Published : 08 Apr 2021 06:36 PM
Last Updated : 08 Apr 2021 06:36 PM

தேர்தல் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை இல்லை: உடனடியாக பணிக்கு திரும்ப முடியாமல் சிரமப்பட்ட ஆசிரியர்கள்

மதுரை

வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் மற்ற தேர்தல் பணிகளில் 6ம் தேதி காலை வரை பணிபுரிந்த பள்ளி ஆசிரியர்கள், மற்ற அரசு ஊழியர்களுக்கு நேற்று விடுமுறை வழங்காததால் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

தமிழகத்தல் நேற்று முன்தினம் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்-1, வாக்குச்சாவடி அலுவலர்-2,, வாக்குச்சாவடி அலுவலர்-3 ஆகியோராக பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

மற்ற தேர்தல் சார்ந்த பணிகளுக்கு அரசு ஊழியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். தேர்தலுக்கு முந்தைய நாளான 5ம் தேதி காலை 10 மணிக்கே ஆசிரியர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான பணி ஆணையை பெற்றுக் கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் அங்கு சென்றடைந்தனர்.

அன்று அவர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பொருத்தி மறுநாள் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் போலீஸார் பாதுகாப்புடன் அன்று இரவு வாக்குச்சாவடி அலுவலர்கள் அங்கேயே தங்கினர். தொடர்ந்து 6ம் தேதி நடந்த வாக்குப்பதிவுநாளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு பணி மேற்கொண்டனர்.

அதன்பின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எத்தனை வாக்குகள் பதிவாகின, அதற்கான விவரங்களை சேகரித்து இயந்திரங்களை எடுக்க வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஆவணங்கள் தயார் செய்தனர்.

இப்பணி இரவு 9 மணி முதல் வரை நடந்தது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் தேர்தல் அதிகாரிகள், வாகனங்களுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்காக சென்று வாக்குப்பதிவு ஆவணங்கள், இயந்திரங்களை போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இப்படி 4 முதல் 5 வாகனங்களுடன் தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றனர். இந்தப் பணி நேற்று காலை 5 மணி வரை நடந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குஎண்ணிக்கை மையங்களிலே தூங்காமல் காத்திருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்த பின்னரே வாக்குச்சாவடி அலுவலர்கள் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். ஏற்கெனவே முந்தைய நாள் போதிய அடிப்படை வசதியில்லாமல் சிரமப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், நேற்று காலை வரை வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கும் வரை தூங்காமல் விழித்திருந்தனர்.

இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணிபுரிந்த பள்ளி ஆசிரியர்கள், மற்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் நேற்று விடுமுறை வழங்கவில்லை. பள்ளிகளுக்கு, அரசு அலுவலக பணிகளுக்கும் திரும்படி அறிவுறுத்தப்பட்டனர். வேண்டுமென்றால் தாமாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.

அதனால், காலை வரை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக வீட்டிற்குச் சென்றுவிட்டு பணிக்கு திரும்ப முடியாததால் நேற்று பலர் விடுப்பு எடுத்தனனர். பலர், அனுமதி போட்டுவிட்டு பணிக்கு 10 மணிக்கு மேல் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலர்ளாக பணிபுரிந்த ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவு 9 மணி முதல் நேற்று காலை வரை எடுத்ததால் பெரும்பாலானவர்கள் நேற்று காலைதான் வீட்டிற்கே திரும்பினர். பலர் 50 கி.மீ., முதல் 60 கி.மீ., தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் பஸ் வசதியும் ஏற்பாடு செய்யவில்லை. அதனால், இரவுப் பணி முடிந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை. வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள், அவர்களை உறவினர் வீடுகளில் விட்டுவிட்டு பணிக்கு வந்தனர்.

தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தது. ஆனால், அதை செய்து கொடுக்காததால் இரவு முழுவதுமே பஸ்வசதியில்லாமல் வாக்குச்சாவடியிலே தங்கும்நிலை ஏற்பட்டது. இனியாவது வரும் காலங்களில் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு அடுத்த நாள் வாக்குச்சாவடிகளில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x