Published : 20 Feb 2020 09:47 PM
Last Updated : 20 Feb 2020 09:47 PM
"ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், சமூக மனநிலையின் எதிரொலியாகவும் நாடகங்கள் உள்ளிட்ட கலைகள் திகழ வேண்டும். கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை இங்கே யாருக்கும் உண்டு" என்று நாடகவியல் அறிஞர் பேராசிரியர் மு.ராமசாமி தெரிவித்தார்.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்த்துறை உயராய்வு மையம் சார்பில் கல்லூரி வளாகத்திலுள்ள தெருக்கூத்து திறந்தவெளி அரங்கில் "வகுப்பறை'" என்ற நாடகம், கல்லூரி மாணவியரால் நடத்தப்பட்டது. வகுப்பறையும், மாணவர்- ஆசிரியர்களுக்கிடையிலான புரிதலும் எவ்வாறு நிகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நாடகத்தை மாணவியர் நிகழ்த்திக் காட்டினர்.
கல்லூரியிலுள்ள பல்வேறு துறை சார்ந்த மாணவியர் இந்த நாடகத்தில் பங்கேற்றனர். நாடகத்தினை நெறியாளுகை செய்த பேராசிரியர் மு.ராமசாமி, "பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஏதேனும் ஒரு வகையில் புராண காலத்திலிருந்தே வஞ்சிக்கப்பட்டுதான் வருகின்றனர். ஆனாலும் அந்த வஞ்சகத்திலிருந்து மீண்டெழுந்து மீண்டும், மீண்டும் சாதனை படைத்துக் கொண்டுதான் உள்ளனர்.
அதனை விளக்கும் முகமாய் இந்த நாடகப் பதிவு இருந்தாலும், வகுப்பறை என்பது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வோடு அமைய வேண்டும். அது எல்லையற்ற இனிமையைக் கொண்டிருக்க வேண்டும்.
அனைவரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற உரிமையை இந்திய அரசியல் சட்டம் நமக்கு வழங்கியிருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் கருத்து இங்கு இறுதியானதன்று. ஆகையால் ஜனநாயகப் பண்பும் பார்வையும் மிக மிக அவசியம் என்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.
தமிழ்த்துறையின் தலைவர் கவிதாராணி உள்ளிட்ட பேராசிரியர்கள் நாடக நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT