Published : 07 Sep 2017 03:25 PM
Last Updated : 07 Sep 2017 03:25 PM

யானைகளின் வருகை 29: வந்தார் பிரதமர்; திறந்தார் சிலையை - நடுங்குகின்றன காடுகள்

சுற்றுலா வந்த சிறுமியை அவளின் பெற்றோர் கண் எதிரே காட்டு யானை ஒன்று கொன்றது பற்றி இத்தொடரின் மூன்றாம் மற்றும் நான்காம் அத்தியாயங்களில் ஏற்கெனவே கண்டோம்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆன்மீக மைய நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ள இருந்ததால் அந்த ஏற்பாட்டின் அமளி துமளியால், அதனால் அங்கே குழுமிய லட்சோப லட்ச மக்களால் அங்கு திரிந்த காட்டு யானைகள் நேரே பக்கத்தில் உள்ள கோவை குற்றாலத்திற்கு புறப்பட்டன.

பிரதமர் வருகைக்கான பந்தோபஸ்து ஏற்பாடு அவர் வருவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால், காட்டு யானைகளின் மிரட்சியின் தாக்கம் அப்போதிருந்தே கோவை குற்றாலத்தில் எதிரொலிக்கத் தொடங்கின.

பொதுவாகவே கோவை குற்றாலத்தில் காட்டு யானைகளின் நகர்வு மிக அதிகம். வருடத்தின் 365 நாட்களிலும் இங்கே காட்டு யானைகளைக் காணலாம். பகலிலும் அதன் ஆபத்து மிகுதியாக இருக்கும் என்பதை நமக்கு உணர்த்தியதுதான் நாம் 3-ம் அத்தியாயத்தில் கண்ட சிறுமியின் மரணம். அப்படிப்பட்ட இடத்தில் மனிதர்கள் (சுற்றுலா பயணிகள்) நடமாட்டம் அதிகம் இருப்பதாலேயே அடர் வனத்திற்குள் பதுங்கிக் கொள்ளும் காட்டு யானைகள் மாலை 5.30 மணி ஆகி விட்டால் மெல்ல, மெல்ல நீர் அருந்த அருவிக்கு வர ஆரம்பித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

எனவேதான் அதற்கு முன்பே சுற்றுலாப் பயணிகளை இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதை வனத்துறையினர் அடிப்படையாக வைத்துள்ளனர். அப்படிப்பட்ட கோவை குற்றாலத்தில்தான் கோவை மாவட்டத்தில் வலம் வரும் காட்டு யானைகளை விரட்டும் நோக்கத்தில் கும்கி முகாம் ஒன்றை அமைத்தது அரசு.

2000 ஆம் ஆண்டிலிருந்தே கோவை மாவட்டத்தில், குறிப்பாக வாளையாறு தொடங்கி, சிறுமுகை வரையிலான மலையோர கிராமங்களில் காட்டு யானைகள் வரத்து அதிகமாகி, யானை மனித மோதலும் அதிகரித்துவிட்டது என்பதைக் கண்டோம்.

அதை சமாளிக்க சூரிய மின்வேலிகள், பெரிய அகழிகள், யானை வரும் முன்னே அறிவிக்கும் அலாரம் கருவிகள் என ஏற்படுத்தச் சொன்னார்கள் அதிகாரிகள். அதையும் செய்தார்கள் விவசாயிகள்.

அவை சுத்தமாக எடுபடாத நிலையில் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், அழிச்சாட்டியம் செய்யும் யானையை மடக்கிப் பிடிக்கவும் கும்கிகள் (பழக்கப் படுத்தப்பட்ட யானைகள்) கொண்டுவரப்பட்டன. அவை முதுமலையிலிருந்தும், டாப் ஸ்லிப்பிலிருந்துமே கொண்டு வரவேண்டியிருந்தது.

எனவே அப்படியொரு கும்கி முகாமை கோவையிலேயே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனர். அந்த அடிப்படையில் 2011ல் பதவியேற்ற அதிமுக அரசு முதல் வேளையாக இந்த கோவை குற்றாலத்தின் அடிவாரப்பகுதியில் உள்ள சாடிவயல் வனப்பகுதியில் கும்கி முகாம் ஏற்படுத்தியது.

இதற்காக டாப் ஸ்லிப்பிலிருந்து பாரி, நஞ்சன் என்ற கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. இவை தங்குவதற்கு கொட்டகைகள், இவற்றை பராமரிக்கும் மாவூத்தர்கள், அவர்களின் உதவியாளர்களான காவடிகள் தங்குவதற்கு குடியிருப்புகள் இங்கேயே ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் தமிழக அரசின் யானைகள் நல வாழ்வு முகாமிற்கு சென்ற இந்த கும்கி யானைகளில் நஞ்சன் யானை மதம் பிடித்து சரியான கவனிப்பின்றி (இதைப் பற்றியும் பின்னர் விரிவாக காணலாம்) இறந்தது. அதையடுத்து சாடிவயல் முகாமில் ஒற்றை கும்கியாக இருந்து பாரி சிரமப்பட்டு வந்தது. எனவே முதுமலையிலிருந்து இதற்கு துணையாக சுஜய் (47 வயது) என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டது. பாரிக்கும், நஞ்சனுக்கும் முன்பு இருந்த இணக்கத்தைப் போல் சுஜய்யுடன் பாரியை ஏற்படுத்த முடியவில்லை பாகன்களால்.

இவை தங்கியிருக்கும் முகாம் காட்டுப் பகுதி. அங்கே மாலை வேளையானால் காட்டு யானைகள் கூடிவிடும். தினமும் இரவு நேரங்களில் 14 யானைகள் முதல் 20க்கும் மேற்பட்ட யானைகள் வரை வருவதும், இந்த கும்கிகளையே தாக்க முற்படுவதும், அவற்றை பட்டாசுகள் வெடித்து விரட்டுவதுமாக இருந்தனர் பாகன்கள்.

முன்பு பாரி, நஞ்சன் ஓரளவு இணக்கமாக இருந்ததால் இந்த காட்டு யானைகள் கிட்ட நெருங்க முடியவில்லை. அப்படியே வந்தாலும் இரண்டும் ஒன்றிணைந்து அவற்றை தாக்கி விரட்டி விடும் தன்மையில் செயல்பட்டது. ஆனால் இப்போது சுஜய்யுடன் இணக்கம் இல்லாததால் எந்த நேரம் காட்டு யானைகள் இவற்றைத் தாக்குமோ என்ற அச்சத்திலேயே பாகன்களும் இங்கே வசித்து வந்தனர். சுஜய்யையும், பாரியையும் 50 மீட்டர் இடைவெளியிலேயே சங்கிலியால் கட்டிப் பாதுகாத்து வந்தனர்.

இதை சுஜய் வந்தபோதே இங்குள்ள பாகன்கள் அச்சத்துடன் செய்தியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர். அதை முன்வைத்து எந்த நேரம் வேண்டுமானாலும் காட்டு யானைகளால் சாடிவயல் கும்கிகளுக்கு ஆபத்து நேரலாம் என்ற செய்தியையும் எழுதியிருந்தேன். அது 'தி இந்து'விலும் வெளியாகியிருந்தது.

இந்த சூழ்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி இரவு சாடிவயல் முகாமில் இருந்த சுஜய் யானையை, காட்டுக்குள் இருந்து வந்த ஒற்றை யானை ஒன்று மூர்க்கத்தனமாகத் தாக்கியது. இரண்டு யானைகளுக்கும் இடையே நடந்த மோதலில் சுஜய் கும்கியின் வலது தந்தம் முழுவதுமாக கழன்று விழுந்தது.

இதனால் படுகாயமடைந்த நிலையில் உடல்நலம் குன்றியது சுஜய். இதையடுத்து அந்த யானைக்கு வனத்துறையினரும், வனத்துறை கால்நடை மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். அதே சமயம் தந்தம் உடைந்த சுஜய் மேற்கொண்டு கும்கியாக செயல்படுவது சிரமம் என்பதை கருத்தில் கொண்டு, அதை வேறு முகாமுக்கு கொண்டு செல்லவும், அதற்குப் பதிலாக வேறு ஒரு யானையை கும்கியாக அழைத்து வரவும் ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். இதற்காக உள்ளூர் வனத்துறை அலுவலர்கள் தம் தலைமைக்கு கடிதமும் எழுதியிருந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் யோகி சிலை திறக்க பிரதமரே வருகை புரிய அந்தப் பகுதி காட்டு யானைகள் எல்லாம் இங்கே புகுந்தன. அதில் எந்த நேரம் என்ன நடக்குமோ என்று பாகன்களே அஞ்சினர். இங்கே வருகிறவர்களிடமெல்லாம் பாகன்கள் அழமாட்டாத குறையாக பல விஷயங்களை தெரிவித்தனர். அப்படித்தான் நம்மிடமும் இப்படி பேசினர்:

''போன வாரம் 14 யானைகள் வந்து சூழ்ந்துவிட்டன. அதை விரட்டவே படாதபாடு பட்டு விட்டோம். பாரிக்கு வயசு குறைவு. அதற்கு எதிர்த்து நிற்கிற தைரியம் உண்டு. அப்படிப்பட்ட பாரியே கூட்ட யானைகளைப் பார்த்து நடுங்கி விட்டது. அதுவே அப்படியென்றால் சுஜய் பற்றி சொல்ல வேண்டாம். அது ஒற்றைக் கொம்பை இழந்த நிலையில் மிரண்டு போய் மரத்தை சுற்றி சுற்றி வந்தது. இதன் கொம்பை உடைத்த ஒற்றை யானையும் அடிக்கடி வந்து விடுகிறது.

இரண்டு முறை மீண்டும் இதன் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. 3 கி.மீ. தொலைவில்தான் யோகா மையம். அங்கு சிலையைத் திறக்க பிரதமர் வருவதால் ஆயிரக்கணக்கான போலீஸார், பாதுகாப்பு அதிகாரிகள் இரவு பகலாக வந்து போகிறார்கள். 4 முதல் 5 கி.மீ. தொலைவுக்கு மின்விளக்குகள் போடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் வந்து போகிறது. அதனால் தொந்தரவுக்குள்ளான காட்டு யானைகள் இந்தப் பக்கம் வந்துவிட்டன. இப்ப முந்தையதை விட 3 மடங்கு காட்டு யானைகள் இங்கே திரிகின்றன. தொந்தரவுக்கு ஆட்பட்டு அங்கே விரட்டப்படுவதால் அந்த யானைகளுக்கு ஆக்ரோஷமும் மிகுதியாகக் காணப்படுகிறது. என்ன நடக்குமோன்னு நாங்க பயந்து, பயந்தே இருக்க வேண்டியிருக்கு.

முதுமலையில் உள்ள வனத்துறை காட்டு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு அருகிலும், வால்பாறை டாப் ஸ்லிப் காட்டு யானை வளர்ப்பு முகாம்களை சுற்றிலும் நிறைய காட்டு யானைகள் வருவது உண்டு. அதுக பட்டாசு வெடிச்சாலே ஓடிடும். இங்கிருக்கிற காட்டு யானைகள் அப்படியில்ல. பட்டாசு வெடிக்கு நகருவதே இல்லை. இங்கே மதுக்கரை, காரமடை, மேட்டுப்பாளையம்ன்னு நிறைய கல்குவாரிகள் இருக்கு. அங்கே வலசை போற இந்த யானைகள் வெடிச் சத்தத்துக்கு எல்லாம் பழகிப்போச்சு . அப்படிப்பட்ட மூர்க்க யானைகள் மத்தியில் இப்படி கும்கி யானை முகாம் போட்டிருப்பதே ஆபத்தானது. இதே பகுதியில் காட்டு யானைகள் தொந்தரவுன்னு பலதடவை நாங்களே டாப் ஸ்லிப், முதுமலையிலிருந்து கும்கிகளை லாரியில் ஏற்றிட்டு வந்து விரட்டியிருக்கோம். அப்போ இப்படியெல்லாம் பிரச்சனை இல்லை. இப்ப அஞ்சாறு வருஷமாத்தான் இந்த சோதனை. இந்த கும்கிகளை பாதுகாப்பாக வைக்கவே படாத பாடா இருக்கு. இதுல வேற பிரதமர் வர்றார். காட்டுக்குள்ளே இவ்வளவு பெரிய விழா கொண்டாடறாங்க. அதுல அதுக எவ்வளவு தொந்தரவுக்கு ஆளாகும்ன்னு நினைச்சு கூட பார்க்க மாட்டேங்கறாங்க. அதுல நாங்கதான் நடுங்கிட்டு இருக்கோம்!'' என்றார்.

பாகன்கள் பயந்ததைப் போல, சாடிவயல் முகாமில் பிரதமர் வந்ததிலிருந்து சென்றது வரை ஏதும் நடக்கவில்லை. என்றாலும் கூட இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் முன்பை விட அதிகரித்தது. காரணம், பிரதமர் திறந்து வைத்து சென்ற பிரம்மாண்ட சிற்பத்தை காண மக்கள் நிறைய வர ஆரம்பித்தார்கள். அவர்களை தாங்கி வாகனங்களும் வரத் தொடங்கின.

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெளர்ணமிக்கு வந்து கொண்டிருந்த பக்தர்களின் எண்ணிக்கை 1.5 லட்சம். அதையடுத்து உருவான பெரிய லிங்கத்தைப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். அதே பிரதமர் திறந்து வைத்த யோகி சிலையோ தினசரி 3 ஆயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை இங்கே கொண்டு வந்து சேர்க்கிறது. தவிர சித்திரா பெளர்ணமி, சிவாராத்திரி தினங்கள், வேறு வழிபாடு தினங்கள், விஐபிக்கள் வருகை தினங்களில் 10 ஆயிரம் முதல் 3 லட்சம் பேர் வரை எண்ணிக்கை எகிறுகிறது.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் வருடத்திற்கு இங்கே வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சத்தையும் தாண்டும் என்கிறார்கள் சூழலியாளர்கள். ''இப்படியிருந்தால் காடுகள் எப்படி வாழும். யானைகளும் மற்ற வனவிலங்குகளும் எப்படி உய்க்கும்?'' என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x