Published : 12 Feb 2020 02:23 PM
Last Updated : 12 Feb 2020 02:23 PM

மதுரை அருகே பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிபி 1217-ஐ சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல்

மதுரை

மதுரை அருகே விருதுநகர் மாவட்ட எல்லையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாண்டியர்கால பாடல் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கிபி 1217-ம் ஆண்டைச் சேர்ந்த குலசேகர பாண்டியன் கல்வெட்டு என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ மருது பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரைக்கு 25 கி.மீ. தொலைவில் விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள கணக்கனேந்தல் என்னும் சிற்றூரில் பிற்காலப் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் முனைவர் திருமால் ராஜா மற்றும் அவரது குழுவினர் மணிகண்டன் நாகராஜன் ஆதி தேவன் ஆகியோர் வழங்கிய தகவலின்படி மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் என்ற முறையில் நானும் என்னுடன்பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் படி எடுத்து இக்கல்வெட்டை வாசித்தோம்.

பலவகையிலும் இந்த கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. முதலாவது இந்த கல்வெட்டு அழகிய தமிழ் பாடல் வடிவில் அமைந்துள்ளது ‘ஸ்ரீ அன்ன மென்னு நடை’ எனும் தொடருடன் இக்கல்வெட்டு தொடங்குகிறது.

இது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள முதலாம் மாறவர்மன் கல்வெட்டில் காணப்படும் தொடரை ஒத்துள்ளது.

இக்கல்வெட்டில் சகர ஆண்டு 1139 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கிறிஸ்தவ ஆண்டு 1217 ஆகும் ‌ எனவே இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இரண்டாம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்ததாகும் (கிபி 1216-1238) எனக் கருதலாம். ஆனால் இக்கல்வெட்டு குலசேகரருக்கு 28-வது ஆட்சியாண்டு எனக் குறிப்பிடுகிறது.

இக் குலசேகர பாண்டியன் முதலாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1216) ஆவார்.

இவரே மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மூத்த சகோதரன். வரலாற்று ஆசிரியர்கள் இவனது ஆட்சிக் காலத்தை கி.பி. 1216-ல் முடிந்தது என்றும் 1216-லேயே சுந்தர பாண்டியன் ஆட்சி தொடங்கியது என்றும் கருதுகின்றனர்.

ஆனால் இக்கல்வெட்டு குலசேகர பாண்டியனின் ஆட்சி 28 ஆண்டுகள் நீடித்து உள்ளது என்பதைக் காட்டுகிறது. அது இக்கல்வெட்டின் கூடுதல்சிறப்பம்சமாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

எனவே குலசேகரனும் சுந்தர பாண்டியனும் உடன் ஆட்சியாளர்களாக கி.பி.1216 மற்றும் கி.பி.1217-ம் ஆண்டுகளில் ஆட்சி செய்துள்ளனர் என்பதை சிவன் கோயில் கல்வெட்டு கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

இக்கல்வெட்டு கல்குறிச்சி ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு அவ்வூரில் குளத்தி வாய்க்கால் எனும் வயலின் செந்நெல் விளையும் நிலத்தை முத்தரையர் கொடையாக அளித்தார் எனும் செய்தியை குறிப்பிடுகிறது. கல்குறிச்சி எனும் ஊர் இன்றும் மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இக்கல்வெட்டை வெட்டியவன் கல்குறிச்சி ஊரைச் சேர்ந்த கல்தச்சர் பூவன் இரட்டையான் என்ற சோழ கங்க தச்சன் ஆவான்.

கல்வெட்டைப் படித்து பொருள் அறிய உதவியவர் பாண்டிய நாட்டு வரலாற்று மைய செயலாளர் முனைவர் சொ சாந்தலிங்கம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x