Published : 25 Nov 2016 07:04 PM
Last Updated : 25 Nov 2016 07:04 PM

அன்பாசிரியர் 30: சபரிமாலா- ஆயிரம் மேடைகள் கடந்த பேச்சாற்றல் ஆசிரியர்!

'சராசரி ஆசிரியராக இயங்கி வந்த என்னை, தன்னம்பிக்கையாளராக, வெற்றியாளராக மாற்றியதே படிக்காதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட, கற்பதில் சவால் மிகுந்த குழந்தைகள்தான்' என்கிறார் சபரிமாலா. இவர் 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் எழுத்துகளைக் கற்க சைகை ஒலிப்பு முறை, பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய தமிழ் மதிப்பீட்டுக் கருவி, கோத்தல் உத்திகள் ஆகியவற்றை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி 'கலாம் போல் ஆகலாம்' இயக்கத்தை மாணவர்களைக் கொண்டே தொடங்கி, பள்ளிகளில் கலாம் குறித்துப் பேசிவருகிறார்.

ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், நூலகர், கவிஞர், பாடலாசிரியர், சமூக ஆர்வலர் எனப் பன்முகங்கள் கொண்ட ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் சபரிமாலாவின் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''2002-ல் கடலூர் மாவட்டம் எள்ளேரி நடுநிலைப் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். பள்ளி நாட்களில் மேடைப்பேச்சு, கட்டுரைகளில் ஆர்வமிருந்ததால் பள்ளி மாணவர்களுக்கும் அதைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். எங்கள் பள்ளியில் படித்த இஸ்லாமிய மாணவி, மாவட்ட பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்தார். அவரின் பெற்றோர் நேரில் வந்து, ''எங்க பொண்ணு இப்படி பேசுவான்னு தெரியலிங்க; அவளை கல்லூரி அனுப்பி படிக்கவச்சு, வேலைக்கு அனுப்புவம்ங்க'' என்றனர். கிராமப்பகுதியில், ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினர் இதைச் சொன்னபோது சரியான பாதையில்தான் செல்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது.

செயல்வழிக்கற்றலில் பாடல் தகடுகள்

2007-ல் திண்டுக்கல் அருகே ஆரம்பப் பள்ளிக்கு மாற்றலானதும் சிறு குழந்தைககளுக்கு பாடல்கள் மூலம் எழுத்துகளை கற்றுக்கொடுக்கலாம் என்று தோன்றியது. நானே பாடல்களை எழுதி இசையமைத்தேன். அப்பா இசைக்கலைஞர் என்பதால், அவரின் குழு உதவியுடன் சிடி தயாரித்தோம். 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்காக 30 பாடல்கள் உருவாக்கப்பட்டன. அத்தோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சொந்த செலவிலேயே அவற்றை வெளியிட்டோம். எவ்வித விளம்பரங்களும் இல்லாமலேயே 1000 சி.டி.க்கள் உடனே விற்றுத் தீர்ந்தன.

எழுத்து, கவிதை, நடிப்பு என்று ஏராளமான கலைகள் இருந்தாலும் மேடைப் பேச்சுதான் அரசியல், சமூக மாற்றங்களை நிகழ்த்துகிறது. எனவே அதன் மூலமாக மாணவ சமுதாயத்தை மாற்றிட ஆசைப்பட்டேன். 'கலாம் போல் ஆகலாம் - மாணவர் இயக்கம்' தொடங்கப்பட்டது.

2008-ல் விழுப்புரம் வைரபுரத்துக்கு மாற்றலானது. கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர்களும், பிள்ளைகளும் பின் தங்கிய நிலையில் இருந்தனர். நிறைய மாணவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல், உணவில்லாமலும், சுகாதாரமில்லாமலும் பள்ளிக்கு வந்தனர். பெற்றோர்களிடம் பொறுமையாகப் பேசினோம். 'உங்கள் பிள்ளைகளுக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப்போகிறீர்கள்?' என்ற வார்த்தைகள் அவர்களை மெல்ல மாற்றின.

கலாம் இயக்கத்தலைவர் கமலேஷ்

அப்போது 7-ம் வகுப்பில் கமலேஷ் என்ற மாணவன் படித்தான். திக்குவாய் காரணமாக அவனுக்குச் சரியாக பேச வராது. ஆனாலும் அவனால் சிறப்பாகப் பேசமுடியும் எனத்தோன்ற, அவனை அழைத்துப் பாரதிதாசனின் 'நூலைப்படி' என்ற கவிதையைப் படித்துக் காண்பிக்கச் சொன்னேன். இரண்டே நாட்களில் சிறிதும் பிசிறு இல்லாமல், திக்காமல் அதைப் பேசிக்காட்டினான். பாரதி வேடமிட்டு ஒன்றிய, மாவட்ட, ஐந்து மாவட்டங்கள் அளவிலான அனைத்துப் போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றும் 5 ஆயிரம், 5 ஆயிரமாக , 15 ஆயிரங்களைப் பெற்று வந்தான். அதன்மூலம் தன் தந்தையின் கடனையும் அடைத்தான். இப்போது கலாம் போல் ஆகலாம் இயக்கத் தலைவர் கமலேஷ்தான்.

கமலேஷைப் பார்த்து, ஏராளமான மாணவர்கள் முன்வந்தனர். அவர்களில் சுசித்ராவைப் பற்றி உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும். எட்டாம் வகுப்புச் சிறுமியான சுசித்ரா, பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு 5 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றாள். அந்தப்பணத்தை என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு, எதுவும் யோசிக்காமல், ''பேச்சுப்பயிற்சி கொடுத்த அக்கா வீட்டில் கழிப்பறை இல்லை. அங்கு கழிப்பறை கட்ட இந்தப் பணத்தைக் கொடுக்கிறேன். இதன்மூலம் பயிற்சி பெற வருபவர்கள் பலனடைவர்!'' என்று மேடையிலேயே கூறினாள். இத்தனைக்கும் சுசித்ராவின் வீடு, கதவு கூட இல்லாத ஏழ்மைக் குடும்பம். கமலேஷ் என் பாதையைத் தொடங்கிவைக்க, சுசித்ரா அதை நெறிப்படுத்தினாள்.

மதுரையில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தினர், என்னை அவர்கள் பள்ளி விழாவில் பேச அழைத்தனர். அப்போது எனக்கு வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாகக் கூற, என் மாணவி சுசித்ராவை அழைத்தனர். எட்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி, ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கு தலைமை விருந்தினராகச் சென்ற அற்புதம் அன்று நிகழ்ந்தது.

கலாம் போல் ஆகலாம்

பேச்சுப் போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் முதன்மை பெற்ற மாணவர்களே இந்த இயக்கத்தின் முதன்மைப் பொறுப்புகளில் இருக்கின்றனர். நான் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் அவர்களின் வழிகாட்டியாக உள்ளேன். கலாம் பேரைச் சொல்லி காசு சம்பாதிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. கலாம் குறித்துப் பேசும் மேடைகளில் நாங்கள் காசு வாங்குவதில்லை. இதுவரை 50-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவரைப் பற்றி மட்டுமே மாணவர்கள் பேசியுள்ளனர். 99 மேடைகளில் அவர் குறித்துப் பேசிவிட்டு, 100வது மேடைக்கு கலாமை அழைக்கலாம் என்றிருந்தோம். அவரை சிறப்பு விருந்தினராக்கி ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்த நினைத்த எங்களை, அழவைத்து மறைந்துவிட்டார்.

பேச்சு மூலம் பள்ளிகள், கல்லூரிகள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், பொது இடங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்திருக்கின்றனர் என் மாணவர்கள். அவர்கள் வருங்காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் நிச்சயம் சிறந்த குடிமகன்களாக ஆவார்கள். மாணவர்கள் தங்களின் பேச்சையும், வாழ்க்கையையும் ஒரே மாதிரி வாழ எண்ணுகின்றனர். தன் பெற்றோர்களுக்கும் புரிய வைக்க முயல்கின்றனர். சமூக சேவைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதே தங்களின் வருமானத்தில் பாதியைத் தங்களின் கிராமத்துக்கு அளிப்பதாக உறுதிபூண்டுள்ளனர்.

