விரும்புகிறார்கள். வாரச் சந்தைகளில் விற்கப்படும் காய்கனிகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் நியாயமாகவும் மலிவாகவும் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
ஏஜென்டுகளும் இருக்கிறார்கள்
வாரச் சந்தைகளின் வாழ்வு குறித்து கும்பகோணத்தில் உள்ள சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் பொதுமேலாளர் புருஷோத்தமன் பேசினார். “கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் தினமும் ரெண்டு ஊரிலாவது வாரச் சந்தை கூடுகிறது. இந்தச் சந்தைகளில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது பொருட்களை சந்தைப்படுத் துகிறார்கள்.
இதில், எங்களது கூட்டுறவு சங்கம் சார்பில் மக்கள் மலிவு விலையில் வாங்கும் வகையில் பத்து ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் மதிப்பு வரையிலான மளிகை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். வாரச் சந்தைகளை நடத்த தனியாக ஏஜென்டுகளும் உள்ளனர். அவர்கள் கிராமப்புறங்களில் மக்கள் கூடும் இடங்களைத் தேர்வு செய்கிறார்கள். அந்த இடத்தின் உரிமையாளருக்கு வாடகையை கொடுத்துவிட்டு சந்தையை நடத்து கிறார்கள்.
பரஸ்பரம் பலன் பெறுகின்றனர்
இரவிலும் சந்தை நடப்பதால், கடைகளுக்குத் தேவையான மின்விளக்கு வசதிகளையும் ஏஜென்ட்களே ஏற்பாடு செய்துகொடுக்கிறார்கள். இதற்காகவும் தனியாக கட்டணம் வசூலித்துக் கொள்கிறார்கள். கும்பகோணம் பகுதியில் கூடும் வாரச் சந்தைகளால் பொதுமக்களும் வியாபாரிகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நல்ல பலனே பெறுகின்றனர்” என்கிறார் புருஷோத்தமன்.
வாரச் சந்தைகளுக்கு வரும் காய்கனிகள் ஃபிரஷ்ஷாக இருப்பதுடன் அவற்றில் பெரும்பாலானவை குறு விவசாயிகளால் இயற்கை முறை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. எனவே, வாரச் சந்தைகள் உண்மையிலேயே நமக்கான வரப்பிரசாதம்தான். ஆனால், நாம்தான் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT