Published : 07 Sep 2017 10:08 AM
Last Updated : 07 Sep 2017 10:08 AM

மேலும் தேய்கிறதா தெற்கு ரயில்வே!- கேரளாவுக்காக புதிய மண்டலம் உருவாக்க முயற்சி!

செ

ன்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தை பிரித்து, கேரளத்துக்கு தனி ரயில்வே கோட்டத்தை உருவாக்க முயற்சிகள் ரகசியமாக நடந்துவருகின்றன. ஏற்கெனவே, ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கு ரயில்வே மண்டலத்தை பிரிப்பதால் தமிழகத்துக்கான ரயில்வே வளர்ச்சிப் பணிகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

42 ரயில்வே அமைப்புகள்

பல்வேறு கம்பெனிகளாக இருந்த ரயில்வேக்களை மத்திய அரசு 1944-ல் அரசுடைமையாக்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு ரயில்களை மண்டலங்களாக ஒருங்கிணைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கின. 1948-ம் ஆண்டில் 42 வெவ்வேறு ரயில்வே அமைப்புகள் இருந்தன. ஒவ்வொரு ரயில்வே அமைப்புகளும் ரயில் நிர்வாகங்களின் விரிவாக்கம், வழித்தடங்கள், அளவு மற்றும் தரங்களில் மாறுபட்டவையாக இருந்தன. இவ்வாறு இருந்த ரயில்வே நிர்வாகங் களை ஒன்றிணைத்து நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்கப்பட்டது.

அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த கோபாலசுவாமி ஐயங்கார் இந்திய ரயில்வே அமைப்பை சரி செய்து நிர்வகிக்க முதன்மையாக செயல்பட்டார். 1950 டிசம்பரில் மத்திய ரயில்வே ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி இந்தியாவின் ரயில்வே வழித்தடங்களானது வடக்கு, வடகிழக்கு, தெற்கு, மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு என ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில், தெற்கு ரயில்வே மண்டலம் 1951-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று உருவாக்கப்பட்டது. அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்ட முதல் ரயில்வே மண்டலமும் இதுதான். அப்போது தெற்கு ரயில்வே மண்டலத்தில் 9,654 கி.மீ தூரம் ரயில் வழித்தடங்கள் இருந்தன.

தெற்கு ரயில்வே பிரிப்புகள்

கடந்த1966 அக்டோபர் 2-ல் தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து விஜயவாடா, குண்டக்கல், ஹூப்ளி ஆகிய கோட்டங்களைப் பிரித்து செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு தென் மத்திய ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட்து. இவ்வாறு பிரிக்கும்போது தெற்கு ரயில்வேயின் இருப்புப்பாதை வழித்தடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டன. அதன்பிறகு, தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பெங்களூரு, மைசூர் கோட்டங்களையும், தென் மத்திய ரயில்வேயிலிருந்து ஹூப்ளி ரயில்வே கோட்டைத்தையும் இணைத்து ஹூப்ளியை தலைமையிடமாக கொண்டு தென் மேற்கு ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட பிரிப்புகளின்போது தமிழகத்திலிருந்து எவ்வித எதிர்ப்பும் எழவில்லை.

பிறகு, தெற்கு ரயில்வேயின் கீழ் திருவனந்தபுரம் கோட்டம் 1979-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியும், பெங்களூரு கோட்டம் 1981-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதியும் உருவாக்கப்பட்டன. பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு 2006-ல், பாலக்காடு கோட்டத்தின் கீழ் இருந்த தமிழக பகுதிகளை பிரித்து சேலத்தில் புதிய கோட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது இதற்கு கேரளாவிலிருந்து கிளம்பிய எதிர்ப்பைச் சமாளிக்க போத்தனூர் - பொள்ளாச்சி பகுதி பாலாக்காடு கோட்டத்துக்கு அளிக்கப்பட்டது.

மொத்த வழித்தடங்கள்

தற்போது தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய ஆறு கோட்டங்கள் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு தமிழகத்தில் 3,846 கி.மீ. தூரமும், கேரளாவில் 1,050 கி.மீ. தூரமும், ஆந்திராவில் 121 கி.மீ. தூரமும், கர்நாடகாவில் 40 கி.மீ. தூரமும் புதுச்சேரியில் 22 கி.மீ. தூரமும் என மொத்தம் 5,079 கி.மீ ரயில் வழித்தடங்கள் உள்ளன.

இந்தியாவில் தற்போதுள்ள 17 ரயில்வே மண்டலங்களில் சென்னை, மும்பை, செகந்திராபாத் ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்ட மண்டலங்களில் மட்டும் அதிகபட்சமாக ஆறு கோட்டங்கள் உள்ளன. மற்ற மண்டலங்களில் மூன்று முதல் ஐந்து கோட்டங்கள் வரை உள்ளன. கேரளத்தில் திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய இரு ரயில் கோட்டங்கள் மட்டுமே உள்ளன. ஒரு தனி மண்டலம் அமைக்க வேண்டும் எனில் குறைந்தது மூன்று கோட்டங்கள் தேவை. இதனால், கேரளத்தில் புதிய ரயில்வழித் தட திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

கேரளத்துக்கு தனி மண்டலம்

அதனால், தற்போது தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் வழித்தடங்களை பிரித்து கேரளாவுக்கு என தனியாக ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என கேரளத்தின் எம்.பி-க்களும் கேரள முதல்வரும் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளத்திலுள்ள ரயில்வே அதிகாரிகள் தரப்பில் இதற்கான தனிக்குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக பிரதமருக்கும் ரயில்வே அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘தெற்கு ரயில்வேயின் தலைமையகம் சென்னையில் இருப்பதால் கேரளத்தின் ரயில் திட்டங்களை வகுப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

அதனால், எர்ணாகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு கன்னியாகுமரியிலிருந்து மங்களூர் வரையிலான ரயில் பாதைகளை உள்ளடக்கிய புதிய ரயில்வே மண்டலத்தை அமைக்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார். கேரள எம்.பி-க்களும் ரயில்வே அமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

தெற்கு ரயில்வேயானது ஏற்கெனவே பலமுறை பிரிக்கப்பட்டதால் அதன் செயல்திறனும் வருவாயும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்னமும் இந்த மண்டலத்தை இரண்டாக பிரித்தால் வருவாய் மேலும் பாதிக்கப்படும்.

அப்படி வருவாய் குறைந்தால் ரயில்வே திட்டங்களுக்கு வாரியம் ஒதுக்கீடு செய்யும் நிதியும் வெகுவாகக் குறைந்துவிடும். அப்படிக் குறைந்தால் தமிழகத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு ரயில்வே வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்படும். புதிய ரயில் வழித்தடங்களை ஏற்படுத்துவதும் புதிய ரயில்களை இயக்குவதும் குறையும்.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

மண்டல பிரிப்பு குறித்து தெற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, “எங்களுக்கு இதுகுறித்து அலுவலக ரீதியாகவும் அதிகாரபூர்வமாகவும் எந்தத் தகவலும் வரவில்லை.” என்கிறார். ஆனால், தெற்கு ரயில்வே வட்டாரங்களில் இதுதொடர்பாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது. தமிழகத்தில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலால் இந்த விவகாரம் குறித்து தமிழக எம்.பி-க்கள் வாய்திறக்காமல் உள்ளனர்.

தொடர்ச்சியாக தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக எம்.பி-க்கள் இந்த விஷயத்திலும் மவுனமாக இருந்தால் தெற்கு ரயில்வே மண்டலமானது கோட்டம் அளவுக்கு தேய்ந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

படங்கள்: க.ஸ்ரீபரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x