Published : 03 Aug 2021 06:05 PM
Last Updated : 03 Aug 2021 06:05 PM
''நான் இந்த வழக்குக்கான தீர்ப்பை எனது இதயத்திலிருந்து எழுத நினைக்கிறேன். மூளையிலிருந்து அல்ல... இவ்வழக்கு தொடர்பான புரிதலுக்காக எனக்கு உளவியல் கல்வி தேவைப்படுகிறது. அதற்கான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்”
- தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கையாண்டவிதம் அனைவரிடத்திலும் அவருக்குப் பாராட்டைத் பெற்றுத் தந்தது.
2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை மாறியுள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இதுகுறித்த விவாதம் தொடர் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் நேர்மறை விளைவுகள் சமூக, குடும்ப அமைப்புகள் மற்றும் சட்ட ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
ஆண், பெண் என்ற இரு பாலினங்கள்தான் மனித சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவதற்காக எல்ஜிபிடிக்யூ+ பற்றி காலங்காலமாக மறைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட வரலாறு மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக ஒரு சமூகம் இப்படித்தான் இயங்க வேண்டும் என்ற பிற்போக்குக் கட்டமைப்பை நோக்கி வலுவான கேள்விகள் எழுந்துள்ளன.
முதலில் இக்கேள்விகள் சிலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தன. சிலரோ இதுகுறித்து சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதன் விளைவு எல்ஜிபிடிக்யூ+ குறித்த புரிதல் மெல்ல மெல்ல அதற்கான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் உணர்வு ரீதியாகப் போராடிக் கொண்டிருக்கும் இம்மனிதர்களை உள்வாங்கிக் கொள்வதற்கு தொடர் பிரச்சாரங்கள் தேவை. அதனை ஏதோ வகையில் இந்த கரோனா காலமும் அதனை சாத்தியப்படுத்தி இருக்கிறது.
எல்ஜிபிடிக்யூ+ மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பணியிடங்களில் அவர்களுக்கு நேரும் சவால்கள் என்னென்ன என்று அவ்வமைப்புச் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
பன்மை சார்ந்த அடையாளப் புரிதல் இல்லை: கோபி ஷங்கர் ( தென்னிந்தியப் பிரதிநிதி, தேசிய மாற்றுப் பாலினத்தவர் கவுன்சில்)
”ஆண், பெண் எதிர் பால் ஈர்ப்பைத் தாண்டி, மனித இயல்பில் சுமார் 15க்கும் மேற்பட்ட பாலின ஒருங்கிணைவுகள் உள்ளன.
அவற்றை, பாலியல் ஒருங்கிணைவு (sexual orientation), ஆண் பெண் (எதிர் பால்) ஈர்ப்பு - ( hetero sexual), நம்பி ( gay), நங்கை (lesbian), ஈரர் (bisexual), பல் ஈர்ப்பினர் ( poly sexual), முழு ஈர்ப்பினர் ( pan sexual), ஒரு பால் நெளிமையினர் ( homo flexible), எதிர்பால் நெளிமையினர் ( hetero flexible), சுழியர் ( Asexual), ஈரார்வத்தினர் (bicurious), சுய ஈர்ப்பினர் (Auto sexual), இருமையின்மை ஈர்ப்பினர் (skoliosexual), ஆடவரீர்ப்பு (Androphilia), பெண்டிர் ஈர்ப்பு (Gyenophilia), திருநர் ஈர்ப்பினர் ( Transfans), அரை ஈர்ப்பினர் ( demisexual ), நடுமை சுழியர் (gay sexual), திருநர் நம்பி ( Transgay), திருநர் நங்கை (Translesbian) என்று குறிப்பிடுகிறோம்.
இவற்றில் திருநங்கைகள், நம்பி, நங்கை போன்றவர்கள் குறித்த புரிதல்கள் விழிப்புணர்வினால் ஏற்பட்டிருக்கிறது. எனினும் எல்ஜிபிடிக்யூ+ குறித்த புரிதல் முழுமையாக இன்னமும் சமூகத்தில் சென்றடையவில்லை.
மாற்றங்கள் குறித்துக் கூற வேண்டும் என்றால் சட்ட ரீதியாக மாற்றங்கள் நடந்துள்ளன. உதாரணத்துக்கு இடையிலிங்க ((Intersex Persons) அடையாளத்துடன் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் 13,000க்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே இடையிலிங்க குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்களை முதல் முறையாகத் தமிழகம்தான் கொண்டுவந்தது.
எல்ஜிபிடிக்யூ+ மக்களை வேலை ரீதியாக ஒருங்கிணைப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பெரிய ஆங்கிலப் பின்புலம் இல்லாத நம்பியோ (gay), நங்கையோ (lesbian) எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதே கார்ப்பரேட் நிறுவனத்தில் நகரத்திலிருந்து வரும் நம்பியோ ( gay), நங்கையோ (lesbian) எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
கார்ப்பரேட் நிறுவனங்களில் நியமிக்கப்படும் எல்ஜிபிடிக்யூ+ மக்களின் பாதுகாப்பு, உரிமைகள் நலன் சார்ந்து அதிகாரிகளுக்கு, அவர்கள் அச்சமூகத்தில் இருந்து வந்திருந்தாலும் எல்ஜிபிடிக்யூ+ மக்களின் பன்மை சார்ந்த அடையாளங்களைப் பற்றிய புரிதல்கள் அவர்களுக்கு இருப்பதில்லை.
அவர்கள் எல்ஜிபிடிக்யூ+ மக்கள் சார்ந்த வரலாறுகளையும், அறிவியல் சார்ந்த உண்மைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நாம் உறுதியாகக் கூற முடியாது. இதன் காரணமாக அங்கு வெறுப்புணர்வே விதைக்கப்படுகிறது. அனைத்துப் பன்மை சார்ந்த அடையாளங்களையும் புரிந்துவைத்துக் கொள்ளும்போதுதான் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.
இருப்பினும் பிற நிறுவனங்களைக் காட்டிலும் எல்ஜிபிடிக்யூ+ மக்களுக்கான உரிமைகள் அளிப்பதிலும் பணி ரீதியாக அவர்களை ஒருங்கிணைப்பதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சற்று முன்னால் உள்ளன.
அரசு நிறுவனங்களில் எல்ஜிபிடிக்யூ+ பற்றிய புரிதல் இல்லாத சூழலில், அங்கு பணி செய்யும் பிற பாலின ஈர்ப்பு மக்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? இத்தகைய சூழலில் எல்ஜிபிடிக்யூ+ மக்களின் திறன் பாதிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை பணியிடங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றுதான் கூறுவேன்” என்றார்.
மாற்றம் தொடரட்டும்: ஃபெலிக்ஸ் ( எல்ஜிபிடிக்யூ+ குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் 'ஓரினம்' இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்)
''2014ஆம் ஆண்டு முதலே சட்ட ரீதியாக எல்ஜிபிடிக்யூ+ சமூகம் மீதான பார்வை மாறிருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் மாறியுள்ளது.
நால்சா தீர்ப்புதான் இந்திய அளவில் எல்ஜிபிடிக்யூ+ பற்றிய புரிதலை ஏற்படுத்திய முற்போக்குத்தனமான தீர்ப்பு என்று கூறுவேன். ஆனால், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டங்களில் முற்போக்குத்தனங்கள் இல்லை. உதாரணத்துக்கு நால்சா தீர்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், தீர்ப்பின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தில் அதனை எல்லாம் குறிப்பிடவில்லை.
அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 377-வது சட்டப் பிரிவில் தன்பாலின உறவு என்பது சட்ட விரோதமானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாடு முழுவதும் எல்ஜிபிடிக்யூ+ மக்களால் இந்தத் தீர்ப்பு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
அடுத்தது சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எல்ஜிபிடிக்யூ+ தொடர்பான வழக்கைக் கையாண்ட அணுகுமுறையை வைத்துப் பார்க்கும்போதும், நீதித் துறைகளில் எல்ஜிபிடிக்யூ+ மீதான பார்வை அகன்றுள்ளது என்பதை உணரமுடிகிறது. எனினும் எல்ஜிபிடிக்யூ+ குறித்து சட்ட ரீதியாக மாற்றங்கள் வந்தாலும் நிஜ வாழ்க்கையில் இன்னமும் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு உங்கள் குழந்தை எல்ஜிபிடிக்யூ+ பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், அவர்களை நாங்கள் மாற்றித் தருகிறோம் என்று பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் சிலர் உளவியல் நிபுணர்கள் என்ற பெயரில் இன்னமும் இந்தச் சமூகத்தில் நம்முடன்தான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் எங்கள் முன் நிற்கும் அடிப்படையான யதார்த்தம். இதனை நாங்கள் எதிர்கொண்டுதான் இருக்கிறோம்.
