Published : 08 Mar 2020 09:58 AM
Last Updated : 08 Mar 2020 09:58 AM

நெய்தல் மாநகரின் 'மீன்காரிகள்': காசிமேடு பெண்களின் கதை!

காசிமேட்டில் கருவாட்டை உலர வைக்கும் பெண்.

சென்னை மாநகரமே உறங்கும் நேரத்தில் காசிமேட்டின் மீனவப் பெண்கள் விழித்துக் கிடக்கின்றனர். அவர்களின் வேலை நேரம் நள்ளிரவு ஒரு மணிக்குத் தொடங்குகிறது. முந்தைய நாள் வேலை அலுப்பால் களைத்துக் கொஞ்சம் அசந்துவிட்டால் அவ்வளவுதான். நல்ல மீன்களை அவர்களால் ஏலத்தில் எடுக்க முடியாமல் போய்விடும். வார நாட்களில் நள்ளிரவு ஒரு மணிக்குத் தொடங்கும் ஏலம், 3-4 மணி வரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6 மணிவரை கூட நீள்கிறது.

கடலுக்குச் சென்று மீன்பிடிப்பது ஆண்கள் என்றால், கரையில் அதன் வணிகம் முழுவதும் பெண்களை சார்ந்துதான் நடக்கின்றது. மீன்கள், இறால்கள், நண்டு என கடல் உணவுப்பொருட்களை ஏலம் எடுத்து, காசிமேடு துறைமுகத்திலேயே அமர்ந்து விற்பனை செய்யும் பெண்கள், மீன் கூடைகளை தலையில் சுமந்துகொண்டு தெருக்களில் கூவிக்கூவி விற்கும் பெண்கள், மீன்களை சுத்தம் செய்பவர்கள், ஏலத்தில் கடைசியாக குறைந்த விலைக்குக் கிடைக்கும் மீன்களை வாங்கி விற்பவர்கள் என காசிமேடு - திருவொற்றியூரை சுற்றியுள்ள பவர்குப்பம், நாகூரான்தோட்டம் உள்ளிட்ட மீனவர் பகுதி பெண்களின் வாழ்வியலும் வாழ்வாதாரமும் சேர்ந்த மீனும் மீன் சார்ந்த தொழில்களால் நடக்கிறது சென்னையின் நவீன நெய்தல்நிலம்.

அப்படி மீன் விற்பனை செய்யும் சில பெண்களை காசிமேடு துறைமுகத்தில் ஒரு மாலை வேளையில் சந்தித்தேன். ஒய்வே அறியாத முகங்கள்; உப்புக்காற்றால் கருத்த உடல்; கட்டுக்குலையாது இருக்க வேண்டும் என்கிற முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் அணியப்பட்ட புடவை இதுதான் அவர்களின் புற அடையாளங்கள். ஆனால், அவர்களின் அகச்சுரத்து, குடும்ப வாழ்க்கை உட்பட பல சோகங்களுக்கு இடையிலும் புன்னகையும் வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் நிரம்பக் கிடக்கிறது.

இடமிருந்து வலமாக: கல்வி, தேசம், தேசராணி, தாட்சாயிணி, ஜனகா, முத்துலட்சுமி, காஞ்சனா

"எங்க அம்மா இங்குதான் மீன் வித்தாங்க. 12 வயதிலிருந்து அம்மா மீன் விற்பதை பார்த்துதான் வளர்ந்தேன். அவர் செத்தப் பிறகு அதே வேலையை நான் பார்க்கிறேன். 20 ஆண்டுகளாக மீன் விற்கிறேன். இந்த தொழில் செய்ய ஆரம்பித்ததிலிருந்து தூக்கம் போயிடுச்சு. இரவு 8 மணிக்குத் தூங்கினால் தான் எங்களால் 1 மணிக்கு எழுந்திருக்க முடியும். அந்த நேரத்துக்கு வந்தால் தான் நல்ல மீன் கிடைக்கும். கொஞ்சம் லேட்டா 3 மணிக்கு வந்தா நல்ல மீன் கிடைக்காது" என்கிறார், காஞ்சனா(44).

இதே பகுதியைச் சேர்ந்தவர்தான் காஞ்சனா. 2-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவரது கணவர் இங்குள்ள படகுகளுக்குத் தண்ணீர் கேன் விற்பனை செய்கிறார். வாட்டும் வறுமையைப் போக்க மீன்களின் விற்பனையில் இறங்கியுள்ளார் காஞ்சனா.

காசிமேட்டில் ஞாயிற்றுக்கிழமை என்றால் 12 மணி வரை வியாபாரம் நடக்கும். மற்ற நாட்களில் 9-10 மணிக்கு முடிந்துவிடும்.

"ஒரு நாளைக்கு 500-1000 ரூபாய் வரை இதில் கிடைக்கும். எனக்கு உதவிக்குத் தங்கை இருக்கிறார். அவளுக்கு உணவு, டீ செலவை பார்த்துக்கொள்வோம். நஷ்டமோ லாபமோ அவளுக்கு ஒரு சிறிய தொகையை கொடுப்பேன்", என்கிறார் காஞ்சனா.

காஞ்சனாவுக்கு உதவியாக இருக்கும் தாட்சாயிணி(39) அவருக்குத் தங்கை உறவுமுறை. ஏலத்தில் எடுக்கப்பட்ட மீன்களை சுத்தம் செய்யும் வேலை செய்கிறார். "இந்த வேலையில ஒரு நாளைக்கு 100 ரூபாய் பாக்குறது பெருசு" என்கிறார் தாட்சாயிணி.

மீன்களை சுத்தம் செய்யும் தாட்சாயிணி

"என் வீட்டுக்காரர் கஞ்சா அடிச்சி, குடிச்சி ரத்தம் கக்கி இறந்துவிட்டார். 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். மகளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. திருட்டு வழக்கில் அவளுடைய கணவன் ஜெயிலில் இருக்கிறான். அவளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அந்த 3 குழந்தைகளையும் சேர்த்து நான் தான் பார்த்துக்கொள்கிறேன்" எனக்கூறும் தாட்சாயிணி அரிவாள்மனை, கத்தியைக்கொண்டு மீன்களை சுத்தம் செய்து கீறல்கள் ஏறிய தன் கைகளை காண்பிக்கிறார்.

கீறல் ஏறிய தன் கைகளை காண்பிக்கும் தாட்சாயிணி

ஒரு கூடை மீன்களை சுத்தம் செய்வதற்கு ரூ.100-150 வரை கிடைக்கும். இது மீன் வகைகளை பொறுத்து மாறுபடும். ஒரு கிலோ சிறிய இறாலுக்கு 40 ரூபாய், பெரிய இறாலுக்கு 30 ரூபாய், சிலர் அதிலும் பேரம் பேசி 20 ரூபாய் தான் தருவார்கள் என்கின்றனர். இப்படி இரட்டை இலக்க வருமானம் தான் இவர்களுக்குப் பெரும்பாலான நாட்களில் கிடைக்கிறது.

"மீன் ஏலம் வாங்கி வந்தவர்கள், மீன்களை சுத்தம் செய்ய யாரிடம் இஷ்டப்பட்டுக் கொடுக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் கிடைக்கும். மீன்களை சுத்தம் செய்வதற்கு தேவையான தண்ணீருக்குக்கூட 30 ரூபாய் தர வேண்டும். கிடைக்கும் அற்ப காசில் 1,200 ரூபாய் வீட்டுக்கு வாடகை வேறு செலுத்த வேண்டும்" என நொந்துகொள்கிறார் தாட்சாயிணி.

மீனவப் பெண்களில் பலருடன் பேசியதில் பெரும்பாலும் அவர்களின் கணவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இறந்துவிட்டனர் அல்லது ஏதேனும் சிக்கல்கள் காரணமாக கணவருடன் இருந்து பிரிந்து வாழ்கின்றனர். இத்தகைய பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது கடல் தான்.

"கணவர் குடித்துக்குடித்தே இறந்து விட்டார். அதன்பிறகு ஒரு வருடமாகத்தான் மீன்களை சுத்தம் செய்து பிழைக்கிறேன். குடியை நிறுத்த நம்ம முயற்சித்தாலும் முடிவதில்லை. கடலுக்குப் பல நாட்கள் போய் வருவதால் குடிப்பேன் என்கின்றனர். உடம்பு வலியைப் போக்க குடிக்கின்றனர்" என்கிறார் முத்துலட்சுமி.

"என் வீட்டுக்காரர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி 'ஹார்ட் அட்டாக்'கால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது இடுப்புக்கு மேல வளர்ந்த ஒரு பையனும் 7 மாதக் குழந்தையும் இருந்தார்கள். இப்போ அக்காவுக்குத் துணையா மீன் வியாபாரம் செய்றேன்" என்ற 40 வயது குரலுக்குச் சொந்தக்கார மீனவப் பெண்ணின் பெயர் 'கல்வி'. கல்வி உதவிசெய்யும் அக்காவின் பெயர் 'தேசம்'. 'கல்வி'க்கான பெயர்க்காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், 'தேசம்', 'தேசராணி' ஆகிய பெயர்கள் குலதெய்வங்களின் பெயர்கள் என்கின்றனர்.

