Published : 31 Jan 2020 05:56 PM
Last Updated : 31 Jan 2020 05:56 PM

கரோனா வைரஸில் இருந்து காத்துக் கொள்வது எப்படி? - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

பிரதிநிதித்துவப் படம்

சீனாவில் வுஹான் நகரம் மூலம் பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு சுகாதார நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. சீனாவில் இன்று (ஜன.31) வரை 213 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 30-ம் தேதி வரை 7,711 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தைவான், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில், நேற்று (ஜன.30) வுஹானில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தற்போது திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாக அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பொதுமக்களுக்கு அச்சம் தொற்றியுள்ளது. தமிழக சுகாதாரத் துறை, கரோனா வைரஸ் தமிழகத்திற்குப் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும், சீனாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய, அவருடைய ரத்த மாதிரியை புனேவில் உள்ள என்.ஐ.வி எனப்படும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி மட்டுமே சோதிக்க முடியும். இந்நிலையில், சென்னையிலும் சோதிக்க கிங் இன்ஸ்டிட்யூட்டில் கரோனா ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் என்னென்ன நடவடிக்கைகள்?

கரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவ ஆரம்பித்த உடனேயே தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய தமிழக விமான நிலையங்களில், 'தெர்மல் ஸ்கேனர் யூனிட்' மூலம் பயணிகள் சோதனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதுதவிர, சீனாவிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு ரத்த பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வுஹான் நகரத்திலிருந்து வருபவர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை பரிசோதனைக்காக கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்படும். அவர்கள் 28 நாட்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். சீனாவின் பிற பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் பரிசோதனை செய்யப்படும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நோய் அறிகுறிகள் உள்ளனவா என சோதிக்கப்படும்.

"தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்"

கரோனா வைரஸ் தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைவேலு நம்மிடம் தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிப்பதற்கென 5-10 அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்ற மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கென மருத்துவமனைகள், செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை தனியாக வைத்து தான் சிகிச்சை தர வேண்டும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை செய்யப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையே இல்லை என்று சொல்வது தவறு. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சலை குணப்படுத்தவும் மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்துவதற்குமான சிகிச்சைகள் உள்ளன. நீர்ச்சத்தை அதிகரிக்கும் திரவங்களைக் கொடுக்க வேண்டும். கவனிக்காமல் இருந்தால் தான் இறப்பு நேரிடும். சரியான சிகிச்சை அளித்தால் ஒரு வாரம் முதல் 10 நாட்களுள் குணமாகும். சீனாவில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறக்கவில்லை. அங்கு இறப்பு விகிதம் குறைவு.

சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பான உபகரணங்களை வைத்துள்ளோம். முகக்கவசம், கையுறை போன்றவை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் அதற்கான பற்றாக்குறை இங்கு இல்லை.

இதுவரை சீனாவில் இருந்து தமிழகம் வந்த பயணிகள் 242 பேர். அதில் 240 பேரை அவரவர்களின் வீடுகளில் வைத்தே கண்காணித்து வருகிறோம். திருவண்ணாமலை, சென்னை அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒருவருக்கு மட்டும் இந்நோய் அறிகுறிகள் இருந்தன. அவர்களை மருத்துவமனைகளில் வைத்துக் கண்காணிக்கிறோம் அவர்களும் தற்போது நலமாக உள்ளனர்.

கட்டுப்படுத்தாத, சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உடையவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். 2 வயதுக் குழந்தைகள், 70 வயதைக் கடந்தவர்கள் அவசியமின்றி கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லக்கூடாது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு மால்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பெற்றோர்கள் செல்ல வேண்டாம். கை குலுக்குவதைத் தவிர்த்து வணக்கம் சொல்லலாம். தினமும் கைகளை 10-15 முறை கழுவ வேண்டும். இறைச்சியை சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை. அதனால், மக்கள் பீதியடைய வேண்டாம்" என்றார்.

கரோனா வைரஸைத் தடுப்பதற்கான தமிழக சுகாதார துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்:

நோய் அறிகுறிகள்

காய்ச்சல், இருமல் மற்றும் சளி
உடல் சோர்வு
ஒருசிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.

கரோனா வைரஸ் நோய் பரவும் விதம்

நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாகப் பரவுகிறது.

மேலும், இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கைகள்

தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல், இருமல் உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இறைச்சியை நன்றாகச் சமைத்து உண்ண வேண்டும். நோய் தாக்கிய கால்நடைகள், இறந்த கால்நடைகளை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகத் துடைத்துப் பராமரித்தல் வேண்டும்.

சிகிச்சைகள்
சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.

இளநீர், ஓ.ஆர்.எஸ். கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களைப் பருகுதல் வேண்டும்.

சுற்றுலா மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அறிவுரை

கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கலாம்.

இருமல், சளி உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும் விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.

தமிழக அரசின் 24 மணிநேர உதவி எண்: 011-23978046
104 உதவி எண் தொலைபேசி: 04429510400 / 04429510500
கைபேசி: 9444340496 / 8754448477

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x