Published : 24 Mar 2020 09:13 PM
Last Updated : 24 Mar 2020 09:13 PM
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்தவாறே உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் லாக் டவுனை அமல்படுத்தியுள்ளன. ஏராளமான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. ஐ.டி. மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். மேலும் சிலருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், ஊடகங்கள் உண்மையான, தேவையான செய்திகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. எனினும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், ஹலோ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து அச்சுறுத்தும் செய்திகள் வெளியாகின்றன.
வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் மக்கள், தொடர்ந்து குவியும் செய்திகளால், அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவது எப்படி? இதுகுறித்து விரிவாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.
''இயல்பிலேயே இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், பெரிதுபடுத்தாமல் இருப்பது முதல் வகை. எனக்கு எந்த நோயும் வராது என்று அசிரத்தையாக இருப்பார்கள். எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன் என்று எதையும் பொருட்படுத்தாமல் இருப்பார்கள்.
இன்னொரு வகை, அதீதப் பதற்றத்துடன் இருப்பவர்கள். ஓசிடி (Obsessive compulsive disorder) எனப்படும் குறைபாட்டால் பயத்துடன் ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வர். உதாரணத்துக்கு, கைகளைத் திரும்பத் திரும்பக் கழுவுவது அவர்களின் அன்றாட வழக்கத்திலேயே இருக்கும். இந்த சூழலில் அச்சுறுத்தும் போலிச் செய்திகள் அவர்களின் மன அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்தும்.
மேலும் சிலர், அச்சுறுத்தல் செய்திகளால் Post-traumatic stress disorder ஆல் பாதிக்கப்படுவர். இது அவர்கள் செய்தியைப் படிக்கும்போதோ, கேட்கும்போதோ ஏற்படாது. சளி, இருமல் உள்ளிட்ட சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால் பயம் உருவாகும். அச்சுறுத்தும் கனவுகள் வரும். சுனாமியை நேரில் பார்த்தவர்களுக்கு சில மாதங்கள் கழித்துக்கூட அதே நினைவுகள் வருவது இந்த வகையைச் சேர்ந்ததுதான். இவர்களுக்கு நிச்சயம் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார் வந்தனா.
தற்போது எல்லோருக்குமே தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் எனச் செய்திகள் தடையின்றிக் கிடைக்கின்றன. செய்திகள், தகவல்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டே இருப்பது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், அது நம்மை அறியாமலே மனதில் அழுத்தத்தை ஏற்படுத்துமா, அதைத் தவிர்ப்பது எப்படி? என்பது குறித்தும் விளக்குகிறார்.
செய்திகளை உடனே பகிராதீர்கள்!
பிரேக்கிங் செய்தியை நாம்தான் முதலில் பகிர வேண்டும் என்ற ஆர்வம் நிறையப் பேருக்கு இருக்கிறது. ஒரு செய்தியை உடனடியாக நம்பி, அப்படியே அடுத்தவர்களுக்கு அனுப்புவது தவறு. உங்களுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது எனில், அதை ஒரு காகிதத்தில் குறித்து வையுங்கள். அதன் மூலத்தைத் தேடுங்கள், ஆதாரம் உள்ளதா என்பதைப் பரிசோதியுங்கள். உண்மையான செய்தியா என்பதைப் பகுத்தறிந்து அடுத்தவர்களுக்கு அனுப்புங்கள். இதன் மூலம் தேவையற்ற செய்திகள் மனதில் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம். அடுத்தவர்களையும் பீதியாக்காமல் இருக்கலாம்.
இதுபோன்ற உணர்வுபூர்வமான சூழலில் உடனடியாக முடிவெடுக்காதீர்கள். சில நிமிடங்கள் காத்திருந்து, யோசித்துச் செய்யுங்கள். இதுதான் இப்போதைய தேவை.
இடைவெளி விடுங்கள்
கரோனா உள்ளிட்ட காரணிகளால் அச்சுறுத்தல் சூழல் ஏற்படும்போது, மனதை வேறு வழிகளில் திருப்ப வேண்டும். பயமாக இருக்கிறது என்று குடும்ப உறுப்பினருடன் மனம் விட்டுப் பேச வேண்டும். நொடிக்கொரு முறை செய்திகளைச் சோதிப்பதை விட்டு, இடைவெளி விடவேண்டும்.
அதேபோல ஒரு குறிப்பிட்ட சூழலில் மனதில் பதற்றம் ஏற்படுகிறது என்றால் அமர்ந்து யோசிக்க வேண்டும். என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை நிதானித்துப் பார்க்க வேண்டும். அவை சரியா, தவறா என்று பகுத்தறிய வேண்டும். அதிகாரபூர்வ மருத்துவ நிபுணர்களின் வீடியோக்கள், பேட்டிகளைப் பார்த்துத் தெளிவடையலாம்.
இந்த நேரத்தில் குழந்தைகளை, குடும்பத்தை 24 மணிநேரமும் கவனிக்க வேண்டி இருப்பதால், குடும்பத் தலைவிகள் அதிக அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். குழந்தைகள் ஆன்லைனில் விளையாட நோ சொல்லாமல், அவர்களுக்கான கற்றல் வீடியோக்கள், விளையாட்டு என்று முறைப்படுத்தலாம்.
ஆன்லைன் கவுன்சிலிங்
தேவை உள்ள சூழலில் இணையம் வழியாகவே கவுன்சிலிங் பெறவும் வசதியுண்டு. ஆரம்பக்கட்டத்திலேயே இதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். எனினும் உண்மையான, நிபுணத்துவம் வாய்ந்த மனநில நிபுணர்களை அணுக வேண்டியது அவசியம்.
இதுவும் கடந்துபோகும்!
மனித மனம் இரண்டு, மூன்று நாட்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளும் இயல்பு கொண்டது. இதுவும் கடந்துபோகும் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். எல்லா மக்களும் தங்களுடைய தனி மனிதப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். தனி மனிதப் பொறுப்புணர்வே, சமூகப் பொறுப்புணர்வாக மாறும் என்பதை உணர வேண்டும். இந்த சிரமங்கள் அனைத்தும் என்னுடைய, என் குடும்பத்துடைய நலனுக்காகத்தான் என்று யோசித்தால் போதும், மன அழுத்தம் குறையும்'' என்கிறார் உளவியல் ஆலோசகர் வந்தனா.
தேவை நேர்மறை சிந்தனையே!
கரோனா வைரஸால் ஏராளமான தனி மனித, சமூக அச்சுறுத்தல்கள் உருவாகி இருந்தாலும் அதை மன அழுத்தமாக உணர வேண்டாம். உதாரணத்துக்கு 'வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன்' என்று கவலைப்படாமல் 'குடும்பத்துடன் நேரம் செலவிட முடிகிறதே!' என்றெண்ணி மகிழலாம். 'எனக்கு நோய் வந்துவிடும்' என்று பயப்படாமல், 'என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்வேன், அடிக்கடி கைகளைக் கழுவுவேன், இதனால் நோய் அபாயத்தைக் குறைத்துக் கொள்வேன்' என்று எண்ணலாம்.
'எல்லாக் கடைகளும் மூடப்படுகின்றன' என்று அச்சம் கொள்ளாமல், 'மருத்துவம், உணவு, மளிகைக் கடைகள் திறந்தே இருக்கின்றன' என்று நிம்மதி அடையலாம். நேர்மறையாக எண்ணிப் பழகுங்கள்.
கரோனா குறித்த பய சிந்தனையை விட்டு, விழிப்புணர்வு பெறுங்கள். சமூகப் பொறுப்புணர்வுடன் மிகுந்த முன்னெச்சரிக்கையாகச் செயல்படுங்கள். உங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, சமுதாயத்தையும் நலம்பெறச் செய்யுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT