Published : 04 Jan 2020 07:06 PM
Last Updated : 04 Jan 2020 07:06 PM
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. இதனால், குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் அகற்றம், சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படையான தேவைகளும் நிவர்த்தி செய்யப்படாமல், மக்கள் அல்லலுற்றனர். இதனால், ஜனநாயகமும் மக்களாட்சியும் கேள்விக்குள்ளாகின. கிராம அளவில் மட்டுமே அதிகார எல்லை கொண்டிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என கேள்விகள் எழலாம்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை செயல்பாடுகளும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளும் ஒன்றல்ல. முக்கிய திட்டங்களை தீட்டுதல், சட்டங்களை இயற்றுதல், சட்டத்திருத்தங்கள் செய்தல், நாட்டின் நிதிக்கொள்கையை வகுத்தல் உள்ளிட்டவை நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவையின் செயல்பாடுகள். இதற்காக, அந்த அமைப்புகளுக்கான தேர்தல்கள், தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப கட்சி சின்னங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் அப்படியல்ல. மக்களுடன் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து அவர்களின் தேவையை உணர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் சுயச்சார்புடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்பது கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் அவற்றுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் 73-வது திருத்தமாக 1992-ல் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம், அதிகாரங்கள், ஆளுமை பெற்றதாக கிராமங்கள் மாறின. அதிகாரங்களைப் பரவலாக்குதல், பொருளாதார வரைவு, சமூக நீதி போன்ற 29 செயல் திட்டங்கள் அரசியல் சாசனத்தின் 11-வது அட்டவணையில் சோ்க்கப்பட்டதன் விளைவாக கிராம ஊராட்சிகள் அதிக முக்கியத்துவம் பெற்றன.
உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தேவைகளை தாங்களே நிவர்த்தி செய்துகொள்ளும் அமைப்பாகும். ஊராட்சி தலைவருக்கு ரூ.1 லட்சம் வரை நிதி ஒதுக்கும் அதிகாரம், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் கட்சி சார்பற்று இயங்க வேண்டும் என்பதே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும். அதனால் தான், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கும் கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கும் கட்சி சார்பில் தேர்தல் நடத்தப்படுகிறது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வெற்றி பெற்ற வேட்பாளர்களை அறிவிக்காமல் முறைகேடு நடந்ததாகவும், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவற்றையெல்லாம் கடந்தும் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, தேர்தலுக்கு முன்பாகவே சில ஊராட்சிகளில், ஏலம் மூலமாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும், பணம், சாதி, மதம், அரசியல் சின்னங்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், உள்ளாட்சித் தேர்தலின் பிரதிநிதிகள் பலர் எளிய குடும்பங்களிலிருந்தும் புறப்பட்டுள்ளனர்.
ஏலம், பணம் என எல்லாவற்றையும் தாண்டி, சாதாரண பின்னணியிலிருந்து வெற்றி பெற்ற இளைஞர்கள், தோல் தளர்ந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளி, திருநங்கை, துப்புரவு பணியாளர் என இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகத்தை அடிமட்டத்திலிருந்து கட்டமைக்க பலரும் வெற்றிப்பெற்றுள்ளனர். அவர்களில் சிலர், தங்களின் வெற்றிப் பயணத்தையும் மக்களுக்கான தங்கள் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
'ஊருக்கு நல்லது செய்ய ஊராட்சி தலைவரானேன்'
மதுரை அருகே அரிட்டாபட்டி கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் 79 வயதான வீரம்மாள், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இளம் வயது வேட்பாளர்களை தோற்கடித்து, வெற்றிவாகை சூடியுள்ளார். இது அவருக்கு மூன்றாவது தேர்தல். கடந்த இரு உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதே பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த வயதிலும் தோல்வியால் துவண்டு போகாமல் மூன்றாவது முறையில் வெற்றிபெற்றுள்ளார்.
இன்னும் தங்களின் 5 ஏக்கர் நிலத்தில் களையெடுத்தல் உள்ளிட்ட விவசாய வேலைகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறார் வீரம்மாள். இன்றும் விறகு அடுப்பில் தானே சமைத்து உண்ணுகிறார். தன்னை பார்க்க வருபவர்களுக்கும் சமைத்து அன்புடன் பரிமாறுகின்றார். தன் வயதையொத்த தோழிகளிடம் பேசிக்கொண்டு 'ஜாலியாக' இருக்கிறார். இருமுறை தோல்வியுற்றும் மீண்டும் அவரை தேர்தல் களமாட வைத்தது எது? குரலில் நடுக்கம் இருந்தாலும், நம்பிக்கையுடன் நம்மிடம் பேசினார்.
"வணக்கோம். தேர்தலில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியா இருக்கு. 3 வருஷமா எங்கள் ஊர்ல, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செஞ்சு தரப்படல. சாக்கடை அதுபாட்டுக்கு போவும். நம்ம ஊர் இப்படி இருக்குதே? குடிநீர் கூட இல்லாமல் இருக்கோமே? மக்களுக்கு நல்லது செய்யணும்னு என் மகன் தான் என்னை போட்டியிடச் சொன்னான். அதனால்தான் நான் தைரியமா போட்டியிட்டேன். எங்க மக்கள் என்னை ஜெயிக்க வைச்சுட்டாங்க. அவுங்களுக்கு நல்லது செய்யணும்" என எந்தவித குழப்பங்களும் இன்றி கூறுகிறார் வீரம்மாள்.
"இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்புனீர்களா?" என கேள்வியெழுப்பினால், "ஜெயிச்சிட்டோம்ல" என நொடிப்பொழுதும் தாமதமாகாமல் பதிலளிக்கும் வீரம்மாள், தன் கிராமத்திற்கு முதலில் குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருவதே தன் தலையாய கடமை என்கிறார்.
"என் வீட்ல குழாய் இருக்கு. ஆனால், 3-4 மாசமா தண்ணியே வரல. வேற தெருவுக்கு போயிதான் தண்ணி எடுக்குறோம். இதுதான் கிராமம் முழுவதுமான நிலமை. எங்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, அவுங்களை நல்லபடியாக தேத்திக்கொண்டு வரணும். எனக்கு வயதானாலும் நான் நல்ல உடல்நிலையுடன் இருக்கேன். என் மக்களுக்கு தேவையானதை செஞ்சுகொடுப்பேன்" என்றார், அழுத்தம்திருத்தமாக.
மக்களுக்கு நல்லது செய்ய தன் வயது முதிர்ச்சி ஒருபோதும் தடையாக இருக்காது என்ற வீரம்மாளின் மன ஓட்டம் அவர் குரல்களின் வாயிலாக நமக்கு தெரிகிறது.
உடல் முதிர்ச்சி பொருட்டல்ல
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பாளையம் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 82 வயது மூதாட்டி ஆர்.விசாலாட்சி போட்டியிட்டு வென்றுள்ளார். ஏற்கெனவே 2001-2006 காலத்தில் ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். இவருடைய கணவர் துரைராமசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர். ஆரம்பகாலத்தில் கணவரின் அறிவுரைப்படியும், வழிகாட்டுதலுடனும் இயங்கிய விசாலாட்சி, தற்போது சுதந்திரமாக இயங்குவதாக கூறுகிறார். அவருக்கு இப்போது பக்கபலமாக இருப்பது அவருடைய கணவர், மகன்கள், பேரப்பிள்ளைகள்.
"பழைய எஸ்எஸ்எல்சி படிப்பு முடித்திருக்கிறேன். 1955-ல், என்னுடைய 15 வயதில் திருமணமானது. 2001-2006 இல் இதே பதவிக்கு என் கணவர் நிற்க சொன்னதால் தேர்தலில் போட்டியிட்டேன். அதனால் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. உள்ளாட்சியில் இருந்ததால், என் கிராம மக்களுடன் எனக்கு நன்கு பரிச்சயம் இருக்கிறது. அனுபவம் வருவதற்கு முன்னர் கணவரின் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறேன்” என்கிறார் விசாலாட்சி.
இம்முறை பல இளைஞர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு சில அறிவுகளையும் கூறினார்.
"கிராம மக்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்க வேண்டும். குறுகிய இடைவெளியில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து அவற்றை தீர்க்க வேண்டும். அதனை தள்ளிப்போடக்கூடாது. இம்முறை பல பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். படித்த பெண்கள் என்றில்லாமல், படிக்காத பெண்களும் சுயதொழில் உள்ளிட்டவற்றால் முன்னேறுகின்றனர். தைரியமாக வெளியில் வருகின்றனர். அவர்கள் அரசியலுக்கும் வர வேண்டும்” என்றார்.
82 வயது என்பது விசாலாட்சிக்கு வெறும் எண் மட்டும் தான் போலும். உடல் ஆரோக்கியமும் சுறுசுறுப்பான செயல்பாடுகளும் ஒருங்கே வாய்த்திருப்பதால், மக்களின் அடிப்படை தேவைகளை சுணக்கமின்றி மேற்கொள்வேன் என தயங்காமல் கூறினார் விசாலாட்சி.
'மாற்றுப்பாலினத்தவர்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும்'
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவில் 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில், திமுக சார்பில் வெற்றிபெற்ற திருநங்கை ரியா (30), மாற்றுப்பாலினத்தவர்களின் முன்னேற்றத்தில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவிலேயே அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார் ரியா. 2017-ல் முறையாக திமுகவில் இணைந்த இவருக்கு, 3 ஆண்டுகளில் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த பதவியில், 15 ஆண்டுகளாக இருந்த அதிமுக வேட்பாளரை 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ரியா.
"என் குடும்பம் தான் நான் அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது. நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவள். 13 வயதில் திருநங்கை என தெரிந்தவுடன், வீட்டை விட்டு வெளியேறி மும்பை சென்றேன். ஒன்றும் அப்போது தெரியாது. ரயிலில் கையேந்தி சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தேன். பின்னர்தான் எனக்கு 'சகோதரன்' எனும் அரசு சாரா அமைப்பு நம்பிக்கை அளித்தது. அந்த அமைப்பில் இருந்து பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் திருநங்கைகளுக்காக கொண்டு வரும் மசோதாக்கள் குறித்து எங்கள் சமூகத்தினருக்கு எடுத்துச் சொல்வேன்" எனக்கூறும் ரியாவுக்கு, தன் சமூகத்தினருக்கான விடுதலைக்கான போராட்டங்களே அரசியல் விதையாக இருந்திருக்கிறது.
திருநங்கை ஒருவர் நமக்கு பிரதிநிதியாகலாம் என மக்கள் சிந்திக்கும் அளவுக்கு மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரியா தெரிவிக்கிறார்.
"திருநங்கை என எங்களுக்கு பெயர் வைத்து நாங்கள் தலைநிமிர்ந்து நடக்க செய்தது எங்கள் தலைவர் கருணாநிதி தான். திருநங்கைகளின் மானுட நீதிக்காக பாடுபடுவது திமுக தான். நான் இந்த வாய்ப்பை கேட்டவுடனேயே எனக்கு கொடுத்து விட்டனர். 'ஒரு திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்தால் ஜெயிப்பாங்களா' என்கிற தயக்கம் ஏதும் அவர்களுக்கு இல்லை. மக்கள் மாறத் தொடங்கியிருக்கின்றனர் என்பதற்கான ரிசல்ட் தான் இந்த வெற்றி" என்றார்.
தன் கிராம மக்களுக்கு செய்ய உள்ள சில வேலைகளை பட்டியலிட்டார் ரியா.
"பதவி என நினைக்காமல், வேலை என இறங்கி செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 8 ஆண்டுகளாக இங்கு தண்ணீர் முறையாக வருவதில்லை. அதனை சரிசெய்ய வேண்டும். வீட்டுக்கு வீடு கழிவறை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். பஞ்சாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும். நான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எல்லா துறைகளிலும் திருநங்கைகள் இருக்கின்றனர். அப்படி, அரசியலிலும் அவர்கள் கால் பதிக்க வேண்டும். அப்போதுதான் எங்கள் சமூகத்தினருக்கான அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும். இடஒதுக்கீட்டை பெற முடியும்" என, தன் சமூக மக்களின் அரசியல் பிதிநிதித்துவத்தை முன்னிறுத்தினார் ரியா.
'உடல் இயலாமையைக் கடந்து செயல்படுவேன்'
மக்களுக்கு நல்லது செய்ய உடல் ஒரு பொருட்டல்ல என்பதற்கு உதாரணம் 22 வயதான மாற்றுத்திறனாளி சரண்யா குமாரி. கோவை மாவட்டம் ஆனை மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆத்துப்பொள்ளாச்சி கிராம ஊராட்சி. 9 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சியில், 8-வது வார்டு உறுப்பினராக சரண்யா குமாரி சுயேட்சையாக போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மாற்றுத் திறனாளியான இவர் உடுமலை அரசுக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடைய அம்மா, அப்பா இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். தலித் சமூகத்திலிருந்து மாற்றுத்திறனாளி ஒருவர் உள்ளாட்சி பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அதன் ஜனநாயகத்தன்மையை மெய்ப்பிப்பதாக இருக்கிறது.
"தேர்ந்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அன்றைக்கு எனக்கு பிறந்த நாள். இதுதான் எனக்கு பிறந்த நாள் பரிசு" என உற்சாகமாக ஆரம்பிக்கிறார் சரண்யாகுமாரி.
"எனக்கு 3 வயதில் காய்ச்சல் மற்றும் வலிப்பு வந்தது. இதில் மூளை பாதிப்புக்குள்ளாகி கால் அசைவுகள் பாதித்தது. சாய்த்துசாய்த்துத்தான் நடப்பேன். மக்கள் அளித்த ஊக்கத்தால் தேர்தலில் நின்றேன்" என்றார் சரண்யா.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே தன் கிராம மக்களுக்கு 'லயன்ஸ் கிளப்' வாயிலாக குடிநீர், கழிவுநீர்க் கால்வாய், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்துள்ளார் சரண்யாகுமாரி. அரசு பள்ளி மாணவர்களுக்கு என இலவச டியூஷன் சென்டர், மக்களுக்கு தண்ணீர் விநியோகம், இலவச கண் அறுவைசிகிச்சை முகாம், என இவரின் சேவைகளின் பட்டியல் நீள்கிறது. குறிப்பாக, அவரது கிராமத்தில் கணைய பிரச்சினையால் இளம்பெண் ஒருவரின் பிரசவத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவரை உயிர்பிழைக்க வைத்தது என, அந்த கிராமத்தில் சரண்யாவின் சமூகப்பங்களிப்புகள் ஏராளம்.
"மழை பெய்தால் தண்ணீர் காலனிக்குள் வந்துவிடுகிறது. இதனால், காலரா, டெங்கு உள்ளிட்ட நோஈய்கள் பரவுகின்றன. எனவே, முதலில், கழிவுநீர் சாக்கடைகளை சரிசெய்ய வேண்டும்." என்பதே சரண்யாவின் முதல் கடமை.
இந்த தேர்தலில் சரண்யாவுக்கு பக்க பலமாக இருந்தது, உள்ளூரில் சமூக பணிகள் மேற்கொண்டு வரும் சரவணக்குமார்.
"மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்தலில் நிற்கும்போது விமர்சனங்கள் எழாமல் இல்லை. அதனை வெளிப்படுத்த முடியாது. இதனால் எங்களுக்கு பாதிப்பு நேரலாம். ஆனால், எங்கள் மனதில் நிறைய வேதனை இருக்கிறது" எனக்கூறுகிறார் சரவணக்குமார்.
ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார். 9 வார்டுகளைக்கொண்ட ஆனைமலை ஊராட்சியில் 4 அதிமுக, 4 திமுக, ஒன்று சுயேட்சை (சரண்யாகுமாரி) வேட்பாளர்கள் ஜெயித்திருக்கின்றன.
சரண்யாவின் ஆதரவு எந்த கட்சிக்கு இருக்கிறது என்பதை பொருத்தே ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அப்போது, இவர் ஆதரவு அளிக்கும் கட்சி அவருக்கு துணைத்தலைவர் பதவியை வழங்க வேண்டும் என அப்பகுதியில் கோரிக்கையும் எழுந்திருக்கிறது
"என்னை மாதிரி இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி வந்தால் நன்றாக இருக்கும். தேர்தல் அன்று பலரும் ஓட்டு போட்டு விட்டு எனக்குத்தான் ஓட்டு போட்டோம் என தெரிவித்தனர். அப்போதே நம்பிக்கை இருந்தது. என் இயலாமையைத் தாண்டியும் என்னால் மக்கள் பணியாற்ற முடியும் என நம்புகிறேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்றார் சரண்யா.
சில ஆண்டுகளாக பிரிந்திருந்த சரண்யாவின் தாய்-தந்தை மகளின் அரசியல் பிரவேசத்திற்காக மீண்டும் இணைந்திருக்கின்றனர். இதுவும் சரண்யாவின் கூடுதல் பரிசாக அமைந்திருக்கிறது.
'நான் தான் 'டிரெண்ட் செட்டர்'
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்டது கே.என்.தொட்டி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 வயது சந்தியா ராணி, மாநிலத்தின் இளம் ஊராட்சி தலைவர். தாத்தா, அப்பா, சித்தப்பா என குடும்ப உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருந்தவர்கள்.
"தேர்தலில் நிற்க வேண்டும் என எண்ணம் இல்லை. ஏதாச்சும் செய்ய வேண்டும் என ஆசை இருந்தது. அப்பா கேட்டதும், நல்வாய்ப்பாக கருதி சம்மதித்தேன். படித்த பெண் என்பதால், இந்த ஊராட்சி வளர்ச்சியடையும் என மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை மெய்யாக்குவேன். அரசு ஒத்துழைப்புடன் நல்லது செய்ய முடியும் என நம்புகிறேன்" என்றார் சந்தியா.
தன் ஊராட்சி மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பதும் அவர்களின் நில உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் சந்தியாவின் ஆசை. கல்லூரியிலேயே ரத்த முகாம், உள்ளிட்ட பல பணிகளை மேற்கொண்டுள்ளார்.
"நான் சின்ன பொண்ணுதானே என யாரும் எனக்கு வாக்களிக்க தயங்கவில்லை. நான் சின்ன பொண்ணு. பணிகளை மேற்கொள்வதற்கு எல்லோருடைய உதவியும் எனக்கு தேவை. மக்கள் மாறியிருக்கின்றனர். மக்கள் பணியாற்ற வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்திருக்கின்றனர். நான் 'டிரெண்ட் செட்டராக' இருக்கிறேன். மக்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர பஞ்சாயத்தில் ஒரு குழு அமைத்து அதற்கான வேகைகளை செய்ய வேண்டும்" என வயதில் சிறியவராக இருந்தாலும், நினைத்திருக்கும் திட்டங்கள் சந்தியாவுக்கு பெரியதாகவே இருக்கின்றன.
சுதந்திரமாக இயங்க என்னை வளர்த்துக்கொள்வேன்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பூசலாங்குடி ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 22 வயதான சபிதா வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட 6 பேரையும் தோற்கடித்து, மொத்தம் பதிவான வாக்குகளான 1,517 இல் 499 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிபிஏ பட்டதாரியான சபிதா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
"என்னுடைய அப்பா ரவியும் தாத்தாவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர்கள். ஆனால், யாரும் தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. படித்து முடித்து விட்டு வீட்டில் தான் இருந்தேன். அப்பா சொன்னதற்காக மட்டும் போட்டியிடவில்லை. படிக்கும் போதே மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அப்பா மாதிரி செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன். அவ்வப்போது கட்சி வேலைகள், போராட்டங்களுக்கு செல்லும் போது சும்மா அதை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றிருக்கிறேன்" என்றார்.
எல்லா கேள்விகளுக்கும் 'அப்பாவின் வழியில் செயல்படுவதாக'க்கூறும் சபிதா, தன்னிச்சையாக செயல்படுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வேன் என மன உறுதியுடன் கூறினார்.
"சரியாக தெரியவில்லை. ஆனால், தன்னிச்சையாக இயங்க என்னை நான் தயார்படுத்திக்கொள்வேன். இந்த பதவியை சரியாக பயன்படுத்த வேண்டும். தெரியாத விஷயங்களை அப்பாவிடம் கேட்பேன்" எனத் தெரிவித்தார் சபிதா.
இந்தப்பதவி அதிகாரம் இல்லை
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 4-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 27 வயது தமிழ்மாறன் வெற்றி பெற்றிருக்கிறார். திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். அவருடைய தாத்தா பெயர் முரசொலி மாறன். அவருடைய அம்மாவுக்கு அறிவுக்கண்ணு என பெயர் வைத்தது பெரியார். இப்படி திராவிட குடும்பத்திலிருந்து வந்த தமிழ்மாறன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறார்.
"எங்கள் ஊரில் ஒரு அவசரத்துக்குக் கூட ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் இருக்கின்றன. இருக்கும் சாலைகளும் மழை பெய்தால் கரைந்துவிடும். எங்கள் பகுதியில் சுற்றி சிமெண்ட் ஆலைகள். எனவே அவை தண்ணீரை உறிஞ்சுவிட்டதால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இவற்றை சரிசெய்ய வேண்டும்" என, திட்டங்களை பட்டியலிடுகிறார் தமிழ்மாறன்.
"சிறிய வயதில் அரசியல் என்றால் பல குடும்பங்களில் தயங்குவர். ஆனால், என் குடும்பத்தில் இதற்கு முழு ஆதரவு. கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. ஆசிரியர் பயிற்சியின் போதுதான் அரசியலை கற்றுக்கொண்டேன். பொது வாழ்க்கை என்பது என்ன, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அங்குதான் பயிற்றுவித்தனர். இந்த பதவியின் மூலம் அதிகாரம் வந்ததாக நினைக்கவில்லை. என்னால் எந்த எல்லைக்கும் சென்று ஊருக்கு நல்லது செய்ய முடியும். அதிகாரம் என நினைத்தால் எனனால் சில விஷயங்களை மட்டும் தான் செய்ய முடியும். சிலவற்றை நிறைவேற்ற முடியாது" என தெளிவுபட பேசுகிறார் தமிழ்மாறன்.
இந்த சாமானியர்கள் தவிர, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய சரஸ்வதி, தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இவரும், உள்ளாட்சியின் நல்மாற்றத்திற்கான விதைதான்.
சரஸ்வதியை செல்போன் மூலமாக தொடர்புகொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவரிடமும் அவருடைய கனவரிடமும் செல்போன் இல்லை. ஏற்கெனவே ஜெயித்த பிறகு ஊடகங்களிடம் "மக்களுக்கு நல்லது செய்வேன்" என அவர் தெரிவித்ததை மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
வயது வித்தியாசம், பாலின பேதம், குடும்ப சூழல், உடல்நிலை என எல்லாவற்றையும் கடந்து ஜெயித்திருக்கும் இந்த பிரதிநிதிகள், மக்களுடன் மக்களாக கலந்து உள்ளாட்சியை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை மேலோங்குகிறது.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT