Published : 05 Jun 2020 07:11 PM
Last Updated : 05 Jun 2020 07:11 PM

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட கொடூரம்: வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம்?

ஓவியம்: ராஜேஷ்

''நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில அதுக்கு இருக்கிற கம்பீரத்தைப் பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் அது அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும்''- 'யானை டாக்டர்' சிறுகதையில், வரும் ஜெயமோகனின் வரிகள் இவை.

கேரளாவில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசியைச் சாப்பிட்டு உயிரிழந்த கர்ப்பிணி யானை குறித்த அறிமுகம் தேவையில்லை. மனிதர்களை நம்பி அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்ட யானை, அதற்கு இத்தனை பெரிய விலையைக் கொடுத்திருக்கிறது.

உணவு என்ற பெயரில் வன விலங்குகளை வதைக்கலாமா? தமிழக வனத்துறை இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறது?

தஞ்சாவூர் மண்டல வனக் கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியம்:
''இது மிகவும் அரிதான, துயரமான சம்பவம். தமிழகத்தில் இத்தகைய சம்பவங்கள் ஏற்பட்டதில்லை. இங்கும் யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்கு வருவதுண்டு. இதைக் கண்காணித்துத் தடுக்கவே வனத்துறையில் அதி விரைவுப் படை அமைத்திருக்கிறோம். 15 காவலர்கள், ஒரு வாகனம், அவர்களுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் ஆகியவை இதில் அடக்கம். விலங்குகளை வனத்துக்குள் திரும்ப அனுப்பும்போது தோட்டத்தில் சிறிதளவாவது சாப்பிட அனுமதித்த பின்னரே அனுப்புவோம். பசியுடன் அவை திரும்பிச் செல்லாது. அதே நேரத்தில் சேதத்தை மதிப்பிட்டு விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கி இருக்கிறோம்.

கடந்த 15 ஆண்டுகளாகத்தான் யானைகள் அதிக அளவில், உணவுக்காக மனித வாழிடங்களைத் தேடி வரும் போக்கு அதிகரித்திருக்கிறது. சத்திய மங்கலத்தில் நான் பணியாற்றியபோது தினந்தோறும் லாரி, கரும்புகளை ஏற்றிக்கொண்டு போகும். அதிலிருந்து ஒரு கரும்பை யானைக்கு வீசிவிட்டுச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து யானை தினசரி கரும்புக்காகக் காத்திருந்தது. இதைப் பழக்கப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் எச்சரித்தோம். அவர்கள் கரும்பு வீசுவது நின்றபின், யானை சாலைக்கு வருவதும் நின்றது.

வன விலங்குகளின் எண்ணிக்கையும் தற்போது கணிசமாக அதிகரித்திருக்கும் நிலையில், வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்களில் முன்பெல்லாம் சோளம், கடலை உள்ளிட்ட பயிர்களையே விளைவித்து வந்தனர். தற்போது வாழை, கரும்பு போன்ற வேளாண்மையும் வனத்தில் போதிய உணவில்லாமையும் ஊருக்குள் யானைகளை வரவைக்கின்றன.

காயமுற்ற கர்ப்பிணி யானை தாக்குதலில் ஈடுபடாமல், தண்ணீரை நோக்கிச் சென்றது ஏன்?
பொதுவாக யானைக்கு உடல் உபாதை, காயங்கள் ஏற்படும்போது நீரை நோக்கியே செல்லும். யானையின் அடர் நிறம், வியர்வைச் சுரப்பிகள் இல்லாமை ஆகிய காரணங்களால், அவற்றின் உடல் சூடு இயல்பாகவே அதிகமாக இருக்கும். இதனாலும் தண்ணீரை யானைகள் விரும்புவது வழக்கம். பொதுவாகவே யானைகளுக்கு மனிதர்களைத் தாக்கும் சுபாவம் கிடையாது. வலிக்கும்போது தாக்குதல் நடத்துவது அதன் வழக்கமில்லை.

இயற்கையிலேயே வனத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவங்களை யானைகள் உட்கொள்ளும், அதனால் அவற்றுக்கு உப்பும் இனிப்பும் அதிகம் பிடிக்கும். அதனால் வீடுகளில் இருக்கும் உப்பு, வெல்லம், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், நிலத்தில் உள்ள பயிர்களையும் மோப்பம் பிடிக்கின்றன. அவற்றை உட்கொள்ளவே வீட்டுக்குள்ளும் வேளாண் நிலத்துக்குள்ளும் நுழைகின்றன. இதை இரண்டு விதங்களில் தவிர்க்கலாம்.

ஒன்று மனித வாழிடங்களுக்கு யானை வராமல் தடுப்பது, இரண்டாவது பயிர் சேதமான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது. இதை முறையாகச் செய்தாலே யானை உயிரையும், பயிர்ச் சேதத்தையும் தவிர்க்கலாம்'' என்றார் ராம சுப்பிரமணியம்.

இதற்கிடையே மசினகுடியைச் சேர்ந்த வனவிலங்குகள் நல ஆர்வலர் நைஜில், வேறு சில முக்கியக் கோணங்களை முன்வைக்கிறார். வன விலங்குகளுக்கு எக்காரணம் கொண்டும் மனிதர்கள் உணவளிக்கக் கூடாது என்றும் பயிர்களின் வகைகளை மாற்றி விவசாயம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார்.

''மனிதர்கள் - வனவிலங்குகள் இடையிலான மோதலே விலங்குகள் இறப்புக்கு முக்கியக் காரணம். அதிக முதலீடு போட்டு விவசாயம் செய்யும்போது அதை விலங்குகள் சேதப்படுத்தினால், மனிதர்களில் சிலர் கோபம் கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். சில கொடூர மனம் படைத்தோர் கல்லை வெடிக்க வைக்கும் மருந்தை வாங்கி, இரும்பு, கல் ஆகியவற்றை வைத்து அவுட்காய் என்னும் நாட்டு வெடிகுண்டைத் தயாரிக்கின்றனர். அதை உணவுப் பொருட்களுக்குள் மறைத்து நிலத்தில் வைக்கின்றனர். அவற்றைக் கடிக்கும் போதோ மிதிக்கும்போதோ விலங்குகள் வெடித்துச் சிதறுகின்றன. பெரிய மிருகங்கள் காயமடைகின்றன. இதுபோல நிறைய விலங்குகள் உயிரிழந்திருக்கின்றன. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதனால் மனிதர்களுக்கும் ஆபத்துதான்.

தெரிந்த நண்பர் ஒருவர் வனப்பகுதியை ஒட்டிய பண்ணை வீட்டில் வசித்தார். யானைகளுக்காக அடிக்கடி மரத்தில் தர்பூசணியைக் கட்டித் தொங்க விடுவார். நாளடைவில் யானையொன்று வந்து சாப்பிட ஆரம்பித்தது. அதைப் புகைப்படங்கள் எடுப்பவர், யானையை ரசிப்பார். தொடர்ந்து கூடுதல் உணவுப் பொருட்களை வாங்கி வைத்தார். சில நாட்கள் கழித்துத் தும்பிக்கையில் 12 அங்குலக் காயத்துடன் யானை திரும்பி வந்தது. நண்பர் உணவளிப்பதை உண்டு பழகிய யானை, எங்கோ சிறு வெடியுடன் இருந்த உணவுப் பொருளைச் சாப்பிட்டுக் காயம் பட்டது தெரியவந்தது.

அன்புக்காக அவர் செய்த செயலால், மனிதர்கள் மீதான எச்சரிக்கை அந்த யானைக்குப் போய்விட்டது. 3 மாதங்கள் தொடர் சிகிச்சையும் உணவும் கொடுத்தோம். மீண்டும் உணவளிக்கும் பழக்கத்தைத் தொடர வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு வனக்காவலர் ஒருவர், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று அதே யானைக்கு பழங்கள் கொடுத்துப் பழக்கிவிட்டார். இதற்குப் பழகிய யானை, இன்னும் சில யானைகளுடன் சேர்ந்து உணவுக்காக மனிதர்கள் வாழும் பகுதிக்கு வந்து காத்திருக்கிறது. காட்டின் பேரரசனைப் பிச்சை எடுக்க வைத்துவிட்டோமே என்று வேதனையாக இருக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் விலங்குகளுக்கு ஒருநாள் உணவு கொடுத்துவிட்டுப் போய்விடுகிறோம். அடுத்த நாள் அது இரை தேடாமல் நமக்காகக் காத்திருக்கிறது. கிடைக்கவில்லையெனில் பறித்துச் சாப்பிட முயல்கிறது. எக்காரணம் கொண்டும் நாம் அவற்றுக்கு உணவளிக்கவே கூடாது.