கல்வி 5-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

"கல்வின்னு பேரு வச்சிட்டு அவளுக்குக் கல்வியே வரவில்லை" என கல்வியின் அக்கா தேசம் சொல்லும்போது கல்வி உட்பட அங்கிருந்த பெண்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தனர்.

மீன்கள் விற்கும் தேசம்

"கணவர் கடலுக்குச் சென்றவர் தான். குடித்துக் குடித்து இறந்துவிட்டார். ஒரு மகன் 10-வது படித்திருக்கிறான். அதன் பிறகு பள்ளிக்கூடம் வேண்டாம் என நானே சொல்லிவிட்டேன். அவன் படிக்கிறேன் என்றுதான் சொன்னான். வேலைக்குப் போகலாமே என நான் தான் வேண்டாம் என சொல்லி விட்டேன். கணவர் உசிரோட இருந்தப்போ தினமும் குறைஞ்சது 500 ரூபாய் தருவார். இப்போது அவர் இல்லை. நான் தான் பாத்துக்கணும்" என்கிறார் கல்வி. 'தேசத்துக்கு' எவ்வளவு தூரம் மீன் வியாபாரம் ஆகிறதோ அதற்கு ஏற்ப 'கல்விக்கு' ரூபாய் கிடைக்கும்.

கல்வியின் அக்கா தேசம் (48) 20 ஆண்டுகளாக மீன் விற்கிறார். 2-ம் வகுப்பு வரை படித்திருக்கும் தேசத்தின் 23 வயது மகன், குடி போதையில் 'ஹார்ட் அட்டாக்'கால் இறந்துவிட்டார்.

மீன்களை எப்படி வாங்குவது என்பதை நம்மிடம் பகிர்ந்தார் தேசம்.

"மீன் நல்ல மீனா அல்லது கெட்ட மீனா என்பதைத் தொட்டுத் தடவிப் பார்க்க வேண்டும். கொழகொழன்னு சொறி சொறியா இருந்தால் கெட்ட மீன். நல்லா கெட்டியா உறுதியா இருந்தால் அது நல்ல மீன். வழவழன்னு கல்லுப் போல இருந்தால் நல்லா இருக்குன்னு அர்த்தம்" எனக்கூறும் தேசத்தின் வார்த்தைகளில் 20 ஆண்டுகால அனுபவம் தெறித்தது.

"வஞ்சிரம் என்றால் கிலோ ரூ.600 போகும். ஒரு நாளைக்கு 500 முதல் 5,000 வரை கூட கிடைக்கும். ஒரு நாள் கிடைக்கும். ஒரு நாள் நஷ்டம் வரும். இது சூதாட்டம் போல. போட்டால் எடுக்கலாம். வந்தால் லாபம், இல்லையென்றால் நஷ்டம். ஒரு நாளைக்கு 5000 வரை கூட நஷ்டம் ஆகியிருக்கிறது" என்கிறார் தேசம்.

"கணவர் கடலுக்குத்தான் செல்கிறார். ஒழுங்காக காசு கொடுக்க மாட்டார். காச குடிச்சி செலவு செய்வார். என் அம்மா, ஆயா எல்லோரும் இங்குதான் மீன்களை முன்பு ஏலம் விடுவார்கள். இப்போது அவர்கள் இருவரும் இல்லை" எனும் தேசத்தின் வார்த்தைகள், மீனவப் பெண்கள் பலரின் துயரங்களாக இருக்கிறது.

மதுப்பழக்கத்தால் தன் வீட்டு ஆண்களின் இறப்பும், குடும்பச் செலவுகளுக்காக பெண்களிடம் பணம் கொடுக்காததும் மீனவப் பெண்களை மிகவும் விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

காசிமேட்டில் கருவாடு விற்பனை செய்பவர்

தூக்கமும் ஓய்வும் இவர்களுக்கு பலநாள் கனவாக இருக்கிறது. மதியம் வரை கடற்கரையில் வியாபாரத்தை முடித்துவிட்டு மதியம் வீட்டுக்குச் சென்று மறுபடியும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.

"சாயங்காலம் தூங்கினால் இரவு வரை தூங்கிக்கொண்டு தான் இருப்பேன். தூங்கிக்கிட்டே இருக்கேன், பேச மாட்டறேன்னு வீட்டுக்காரர் திட்டிக்கிட்டே இருப்பார்" என தேசம் கூறுவதைக் கேட்டு மற்ற பெண்கள் கவலை மறந்து சிரிக்கின்றனர்.

உட்கார்ந்துகொண்டே மீன்களை விற்பனை செய்வதால் தேசத்தின் கால்கள் வீங்கியிருக்கின்றன. கழுத்து வலி, முதுகு வலி என இங்கிருக்கும் பெண்களின் உடல்நல பிரச்சினைகள் ஏராளம். தூக்கமும், ஓய்வும் இல்லாத அழுத்தம் நிறைந்த வாழ்க்கையால் வயிறு தள்ளி, உடல் ஊதி, வாலிப்பை பலிகொடுத்த உடம்போடு இருக்கிறார்கள் அப்பெண்கள்.

"கணவருக்கு உடம்பு சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லை. அதனால் மீன்களை சுத்தம் செய்கிறேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 500 ரூபாய் சம்பாதிக்கலாம். மற்ற நாட்களில் 200-300 தான் கிடைக்கும். குனிந்துகொண்டே 3 மணிநேரத்திற்கும் மேல் இந்த வேலையை செய்வதால் இடுப்பு வுட்டுப் போயிடும்" என்கிறார் ஜனகா.

காசிமேட்டில் இருந்து மீன்கள் வாங்கி திருவொற்றியூரில் தலையில் சுமந்துகொண்டு தெருக்களில் விற்கும் தேவியிடம் (41) பேசினேன்.

தெருக்களில் மீன்கள் விற்கும் தேவி

"என் கணவர் இறந்துவிட்டார். 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எப்படியோ மீன் விற்க கற்றுக்கொண்டேன். தலையில் சுமையை ஏற்றிக்கொண்டு விற்பதால் தலை வலிக்கும். அப்போது மாத்திரை வாங்கி போட்டுக்கொள்வேன். அரசாங்கம் ரிக்‌ஷா மாதிரி கொடுத்தால் நல்லது. எனக்கு ஏற்கெனவே 'வீசிங்' பிரச்சினை இருக்கிறது. பனிக்காலத்தில் குளுமையாக இருக்கும். ஐஸில் கை வைத்தால் உடம்பு முடியாமல் போய்விடும். அப்போது வாரத்துக்கு ரெண்டு நாட்கள்தான் தொழில் செய்ய முடியும். இந்த நிலையில், தண்டலுக்கு 20,000 ரூபாய் வாங்கியிருக்கிறேன். தினமும் 300 ரூபாய் கட்ட வேண்டும்" என்கிறார்.

இங்கிருக்கும் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை கடன். போதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கி அதற்கு மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி செலுத்துகின்றனர். ஒவ்வொருவருக்கும் கடன் இருக்கிறது.

"மீன் வந்தால்தான் எங்களுக்கு வேலை. இல்லையென்றால் இங்கு வந்து சும்மா உக்காந்துட்டுப் போக வேண்டியதுதான். 60 ரூபாய் கிடைக்கும், சமயத்தில் அதுகூட கிடைக்காது. என் கணவர் சம்பாதித்துக் குடிப்பார். நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிப்பதையே கட்டிங்குக்குக் கொடு என்கின்றனர். நான் சம்பாதித்தால் தான் சாப்பாடு. அவர் எதுவும் கொடுக்க மாட்டார். எனக்கு 2 மகள்கள். அவர்களே சம்பாதித்துத்தான் கல்யாணம் செய்துகொண்டனர். எனக்கு 20,000 கடன் இருக்கிறது. அதற்கு மீட்டர் வட்டி கட்ட வேண்டும்" என்கிறார், மீன்கள் சுத்தம் செய்யும் 51 வயதாகும் தேசராணி.

"10,000 கடனுக்கு 1500 ரூபாய் ஸ்பீடு வட்டி கட்ட வேண்டும்" என தன் பங்குக் கடனை சொல்கிறார் தாட்சாயிணி.

காசிமேட்டில் மீன்கள் விற்கும் அம்மா-மகள்.

மீன்பிடி தடைக்காலத்தில் அரசு கொடுக்கும் ரூ.5,000 மானியம் போதாததால் இங்குள்ள பெண்கள் வரம்பற்ற முறையில் கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.

இதுதவிர மீன் விற்பனை செய்யும் இடத்திலும் அதனை சுத்தம் செய்யும் இடத்திலும் மேற்கூரை ஏதுமின்றி வசதிகள் இல்லாமல் இருக்கிறது. கழிவறை, தண்ணீர் வசதியும் பிரச்சினையாக உள்ளது என இங்குள்ள மீனவப் பெண்கள் குறைகளை தெரிவிக்கின்றனர்.

இதுதவிர்த்து இப்போது புதிய பிரச்சினை ஒன்று கிளம்பியிருப்பதாக தேசம் கூறுகிறார்.

"முன்பு ஆண்கள் இங்கு மீன் விற்க மாட்டார்கள். இப்போது விற்கின்றனர். கடலுக்குச் செல்லாமல் இங்கு வந்து மீன் விற்கின்றனர். அதனால் எங்களுக்கு பாதிப்பு" என்கிறார் தேசம்.

இவ்வளவு கஷ்டங்களை தாண்டியும் கடல் மீதும் தங்களுக்கு வாழ்வளிக்கும் மீன் சார்ந்த தொழில் மீதும் சற்றும் அவர்களுக்கு வருத்தம் இல்லை.

"நம்ம மீன்காரியா ஏன் பொறந்தோம்னு நெனச்சதில்ல. எங்களுக்கு மனசு ரொம்ப திருப்தியாதான் இருக்கு" என அத்தனை வலிகளையும் கடந்து மீனவக்குடியாக வார்த்தைகளை உதிர்க்கிறார் தேசம்.

அக்காவின் கருத்தை ஆமோதிப்பது போல "எங்க அப்பா, தாத்தா காலத்தில் இருந்தே கடல் தான் எங்களுக்கு வாழ்வளித்தது. அதைத் திட்ட முடியாது" என்கிறார் கல்வி.

மீனவப் பெண்கள் மீதான சுரண்டல் அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு என்ன மாதிரியான முயற்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி வேல்விழி நம்மிடம் பேசினார்.

"உலகிலேயே மிக ஆபத்தான தொழில்களின் பட்டியலில் இரண்டாவதாக மீன்பிடித் தொழில் இருக்கிறது. 10-15 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கின்றனர். உடல் உழைப்பையும் சோர்வையும் நீக்குவதற்காக முதலில் குடிக்க ஆரம்பிக்கும் மீனவர்கள் நாளடைவில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது மீனவப் பெண்கள் தான்.

மீனவப் பெண்கள் இல்லையென்றால் மீன்பிடித் தொழில் இல்லை என சொல்லலாம். கடலுக்கு உயிரை பணயம் வைத்துச் சென்று மீன்பிடிப்பவர்கள் ஆண்கள் தான் எனினும், அவர்கள் கடலுக்குப் போவதற்கான உணவு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வைத்து முன்னேற்பாடுகளை செய்பவர்கள் பெண்கள் தான்.

ஏலம் விடுதல், விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை பெண்கள் தான் செய்கின்றனர். மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகம் இருக்காது. இதனால், பெண்கள் பாசி எடுத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்கின்றனர். ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் பெண்கள் கரவலை மூலம் மீன் பிடிக்கின்றனர்.

பெரு நிறுவனங்களின் அதிகரிப்பால் நல்ல மீன்கள் அனைத்தும் ஏற்றுமதிக்குச் சென்றுவிடுகிறது. மீதமுள்ள சிறிய மற்றும் கழிவு மீன்கள் தான் பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கிறது. இதனால் அந்நிய முதலீடுகள் உயர்ந்தாலும் ஏற்கெனவே விளிம்பு நிலையில் உள்ள மீனவப் பெண்கள் மேலும் விளிம்புக்குச் செல்கின்றனர்.

வீடுகளில் பொருளாதார நெருக்கடிகளால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மீன் கூடையுடன் வரும் மீனவப் பெண்களை பேருந்தில் ஏற்றுவதற்குக் கூட பொதுச்சமூகம் இன்றும் தயங்குகிறது.

அதனால், தலைச்சுமடு பெண்களுக்கான அடையாள அட்டை, மூன்று சக்கர வாகனங்களை அரசு வழங்க வேண்டும்.

அருகாமை விற்பனை நிலையங்கள், சிறு கடன் வழங்குதல், கருவாடுகளை காய வைப்பதற்கான இடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மீனவப் பெண்களுக்கு தொடர் பயிற்சிகளை வழங்க வேண்டும்" என்றார், வேல்விழி.

தொடர்புக்கு: Nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x