Last Updated : 16 Mar, 2020 04:43 PM

 

Published : 16 Mar 2020 04:43 PM
Last Updated : 16 Mar 2020 04:43 PM

தென் மாவட்டங்களில் கோடை நீர்த் தேவையை எதிர்கொள்ள பிளாஸ்டிக் குடங்களின் உற்பத்தி இருமடங்காக அதிகரிப்பு: பரபரப்பாக இயங்கும் தேனி ஆலைகள்

தேனி

தென் மாவட்டங்களில் கோடை வறட்சியில் குடிநீர் தேவையை எதிர்கொள்ள பிளாஸ்டிக் குடங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், தேனியில் உள்ள பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதன் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தியுள்ளன.

தென் மாவட்டங்களில் கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே பகலில் மட்டுமல்லாது இரவிலும் புழுக்க நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாய் குறைந்து வருகிறது. ஆறுகளிலும் நீரோட்டம் இல்லை.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளாட்சிகளில் குடிநீர் விநியோக நாட்களுக்கான இடைவெளி அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான ஊர்களில் தற்போதே நீரை பல நாட்களுக்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.

இதனால் பிளாஸ்டிக் குடங்களின் தேவை இருமடங்கு அதிகரித்துள்ளது. நகர்ப்பகுதியில் பெரும்பாலும் மினரல் வாட்டர் போன்ற மாற்று குடிநீர் பயன்பாடு இருந்தாலும் கிராமங்களில் இதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. எனவே. கிராமப்புறங்களில் இன்னமும் குடங்களின் தேவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதை உணர்ந்த தேனியில் உள்ள குடம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்ற பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியை நிறுத்திவைத்துவிட்டு குடங்களை அதிக அளவில் தயாரித்து வருகின்றன.

இந்தக் குடங்கள் 18லி,12லி,11லி,7லி,3லி அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. உள்பாடு, வெளிப்பாடு, பொற்காலம் குடம், பேபி குடம் என்று பல்வேறு வடிவங்களில், கொள்ளளவுகளில் இவை உற்பத்தி ஆகின்றன.

பெட்ரோலிய பொருட்களில் இருந்து வெளிப்படும் மூலப்பொருட்கள் மூலமே குடம் தயாரிக்கப்படுகிறது. சிறிய உருண்டை வடிவில் உள்ள இப்பொருட்கள் அதிக வெப்பத்தின் ஊடே சென்று கூழாகி நெகிழ்வுத்தன்மையை அடைகிறது.

அதிக அழுத்தத்தில் பட்டையாக வெளிப்படும் இந்த பிளாஸ்டிக்கின் ஒரு பகுதி மூடப்பட்டு அதில் காற்று செலுத்தப்படுகிறது. உள்ளே உள்ள ‘டையினால்’ பிளாஸ்டிக் கூழ் குடத்தின் வடிவத்திற்கு மாறுகிறது.

பின்பு குடத்தின் கீழ்ப்புறம், மேல்பகுதியில் உள்ள தேவையற்ற பகுதி வெட்டி அகற்றப்பட்டு குளிர்விக்கப்படுகிறது. ஏறத்தாழ ஒரு நிமிடத்திலேயே முழுக்குடமும் இந்த வகையில் தயாராகிவிடுகிறது.

இது குறித்து தேனி ஐஸ்வர்யம் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பக உரிமையாளர் அசோக் கூறுகையில், "பிஇ பட்டதாரியான நான் சுயதொழிலில் ஆர்வம் ஏற்பட்டு இத்தொழில் செய்து வருகிறேன். கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை வழக்கமான குடத்தின் மாடலைத்தான் விரும்புவார்கள்.

ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் பொற்காலம் எனப்படும் உருண்டை வடிவிலான குடம் பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் அதிக வெயிட்டான குடத்தை விரும்புவர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடத்தின் தேவை இரு மடங்காக உயர்ந்துள்ளது. எனவே அதற்கேற்ப உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்த விலையில் ரூ.12 முதல் ரூ.45 வரை பல்வேறு குடங்கள் விற்பனை செய்யப்படுகின்றன" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x