இதுவரை இத்திட்டத்தில் 18 கிராமங்கள் இணைந்துள்ளன. இன்னும் சில வருடங்களில் 100 கிராமங்கள் இதில் இணையும். என் வாழ்நாளில் குறைந்தது 1000 கிராமங்களையாவது இணைக்கவேண்டும் என்பது இலக்கு. இதற்காக ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பேசிவருகிறோம். அதில் சிலர் கலாம் மாணவர் இயக்கத்தில் தானாகவே இணைகின்றனர்.

தற்போது வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளிலிருந்தும் பேச அழைப்புகள் குவிகின்றன. இதனால் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் பெறும் முயற்சியில் இருக்கிறோம். பேச்சுப் போட்டிகள் மூலமாக படிப்பு எவ்விதத்திலும் தடைபடுவதில்லை, பேசும்போது மாணவர்களின் மூளைக்கான பயிற்சி அதிகரித்து, அவர்கள் முன்னைவிட விரைவில் பாடங்களைப் படித்து முடித்து விடுகின்றனர்.

சைகை ஒலிப்பு முறை

தமிழ் எழுத்துக் கற்றலை மேம்படுத்த ஒவ்வொரு எழுத்துக்கும் சைகை ஒலிப்பை அறிமுகப்படுத்தினோம். இரு கைகளையும் நீட்டி, மடக்கும் நாக்கை மடித்து என ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முறையைக் கண்டறிந்தோம். இதைக் கண்ட அரசு எங்களின் பள்ளிக்கு வந்து படமெடுத்து இந்த முறையைக் காணொலி சி.டி.க்களாக்கி வருகிறது. சி.டி. தயாரானவுடன் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்று கல்வித்துறையினர் கூறியுள்ளனர்.

அடுத்ததாக உச்சரிப்பை மேம்படுத்த தமிழ் மதிப்பீட்டுக் கருவியை உருவாக்கினோம். அதில் 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்காக பயன்பாட்டில் உள்ள அனைத்து தமிழ் எழுத்துக்களையும் சேர்த்து ஒரு பத்தியைத் தயார் செய்தேன். விருப்பமுள்ள மாணவர்கள் இணைந்து இந்தப் பத்தியை வாசிக்கலாம். இதை உலக சாதனை நிகழ்ச்சியாக உருவாக்குகிறோம்; முடியும் என்பவர்கள் வந்து வாசியுங்கள் என்றவுடன் அனைத்துக் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்துகொண்டு வாசித்தனர். இதனால் எங்கள் பள்ளி மாணவர்களின் உச்சரித்தல் முறை தி பெஸ்ட் என்று சொல்வேன். உச்சரிப்பு சரியாக இருக்கும்போது சக்கரங்கள் நன்கு வேலை செய்து நோய்கள் குணமடையும் என்பது முன்னோர் கூற்று.

அத்தோடு, தமிழ் எழுத்துக்களை நினைவில் கொள்ள கோத்தல் உத்திகளைப் பயன்படுத்துகிறேன். கக், கங், கச்.. என நீளும் கோத்தல் வார்த்தைகளை குழந்தைகள் குதூகலத்துடன் சொல்கின்றனர்.

முனைவர். முதல் வகுப்பு ஆசிரியர்

தமிழ் மீதான ஆராய்ச்சியைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறேன். முனைவர் படிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. பட்டம் பெற்றதும் முனைவர். முதல் வகுப்பு ஆசிரியர் என்று சொல்ல ஆசைப்படுகிறேன். முனைவர் பட்டம் பெற்றவர்கள் கல்லூரிகளில்தான் பெருமளவு பணிபுரிகிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு முனைவர் தேவையில்லை. முளைவிடும் பிஞ்சுகளுக்குத்தான் அவர்கள் தேவை. அதற்காகவே நான் முனைவர் ஆய்வை முடித்து, முதல் வகுப்புக் குழந்தைகளுக்குக் கற்பிக்க ஆசைப்படுகிறேன்'' என சொல்லும் அன்பாசிரியர் சபரிமாலாவின் வார்த்தைகளில் தெறிக்கிறது நம்பிக்கையும் உறுதியும்.

ஆசிரியர் சபரிமாலாவின் தொடர்பு எண்: 9443398574

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x