Published : 20 Feb 2021 07:27 PM
Last Updated : 20 Feb 2021 07:27 PM

திருப்பரங்குன்றத்தில் மயில் சிலை; செல்லூரில் கபடி வீரர்கள் சிலை: மதுரையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாநகராட்சி ரவுண்டானாக்கள்

மதுரை 

மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு ரவுண்டானாவில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கபடி வீரர்கள் சிலையும், திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் ரூ.10 லட்சத்தில் மயில் சிலையும் இன்று திறக்கப்பட்டது.

மதுரையின் கலாச்சாரத்தையும் தொன்மையையும் போற்றும் வகையிலும், வெளியூர் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் அதை பார்ப்பதற்காகவும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சந்திப்பு ரவுண்டானா பகுதிகளில் மதுரையின் பாரம்பரிய விளையாட்டுகளும், கலாச்சாரமும் அடையாளப்படுத்தப்படுகிறது.

அந்த அடிப்படையில், பாத்திமா கல்லூரி ரவுண்டானாவில் மதுரையின் புகழைப் போற்றும் வகையில் மீனாட்சியம்மன் தேரும், திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சியை போற்றும் வகையில பழங்காநத்தம் ரவுண்டானாவில் பத்து தூண்களும், ஆரப்பாளையம் ரவுண்டானாவில் மதுரை பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிகட்டு காளை சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது முருகபெருமானின் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் ரூ.10 லட்சத்தில் மயில் சிலையும், செல்லூரில் ரூ.19 லட்சத்தில் கபடி வீரர்களுக்கான சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதுப்பொலிவுப்படுத்தப்பட்ட இந்த ரவுண்டான சிலைகள் திறப்பு விழா இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு இந்த ரவுண்டா சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மதுரை மாநகராட்சியின் சார்பில் செல்லூரில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கபடி வீரர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பூங்காக்கள், எப்பொழுதும் அழகாக இருப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து நிரந்தரமாக தண்ணீர் இருப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

செல்லூர் பகுதிக்கே பெருமை சேர்க்கின்ற வகையில் இந்த கபடி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் பேஸ் பால் விளையாட்டு, வாலிபால் விளையாட்டு. டென்னிஸ், ஹாக்கி, புட்பால் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கபடி வீரர்களைப் போற்றும் வகையில் மதுரை செல்லூரில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஓர் அமைச்சராக மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து உள்ளோம். பெத்தானியாபுரத்தில் இருந்து பாண்டிக்கோவில் வரை வைகை ஆற்றின் இருபுறமும் விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பெத்தானியாபுரத்தில் இருந்து சமயநல்லூர் சுற்றுச்சாலை வரை ரூ.28 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் கலாச்சாரமையம், பெரியார் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள என மதுரையில் எண்ணற்ற வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தடையின்றி 24 மணி நேரமும் கிடைப்பதற்கு முல்லைபெரியாறுலிருந்து ரூ.1295 கோடி மதிப்பீட்டில் குடிநீர் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வர இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x