கோயில் யானைகளை ஒரே இடத்தில் கட்டி வைத்து, உணவளிப்பது சரியா?
கோயில் யானைகளின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. யானைகளுக்கு மண் மாதிரியான மென்மையான அடித்தளம் வேண்டும். அவற்றை நாள் முழுவதும் சிமெண்ட் தரையில் நிற்க வைப்பது தவறு. யானைகளுக்கு மரத்தின் பட்டைகள், கிளைகள், குச்சி போன்றவற்றால் நார்ச்சத்து கிடைப்பது அவசியம்.

கோயில்களில் யானைக்குக் கொடுக்கப்படும் சாப்பாடு, தேங்காய், பழம், வெல்லம் என புரோட்டீன் அதிகமுள்ள உணவால், அவை நாளடைவில் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகின்றன. யானைகளை மத சடங்குகளுக்காக ஓரிரு நாட்கள் கோயிலிலில் வைத்திருந்துவிட்டு, பசுமையான ஏக்கர் கணக்கில் நீளும் வெளியில் விட்டுவிட வேண்டும்.

அரசும் மக்களும் என்ன செய்யவேண்டும்?
யாரோ ஒருவர் உணவு கொடுத்த பழக்கத்தால்தான், வெடிமருந்தை உண்ட கர்ப்பிணி யானை வாயில் காயத்துடன், வேதனையோடு இறந்திருக்கிறது. சம்பவத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். காட்டுப் பன்றிக்கு வைத்த வெடி என்று கூறப்பட்டாலும் பன்றியைக் கொல்ல மட்டும் என்ன உரிமை இருக்கிறது? வேறுவழிகளில் அவற்றை விரட்டலாமே? மனிதர்களால் யாராவது மிதித்தால்கூட வெடித்துக் காயத்தை ஏற்படுத்த வல்லவை இந்த வெடிமருந்துகள்.

அவுட்காயைத் தடை செய்யவேண்டும். வெடி பொருட்கள் கிடைக்கும் மூலத்தைக் கண்டறிய வேண்டும். அரசு கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அதேநேரம் வனவிலங்குகளால் இழப்புக்கு ஆளாகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடையும் அரசு கால தாமதமின்றி வழங்க வேண்டும். வனத்துறையினர் விவசாயிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

பயிர் வகைகளை மாற்றலாம்
அதேபோல விவசாயிகள் தாங்கள் பயிரிடும் வேளாண்பயிர்களையும் மாற்ற வேண்டும். முன்பு ராகி, கம்பு, சோளம் என்று பயிரிட்டு வந்த மலையோர மாயர் சமூகத்தினர், யானைகளின் வருகையால் வெள்ளைப் பூண்டு, கிழங்கு வகைகள், முட்டைக்கோஸைப் பயிரிட ஆரம்பித்து விட்டனர். அவற்றை யானைகள் விரும்பிச் சாப்பிடுவதில்லை என்பதால் தற்போது பெரிய பிரச்சினையில்லை.

கோவையைச் சுற்றிலும் யானை அதிகம் சேதத்தை ஏற்படுத்த முக்கியக் காரணம், அங்குள்ள விவசாயிகள் அதிகம் பயிரிடும் வாழை, கரும்பு, தென்னை. குறைந்தபட்சம் எல்லையோரங்களிலாவது இவற்றைப் பயிரிடாமல் இருக்கலாம். ஆப்பிரிக்கப் பயணத்தின்போது ஒன்றைக் கவனித்தேன். வன எல்லைகளில் 50 அடி தூரத்துக்கு, வேலியைப் போல உயர மிளகாய் வகையை அம்மக்கள் பயிரிட்டிருந்தனர். அதீத உணரும் சக்தி கொண்ட யானைகள், கார நெடியால் அங்கு வருவதைக் குறைத்திருந்தன. இதை இங்கும் பின்பற்ற முயற்சிக்கலாம்'' என்றார் நைஜில்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x