அடுத்தது பணியிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் எல்ஜிபிடிக்யூ+ குறித்த புரிதல் நிறையவே இருக்கிறது. பல கார்ப்பரேட் நிறுவனங்களில் எல்ஜிபிடிக்யூ+ குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அந்நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகின்றன. அம்மாதிரியான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையில் நான் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியும். மேலும் அத்தகைய நிறுவனங்கள் எல்ஜிபிடிக்யூ+ பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சம் நேர்ந்தால் அவர்களைப் பாதுகாப்பதற்குமான கொள்கைகளையும் கொண்டுள்ளன.
ஆனால், இதற்கு எதிர்மாறாக கார்ப்பரேட் அல்லாத பிற நிறுவனங்களில் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினர் சுரண்டப்படுகின்றனர் என்றுதான் கூற வேண்டும். உதாரணத்துக்கு எங்கள் அமைப்பிடம் உள்ள திருநங்கைகளைச் சில நிறுவனங்கள், பணியாளர்கள் தேவைக்காக அணுகும். ஆனால் அந்நிறுவனங்கள் அவர்களுக்கு அளிக்கும் சம்பளமோ சராசரி நபருக்கு அளிக்கப்படும் சம்பளத்தைவிட குறைவாகத்தான் இருக்கும். மேலும் இதுபோன்ற நிறுவனங்களில் எல்ஜிபிடிக்யூ+ எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஏராளம். அடுத்தது அரசு அலுவலகங்களை எடுத்துக்கொண்டால், எல்ஜிபிடிக்யூ+ சமூகம் சார்ந்த புரிதல் சற்றும் இல்லை. இதுதான் நிலை.
இம்மாதிரியான சூழல் இருப்பின் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினர் அரசு நிறுவனங்களை எப்படி அணுகுவார்கள்? இம்மாதிரியான நிறைய குறைகள் உள்ளன. என்னைக் கேட்டால் பள்ளிக் கல்வியிலிருந்தே மாற்றம் தொடர வேண்டும். அப்போது அதுகுறிந்த புரிதலை நாம் பரவலாக ஏற்படுத்த முடியும்.
இந்த கரோனா காலம் மற்றும் சமீப ஆண்டுகளாகவே எல்ஜிபிடிக்யூ+ குறித்த விவாதங்கள் சமூக ஊடங்களில் நிறைய ஏற்படுகின்றன. இது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த விவாதங்கள் முடிவு நேர்மறையோ? எதிர்மறையோ? இது தொடர்பான விவாதங்கள் எழுப்பப்படுவதையே நாங்கள் மாற்றமாகத்தான் பார்க்கிறோம். இந்த மாற்றம் தொடர வேண்டும்” என்றார்.
நேர்மறையான வருங்காலத்திற்கான தொடக்கம்
சமூக வலைதளங்களில் எல்ஜிபிடிக்யூ+ மக்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு கருத்துகளைப் பதிவிட்டு வரும் மென்பொருள் வடிவமைப்பாளர் சூர்யா:
''இந்த கரோனா காலம் வீட்டிலிருந்தே பணி செய்யும் சூழலை எனக்கு ஏற்படுத்திவிட்டது. இதனால் என் திருமணம் தொடர்பாக வீட்டில் பேசத் தொடங்கினர். இதனால் என்னுடைய பாலின ஈர்ப்பைப் பற்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து வந்தேன். இதனைத் தொடர்ந்து சுயமரியாதை மாதமான ஜூன் மாதத்தில் எனது பெற்றோருக்குக் கடிதம் எழுதினேன். அதனைப் படித்த எனது பெற்றோர்களுக்கு என் வருங்காலம் குறித்த அச்சம் இருந்தது. எனினும் அவர்கள் என்னைப் புரிந்துகொண்டார்கள். நான் விரும்பும் வழியில் எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதில் எனக்கு ஒரு நேர்மறையான அனுபவம் கிடைத்திருக்கிறது. ஆனால், என் குடும்பத்தினர் எனக்களித்த அனுபவம் பிறருக்குக் கிடைக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது.
எனினும், எங்களைப் பற்றிய பார்வை சமூகத்தில் அதிகரித்துள்ளது என்று நிச்சயம் கூறுவேன். அதன் விளைவுதான் எல்ஜிபிடிக்யூ+ மக்களின் பிரச்சினைகள் தவிர்க்க முடியாத ஒரு சமூகப் பிரச்சினை எனும் பேசுபொருளாக உருவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சமூகத்தின் பெரும்பான்மை அடிப்படை சமூக அலகுகளான குடும்பங்களிலும் எல்ஜிபிடிக்யூ+ குறித்த இறுக்கம் தளர்வது தவிர்க்க முடியாத ஒரு வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், இந்த மாற்றங்கள் நடப்பதற்குப் பல காலம் பிடித்துள்ளது.
நேர்மறையான செயல்கள் நடக்கும் அதே நீதித்துறையில்தான் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில் முரணான தீர்ப்புகள் வந்துள்ளன.
பணியிடங்களைப் பொறுத்தவரையில் இங்கு இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமே எல்ஜிபிடிக்யூ+ குறித்த புரிதல் இருக்கிறது என்று கூறலாம். இதற்கு முக்கியக் காரணம், அந்தந்த நிறுவனங்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய எல்ஜிபிடிக்யூ+ மக்கள்தான். அவர்கள் இல்லையென்றால் இதுபோன்ற பார்வைகள் வந்திருக்குமா என்பது கேள்விக் குறித்தான். இதைத்தவிர, நகரங்களில் உள்ள சிறிய தொடக்கநிலை நிறுவனங்களில் எல்ஜிபிடிக்யூ+ மக்கள் பற்றிய புரிதல் வந்திருக்கிறது. இத்தகைய இடங்களில் சிரமங்கள் ஏற்படுவதில்லை.
ஆனால், அமைப்புசாரா மற்றும் சிறு குறு நிறுவனங்களில் பணிபுரியும் எல்ஜிபிடிக்யூ+ மக்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துவது அவர்களின் வேலைக்கு மட்டுமில்லாமல் உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் நிலைதான் இன்றும் இருக்கிறது. இதுபோன்ற இடங்களில் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டால் கசப்பான அனுபவமே கிடைக்கும்.
இதிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ள தொழிலாளர் நலச்சட்டத்தில் கூட இடமில்லா நிலைதான் உள்ளது.
எனினும் எங்கள் கண் முன்னால் சமீபத்தில் நடத்து வரும் மாற்றங்களை நேர்மறையான வருங்காலத்திற்கான தொடக்கமாகவே கருதுகிறோம்" என்று சூர்யா தெரிவித்தார்.
”என் சகோதரர்களே நான் என்னைக் கண்டுபிடிக்க முயன்றேன். அதில் தோல்வி அடைந்துவிட்டேன். என்னை மன்னியுங்கள். இந்தப் பயணம் மிகவும் கடினமானது நண்பர்களே. இந்தப் பயணத்தை எதிர்கொள்ள நான் பலவீனமாக இருக்கிறேன். என்னை மன்னியுங்கள்.
இறுதியாக இந்த உலகிற்கு... நீங்கள் கொடூரமானவர்கள். இருப்பினும் நான் உங்களை மன்னித்துவிட்டேன்”
- எகிப்தைச் சேந்த சாரா ஹெகேசி எழுதிய தற்கொலைக் கடிதம் இது.
எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படும் வானவில் கொடியைப் பறக்கச் செய்தற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் பாலியல் துன்புறுத்தல்களை சாரா அனுபவித்தார்.
விடுதலைக்குப் பின்னர் எல்ஜிபிடிக்யூ+ மக்கள் பற்றிய சமூகப் புரிதலுக்குத் தொடர்ந்து ஓயாமல் குரல் கொடுத்து வந்தார். எனினும் தனது வலிகளைத் தாங்கிக் கொள்ளாமல் சாரா தனது மூச்சைக் கடந்த ஆண்டு நிறுத்திக் கொண்டார்.
எகிப்தின் சாரா மட்டுமல்ல நம் நாட்டிலும் குரல்கள் நசுக்கப்பட்ட இம்மனிதர்கள் ஆங்காங்கே தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். அவர்களின் குரல்கள் வலிமையாக ஒலிக்கப்படவேண்டும். அதற்கான பாதையை முன்னெடுக்கும் கடமை ஒவ்வொரு அறிவார்ந்த சமூகத்துக்கும் உள்ளது. அதன்படி வரும் காலங்களை எதிர்நோக்குவோம்.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
* லாட்லி ஊடகக் கூட்டாய்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை.
‘இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் பார்வை மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும் லாட்லி (Laadli ) மற்றும் யுஎன்ஹெப்பிஏவுக்கும் (UNFPA) தொடர்பில்லை.’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT