Last Updated : 29 Apr, 2020 06:23 PM

 

Published : 29 Apr 2020 06:23 PM
Last Updated : 29 Apr 2020 06:23 PM

பிறந்து 9 நாளே ஆன பச்சிளங் குழந்தைக்கு முதுகில் கட்டி: சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் சலவைத் தொழிலாளி

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற பணமின்றி சலவைத் தொழிலாளி தவித்து வருகிறார்.

மானாமதுரை அழகர்கோவில் தெருவைச் சேர்ந்த சலவை தொழிலாளி முத்துப்பாண்டி. அவரது மனைவி அங்காள பரமேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் அங்காளபரமேஸ்வரிக்கு ஏப்.21-ம் தேதி மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு முதுகில் கட்டி இருந்தது.

இதையடுத்து அக்குழந்தை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் அங்கு கரோனா தொற்று பரவி வருவதால் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி அந்த குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அக்குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய பல லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதற்குரிய பணம் இல்லாததால் அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து குழந்தையின் தந்தை முத்துப்பாண்டி கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் 4 நாட்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஸ்கேன் எடுத்தபோது, முதுகுதண்டுவடத்தில் கட்டி இருப்பதால் நரம்பியல் மருத்துவர் அனுமதி பெற்றே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என தெரிவித்துவிட்டனர்.

மேலும் கரோனா பரவி வருவதால் தற்போது நரம்பியல் மருத்துவர் அனுமதி பெறுவது சிரமம். இதனால் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி ஏப்.27-ம் தேதி அனுப்பி விட்டனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பல லட்சம் ரூபாய் செலவாகும் என கூறிவிட்டனர். இதனால் பணமின்றி குழந்தையை வீட்டிலேயே வைத்திருக்கிறோம், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x