Published : 30 Apr 2020 06:11 PM
Last Updated : 30 Apr 2020 06:11 PM
மண், இயற்கை நமக்களித்த விலை மதிப்பற்ற செல்வமாகும். அந்த மண்ணின் வளத்தையும் நலத்தையும் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்.
தற்போதைய சுழலில் விவசாயிகள் வருங்கால சந்ததியினருக்கு வளமான மண்ணை விட்டு செல்ல வேண்டும். மண் வளம் பெருக, பயிர் விளைச்சலை அதிகரிக்க மண் பரிசோதனை செய்வது முக்கியமான பங்கு வகிக்கிறது என்று வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வல்லுநர் கு. செல்வராணி விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
மண்ணிலுள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை அறிந்து சமச்சீர் உரமிடவும், நிலத்தின் களர், உவர் அமிலத்தன்மை பிரச்சனைகளைக் கண்டறிந்து தக்க சீர்திருத்தும் செய்திடவும், உரத்தேர்வு உரமிடும் காலத்தை அறிந்து உரச் செலவைக் குறைத்து மகசூலை அதிகரிக்கவும், நாம் இடும் உரம் பயிர்களுக்கு முழுமையாகக் கிடைத்திடவும் மண் பரிசோதனை செய்வது அவசியம்.
பரிசோதனைக்கு மண் மாதிரிகள் எடுக்கும் முறை:
பரிசோதனைக்கு எடுக்கும் மண் அந்த நிலத்தின் மொத்த தன்மையைப் பிரதிபலிக்க வேண்டும். பயிர்ச் சாகுபடி செய்வதற்கு முன்பே அல்லது கோடைக்காலத்தில் பயிர் இல்லாத தருணத்தில் மண் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 இடங்களிலிருந்து மண் எடுக்க வேண்டும். மரநிழல், வரப்பு, வாய்க்கால், எருக்குழி ஆகிய இடங்களிலிருந்து மண் மாதிரி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மண் மாதிரி எடுப்பதற்கு மண் வெட்டியால் ஆங்கில எழுத்து ‘ஏ’ போல் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பின்பு குழியின் இருபக்கத்திலும் அரை அங்குல கனத்திற்கு மண்ணை எடுக்க வேண்டும்.
நெல், கம்பு, கேழ்வரகு மற்றும் சிறுதானியப் பயிர்களுக்கு 15 செ.மீ. ஆழத்திலும், பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு 22 செ.மீ. ஆழத்திலும், தென்னை, மா மற்றும் மரப்பயிர்களுக்கு 30, 60, 90 செ.மீ. ஆழத்திலும் மூன்று மண் மாதிரிகள் எடுக்கவேண்டும்.
சேகரித்த மண்ணை நன்கு கலந்து கால் பங்கீடு முறையில் அரைகிலோ மண் வரும் வரை பங்கீடு செய்து ஒரு சுத்தமான துணிப்பையில் சேகரிக்கவும். அந்தப் பையின் மீது மண் மாதிரியைப் பற்றிய விவரங்களை (விவசாயி பெயர், விலாசம், சர்வே எண், தேதி, பயிரிடப்பட்ட பயிர்கள்) குறிப்பிட்டு மண் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT