Published : 27 Jan 2020 03:18 PM
Last Updated : 27 Jan 2020 03:18 PM
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தனது நிலைப்பாடு, தமிழக நூலகங்களை மேம்படுத்துவது, பள்ளிக் கல்வித் துறைக்கான ஆக்கபூர்வமான யோசனைகள் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பிரத்யேகப் பேட்டி.
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்கிற அரசின் அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
குழந்தைகளின் மனநிலை, உளவியல் எதையும் பொருட்படுத்தாத அறிவிப்பு இது. குழந்தைகள் கல்விக்கு எந்தளவுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியுமோ, அதற்கேற்ப சொல்லிக்கொடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்காமல், பொதுத் தேர்வு என்கிற பெரிய பூதத்தைக் அவர்கள் முன்னால் கொண்டுபோய் நிறுத்துவது கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையே கெடுத்துவிடும்.
கிராமப்புறக் கல்வியறிவை அடியோடு தகர்த்து, இடைநிற்றலை அதிகரிக்கச் செய்துவிடும். சுருக்கமாய்ச் சொன்னால் குருவி தலையில் பனங்காயை வைக்கிறார்கள்.
இது குறித்து சட்டப்பேரவையில் நீங்கள் கேள்வி எழுப்பியபோது, ‘பொதுத் தேர்வு முறையை நாங்கள் ஏற்கவில்லை’ என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் சொன்னாரே?
ஆமாம். ‘புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. ஆனால், மாநில அரசு பொதுத் தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றுதான் சொன்னார். பிறகு அவரே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்று அறிவித்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பியதும், ‘அந்தப் பொதுத் தேர்வுகளில் வெற்றிபெறாவிட்டாலும்கூட அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் பிள்ளைகள் செல்ல எந்தத் தடையும் கிடையாது.
அவர்களின் தேர்ச்சியை நிறுத்திவைக்க மாட்டோம்’ என்றார். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வெழுதலாம் என்று அமைச்சர் சொன்னார். தொடக்கக் கல்வி இயக்குநரோ, வேறு பள்ளிகளில் சென்று தேர்வெழுத வேண்டும் என்று அறிவிக்கிறார். கடும் எதிர்ப்பு வந்ததும் இப்போது அந்தந்தப் பள்ளிகளில்தான் தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அறிவிக்கிறார்.
ஒரு ஊரில் ஜல்லிக்கட்டை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்போம் என்கிறார். அடுத்த ஊரில் வரும் கல்வியாண்டில் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார். கல்வி அமைச்சரின் வேலை அவ்வப்போது ஏதாவது ஒர் அறிக்கையை வெளியிடுவது மட்டும்தான் போல. அந்த அறிக்கை நடைமுறைக்குச் சாத்தியமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. எதிர்ப்பு வந்தால் அடுத்த கணமே, ‘நான் அப்படிச் சொல்லவில்லை’ என்கிறார்.
கிராமப்புறங்களில் ஏராளமான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பினால், எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை என்கிறார். பட்டியலோடு கேள்வி கேட்டால், ‘பள்ளிகளை மூடவில்லை. பக்கத்து ஊர் பள்ளிகளுடன் இணைத்திருக்கிறோம்’ என்கிறார். அதற்குப் பெயர் என்ன?
கிராமத்து தென்ன மரத்துல வெளியாள் ஒருத்தன் ஏறுனானாம். "ஏன்டா தென்ன மரத்துல ஏறுற?" என்று தோட்டக்காரன் கேட்டதும், "புல் புடுங்க ஏறுனேம்யா" என்றானாம் அவன். "தென்ன மரத்துல ஏதுடா புல்?" என்று கேட்டபோது, "அதனால தாம்யா கீழே இறங்கிக்கிட்டு இருக்கேன்"னு சொன்னானாம். அப்படியிருக்கிறது அமைச்சரின் அறிவிப்புகளும், பின்வாங்கல்களும்.
நீட் தேர்வை எதிர்கொள்வதற்கும், பின்தங்காமல் இருப்பதற்கும்தான் இந்த வயதிலேயே குழந்தைகளைத் தயார்படுத்துகிறோம் என்கிறார்களே அரசுத் தரப்பில்?
12-ம் வகுப்பு முடித்து மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்கிற சில பிள்ளைகளுக்காக 5-ம் வகுப்பு படிக்கிற எல்லாக் குழந்தைகளையுமே பொதுத் தேர்வு எழுதச் சொல்வது சரியான செயலா? நீட் தேர்வுக்குப் போகும் எல்லாப் பிள்ளைகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பயிற்சி கொடுப்போம் என்று ‘மாஃபா’ பாண்டியராஜன் அமைச்சராக இருந்த காலத்திலேயே அறிவித்தார்களே, இதுவரையில் எத்தனை பேருக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்? இன்னும் 3 மாதத்தில் நீட் தேர்வு வரப்போகிறதே… ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?
முதலில் அமெரிக்க நிறுவனம் பயிற்சி அளிக்கப்போகிறது என்றார்கள். எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள் என்று கேட்டபோது, இல்லை... அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் பயிற்சி தரப்போகிறார்கள் என்கிறார்கள். இந்த விஷயங்கள் குறித்த முழுமையான புரிதலோ, தெளிவான அணுகுமுறையோ அரசுக்கும் இல்லை, அமைச்சருக்கும் இல்லை.
தொடக்கக் கல்வி விஷயத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டுகிற மாநிலம் தமிழகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். ஆனால், நீங்களோ அரசை விமர்சிக்கிறீர்கள்...
தொடக்கக் கல்வியில் திராவிட இயக்கங்கள் அமைத்த அஸ்திவாரம் அப்படியானது. அதே பாதையில் நடைபோடாமல், மத்திய அரசு என்ன சொன்னாலும், அதை அதிமுக அரசு சின்ன முணுமுணுப்புகூட இல்லாமல் செய்கிறது. அவர்கள் எள் என்று சொல்லும் முன் எண்ணெய்யாக நிற்கிறார்கள் இவர்கள். புதிய கல்விக்கொள்கையின் ஷரத்துக்களை மத்திய அரசு சட்டமாகக் கொண்டுவருவதற்கு முன்பே தமிழகத்தில் அவசர அவசரமாக அவற்றை நிறைவேற்றுகிறார்கள். மத்திய அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, மாணவர்களைப் பலிகடா ஆக்குகிறார்கள்.
தமிழக நூலகங்கள் தொடர்ந்து நலிவடைந்து வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடம் வாங்குகிற நூலக வரியை, நூலகங்களுக்கு வழங்குவதில்லை. இந்தப் பிரச்சினை திமுக ஆட்சிக் காலத்திலும் இருந்ததே?
திமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் எந்தந்த ஆண்டுகளில் எவ்வளவு புத்தகங்கள் வாங்கியிருக்கிறோம் என்பதற்குக் கணக்கு இருக்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு எவ்வளவு வாங்கியிருக்கிறோம் என்றும் கணக்கு இருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு புத்தகமாவது வாங்கியிருக்கிறார்களா? உள்ளாட்சி நிதியிலிருந்து பணம் வரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், எங்கள் ஆட்சியில் உள்ளாட்சித் துறைக்குள்ளாகவே அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக நூலகங்களைத் தொடங்கினோம். மொத்தம் சுமார் 12 ஆயிரம் நூலகங்கள். அனைத்துக்கும் சொந்தக் கட்டிடமும் கட்டிக்கொடுத்தோம். அதில் இன்று ஒன்றுகூட இன்று இல்லை. மொத்தமாக மூடிவிட்டார்கள். இதுபற்றி பல முறை சட்டமன்றத்திலேயேபேசியாகிவிட்டது. நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்களே தவிர, எதையும் செய்யவில்லை. சமீபத்தில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ரூ.5 கோடிக்குப் புத்தகம் வாங்குவோம்’ என்று முதல்வர் அறிவித்தார். அதில் எத்தனை கோடிக்குப் புத்தகம் வாங்கினார்கள் என்பதற்கும் கணக்கு இல்லை.
உலகத் தமிழ்ச் சங்கத்தைத் திறந்தது, அங்கே அழகிய நீரூற்று அமைத்தது என்று தமிழ் வளர்ச்சிக்காகத் திமுகவைவிட அதிகம் செய்தது அதிமுக அரசுதான் என்று மாஃபா பாண்டியராஜன் கூறியிருக்கிறாரே?
உலகத் தமிழ் சங்கத்துக்கு நீருற்று அமைப்பது இருக்கட்டும், செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஒரு முழு நேர இயக்குநரை முதலில் நியமிக்கச் சொல்லுங்கள். தமிழ் வளர வேண்டுமானால் இதுபோன்ற அமைப்புகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும். நீரூற்று அமைப்பதாலோ, கண்காட்சி அமைப்பதாலோ தமிழ் வளர்ந்துவிடுமா?
முன்னாள் அமைச்சர் என்ற முறையில், பள்ளிக்கல்வித் துறையில் உடனே செய்ய வேண்டிய பணிகள் என்று இந்த அரசுக்கு ஆக்கபூர்வமான யோசனை சொல்லுங்களேன்…
முதலில் தமிழ்நாட்டின் கல்விச் சூழலுக்கு ஏற்ற வகையில் கல்வித் திட்டங்களை வகுக்க வேண்டும். எல்லாருக்கும் சமமான கல்வி, தரமான கல்வி கிடைப்பதற்கான முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இது என்னுடைய யோசனை மட்டுல்ல வேண்டுகோள். ஏனென்றால் கல்வித் துறையில் செய்கிற திட்டங்களும், மாற்றங்களும் ஆட்சிக்கு ஆட்சி மாற்றப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல. அவை மாணவர்களின் எதிர்காலத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை. பல தலைமுறைகளைப் பாதிக்கிற விஷயம் இது. எனவே, எந்த முடிவு எடுத்தாலும், மாணவர்களின் கல்வித் தரத்தையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும். தங்கள் எஜமானவர்களை மட்டும் திருப்திப்படுத்தினால் போதும் என்று தமிழ்நாட்டின் கல்வியை அடமானம் வைத்துவிடாதீர்கள்.
திமுக ஆட்சிக்கு வர முதன்மைக் காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள். ‘மாணவரணிதான் திமுகவின் நாற்றாங்கால்’ என்றார் அண்ணா. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் ஏபிவிபி கூட மாநில மாநாடு நடத்துகிறது. திமுகவில் மாணவரணி என்று ஒன்று இருக்கிறதா?
இடையில் அதன் செயல்பாடு மங்கியிருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இப்போது மாணவரணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். அயோத்தி பிரச்சினை தொடங்கி, இந்தி பிராச்சார சபா பிரச்சினை வரையில் மாணவர்கள் முன்னின்று போராட்டம் நடத்தினார்கள்.
மாணவரணியும் இளைஞரணியும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் பல புதிய உத்திகளைக் கட்சித் தலைமை உருவாக்கியிருக்கிறது.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான திமுக அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில்கூட திமுக மாணவரணி உருவாகியிருக்கிறது. முன்பைக் காட்டிலும் அதிகமான மாணவர்களும், இளைஞர்களும் திராவிட இயக்கத்தில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT