Published : 28 Sep 2017 10:57 AM
Last Updated : 28 Sep 2017 10:57 AM
அ
ந்த ஊரில் இப்போது இஸ்லாமியர் ஒருவர்கூட இல்லை. ஆனால், ஆண்டு தோறும் அல்லா விழா எடுக்கிறார்கள். இந்த விழாவை முழுக்க முழுக்க இந்துக்களே நடத்துகிறார்கள் என்பது அடுத்த சிறப்பு!
தஞ்சை அருகேயுள்ள காசவளநாடு புதூர், கொ.வல்லுண்டாம்பட்டு கிராமங்களில் தான் இந்த அபூர்வத் திருவிழா! ஐந்தாறு தலைமுறை களாக இந்துக்களால் பயபக்தியுடன் கொண்டாடப்படும் இந்த அல்லா திருவிழாவின் பின்னணியிலும் ஒரு உண்மைக் கதை சொல்கிறார்கள்.
இஸ்லாமியர் குடும்பம்
அதை நமக்கு விவரித்தார் கொ.வல்லுண்டாம்பட்டு முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் தேசிங்கு ராஜன். “பல தலைமுறைகளுக்கு முன்பு எங்க ஊருல இஸ்லாமியக் குடும்பம் ஒண்ணு இருந்துச்சு. அவங்க, எங்க மூதாதையர்களோட தாய், பிள்ளை உறவா பழகிருக்காங்க. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க இறந்ததும் எங்க ஊருலயே அடக்கம் செய்யப்பட்டாங்க.
என்ன காரணம்னு தெரியாது.. அதுக்குப் பிறகு அந்த அடக்க ஸ்தலத்தை எங்க மூதாதையர்கள் கோயிலா கும்பிட ஆரம்பிச்சிருக்காங்க. அது இப்ப வரைக்கும் தொடருது. இப்ப எங்க ஊருல இஸ்லாமியர்கள் யாரும் இல்லை. ஆனா, ஏற்கெனவே இங்க இருந்த அந்த இஸ்லாமியர் குடும்பத்தின் வழி வந்தவங்க தஞ்சாவூருல இருக்காங்க. அவங்க, மொகரம் பண்டிகை அன்னிக்கி, எங்க ஊருக்கு வந்து பாத்தியா ஓதிட்டுப் போவாங்க. அதுக்கப்புறம், நாங்க, அல்லா கோயிலில் வைத்து வழிபடும் உள்ளங்கை போன்ற உருவத்தை பூவால் கரகம் போல் ஜோடித்து ஊருக்குள் வீதி உலாவா எடுத்துட்டு வருவோம்.
தீமிதி வைபவமும் நடக்கும்
அப்படிப் போறப்ப, ஊருக்குள்ள அத்தனை வீட்டுலயும் மண் கலையத்தில் பானகம் கரைத்து வைத்து, தேங்காய் பழத்துடன் அர்ச்சனை செய்வார்கள். மறுநாள் காலையில் தீமிதி வைபவமும் நடக்கும். எங்க ஊருல யாருக்காச்சும் உடம்புக்கு சரியில்லைன்னா அல்லா கோயில்ல போயி வேண்டி நின்னா போதும்; சீக்கிரமே சரியாகிடுவோம்”என்று சொன்னார் தேசிங்கு ராஜன்.
முன்பு, அல்லா கோயிலைக் கடக்கும் போது யாரும் காலில் செருப்புக்கூட போடமாட்டார்களாம். அதேபோல், இறந்தவர்களின் உடல்களை அல்லா கோயில் வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக மயானத்துக்குச் செல்ல மாற்றுப்பாதை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அல்லா விழாவுக்குத் தேதி குறித்துவிட்டால் அதற்கு பத்து நாட்கள் முன்னதாக அல்லா கோயிலை வெள்ளையடித்துப் புதுப்பித்து புதுக்கொடியை ஏற்றுகிறார்கள். அன்றிலிருந்தே தீமிதிக்கான விரதத்தையும் ஊர் மக்கள் தொடங்கி விடுகிறார்கள்.
ஆனந்தமாய் கொண்டாடும் விழா
இதுகுறித்து மேலும் பேசிய காசவளநாடு புதூரை சேர்ந்த ரவிச்சந்திரன், “நூறு நூத்தம்பது வருசமா இந்த அல்லா திருவிழாவை நாங்க கொண்டாடிட்டு வர்றோம். இங்க இருக்கிற சோழமுத்திரை குளத்துல மிதந்து வந்த உள்ளங்கை போன்ற உருவத்தைத்தான் அல்லா கோயில்ல வெச்சுக் கும்பிட்டுட்டு வர்றோம். திருவிழா சமயத்துல, எங்க ஊருல பொறந்து கட்டிக் குடுத்து வெளியூருகளுக்குப் போன பொம்பளப் புள்ளைக எல்லாரும் இங்க வந்துருவாங்க. அவங்க தான் மண் கலையத்துல பானகமும், அவலும் வெச்சுப் படைப்பாங்க. மொத்தத்துல, ஊரே சேர்ந்து ஆனந்தமா கொண்டாடுற விழா அல்லா திருவிழா” என்றார்.
இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதி களைகட்டவிருக்கும் அல்லா திருவிழாவுக்காக, இரண்டு கிராமத்தாரும் இப்போது விரதமிருக் கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT