Published : 02 Sep 2017 09:14 AM
Last Updated : 02 Sep 2017 09:14 AM
‘த
ஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட செருவாவிடுதி கிராமத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு. ஒரு அரசு மருத்துவ மனைக்கான சாயலே தெரியாமல் கார்ப்பரேட் மருத்துவமனை போல் செயல்படும் அந்த சுகாதார நிலையத்தை ஒருமுறை போய் பார்த்துவிட்டு வாருங்கள்’ கல்லூரி விரிவுரையாளரான கணேஷ்குமார் என்பவர், ‘தி இந்து’ இங்கே.. இவர்கள்.. இப்படி! பகுதிக்கான அலைபேசி எண்ணில் (044 42890013) இப்படியொரு கோரிக்கை வைத்திருந்தார்.
அவர் சொன்னதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, அப்படியொரு அரசு மருத்துவமனை இருக்க முடியுமா? என்ற ஆச்சரியத்துடன் செருவாவிடுதிக்கு பயணமானோம். கணேஷ்குமார் சொன்னது அனைத்தும் உண்மை; துளியும் மிகையில்லை என்பது அங்குபோனதுமே தெரிந்தது.
புதுப்பெண் ஜொலிப்பு
வயிற்றைக் குமட்டும் மருந்து வாசனை.. மூக்கைத் துளைக்கும் கழிவறை நாற்றம்.. எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பியதற்கான அடையாளங்கள்.. கண்டபடி தூக்கியெறியப்பட்டுக் கிடக்கும் குப்பைகள்.. அரசு மருத்துவமனைகளுக்கே உரித்தான இந்த அக்மார்க் அடையாளங்கள் எதுவும் இந்தச் சுகாதார நிலையத்தில் தேடினாலும் தென்படவில்லை. நேர்த்தியான சாலை, சுற்றிலும் பசுமை பரப்பும் மரங்கள், அடர்ந்து வளர்ந்த மூலிகை செடிகள் என இயற்கை எழில் சூழ அமைந்திருக்கிறது செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம். கிராமத்துப் பாணியில் சொல்வதானால், புதுப்பெண் ஜொலிப்பில் இருக்கிறது இந்த மருத்துவமனை.
30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட வார்டுகள், பிரசவம் மற்றும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை, பல் சிகிச்சை, சித்தமருத்துவப் பிரிவு, விஷக்கடி சிகிச்சை, எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் உடல்நிலையை சீராக வைத்திருக்க உதவும் கருவிகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் கவனிப்புப் பிரிவு, ஆற்றுப்படுத்தும் சிகிச்சைப் பிரிவு, கணினி மயமாக்கப்பட்ட லேபரட்டரி என சகல வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனையில் தினமும் 250-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
ஐ.எஸ்.ஓ. தரச் சான்று
1968-ல் உருவான செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் 2014-ல் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றது. ஒரு அரசு மருத்துவமனையை இந்தளவுக்குத் தரம் உயர்த்தியதில் மருத்துவர் சவுந்தரராஜனின் பங்கு மிக முக்கியமானது. 1992-ல் இங்கே மருத்துவராக பணியமர்த்தப்பட்ட சவுந்தரராஜன் அவ்வப்போது அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் செருவாவிடுதி சுகாதார நிலைய மருத்துவராகவும், பேராவூரணி வட்டார மருத்துவராகவும் பணியமர்த்தப்பட்டார்.
இவர் இங்கு வந்த புதிதில் செருவாவிடுதி சுற்றுவட்டாரத்தில் சிசு மரணங்களின் எண்ணிக்கையும், பிரசவத்தின் போது உயிரிழக்கும் கர்ப்பிணிகள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த சவுந்தரராஜன், கர்ப்பிணிகள் கர்பகாலத்தில் சத்தான உணவு சாப்பிட முடியாத வறுமையே இதற்குக் காரணம் என கண்டறிந்தார். இதையடுத்து, இரும்புச் சத்து நிறைந்த மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து ஓரளவுக்கு இறப்புகளைத் குறைத்தார். இத்தோடு நிறுத்திக் கொள்ளாத இவர், கர்ப்பிணிகளுக்கு வாரம் ஒருமுறை யாவது இயற்கையான சத்துணவு வழங்க வேண்டும் என முடிவு செய்தார்.
700 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
அதன்படி 2007-ல், கொடையாளர்கள் சிலரது உதவியோடு, இந்த மருத்துவமனையில் செவ்வாய் தோறும் சத்தான மதிய உணவு சமைத்து, இங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். இதை அறிந்த தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், 2008-ல் இதை மாநிலம் முழுவதும் அரசு பங்களிப்புடன் பரவலாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்தனர். கர்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் தேவையற்ற பயத்துடன் நாட்களை கடத்துவதை உள்வாங்கிய சவுந்தரராஜன், அவர்களது அச்சத்தைப் போக்கவும், பேறுகாலம் என்பது மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய தருணம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார்.
2008-ல், பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுமார் 700 கர்ப்பிணிகளுக்கு திருமண மண்டபம் பிடித்து வளைகாப்பு திருவிழா நடத்தி விருந்தளித்தார் சவுந்தரராஜன். இப்போது அரசு சார்பில் நடத்தப்படும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு, இதுவே முன்னோடி என்கிறார்கள் மருத்துவத்துறை வட்டாரத்தில். இந்த மருத்துவமனை வளாகத்தில் இப்போது, சுமார் ஒரு ஏக்கரில் காய்கனிகள், கீரைகள் பயிர் செய்யவும் மூலிகை தோட்டம் அமைக்கவும் மருத்துவ குணம் கொண்ட 100 பப்பாளி மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏழைகளுக்கு மறுக்கக்கூடாது
இந்தத் தோட்டத்தின் விளைச்சலைக் கொண்டு நோயாளிகளுக்கு உணவு சமைத்து வழங்குவதும் சித்தா மருந்துகளை தயாரிப்பதும்தான் தனது அடுத்த இலக்கு என்று சொல்லும் மருத்துவர் சவுந்தரராஜன், “அரசு மருத்துவமனைகளுக்கு ஏழைகள்தான் வருகிறார்கள். வசதியில்லை என்பதற்காக அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய தரமான, கணிவான சிகிச்சையை வழங்க தயக்கம் காட்டக்கூடாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் ஏழையின் கஷ்டம் என்னவென்று எனக்கும் தெரியும். அதனால் தான் ஏழைகளுக்காக மெனக்கெடுகிறேன். எனது முயற்சிகளுக்கு அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்புத் தருவதால்தான் எனது எண்ணங்கள் செயல்வடிவம் பெறுகின்றன” என்கிறார் தன்னடக்கத்துடன்.
தனது நண்பர்கள் மற்றும் கொடையாளர்கள் மூலம் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான உதவிகளை இச்சுகாதார நிலையத்துக்காக பெற்றுள்ளார் சவுந்தரராஜன். விரைவில் கலர் டாப்ளர் ஸ்கேன் யூனிட் ஒன்றும் இவரது முயற்சியில் இங்கே நன்கொடையாக வரவிருக்கிறது.
மருத்துவ சேவை என்பது ஒரு மகத்தான சேவை. அதனால்தான் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக போற்றுகிறோம். செருவாவிடுதி பகுதி மக்களுக்கு சவுந்தரராஜன் உருவில் ஒரு மனிதக் கடவுள் கிடைத்திருக்கிறார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT