Published : 28 Dec 2019 03:09 PM
Last Updated : 28 Dec 2019 03:09 PM
பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைவதற்காக 1970-களில் 'வெண்மை புரட்சி' தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி நகர்ந்திருக்கும் அதே வேளையில், நாடு முழுவதும் உள்நாட்டு கால்நடை இனங்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது. இதுகுறித்து சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள், தமிழகத்தில் உள்நாட்டு கால்நடை இனங்களின் அழிவு குறித்து கவலைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
20-வது தேசிய கால்நடைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின் அறிக்கையை சமீபத்தில் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டில் 24.59 லட்சம் என்ற அளவில் இருந்த உள்நாட்டு இன மாடுகள், 2018-ம் ஆண்டில் 18 லட்சம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது, தமிழகத்தில் 2012 முதல் 2018 இடையிலான காலகட்டத்தில் 6.65 லட்சம் உள்நாட்டு இன மாடுகள் குறைந்துள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எருமைகளின் எண்ணிக்கையும் 6.6 லட்சத்திலிருந்து 5.18 லட்சமாக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை 13.21 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
ஆரம்ப காலத்தில், உள்நாட்டு இன மாடுகளில் இருந்து பெறப்படும் பால், கிராமப்புற மக்களுக்கு தன் வீட்டு தேவைகளுக்கு மட்டுமின்றி வருமானத்திற்கும் பயன்பட்டது. விவசாய வேலைகள் உட்பட மற்ற வேலைகளுக்கும் அம்மாடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், நாளடைவில், விவசாயம் இயந்திரமயமானதும் உள்நாட்டு இன மாடுகளின் சரிவுக்குக் காரணம் என்கின்றனர், நாட்டு மாட்டு ஆர்வலர்கள்.
இதனால், உள்நாட்டு இன மாடுகளின் தேவை குறைய ஆரம்பித்தது. ஒரு நாளுக்கு 10-12 லிட்டர் பால் தரும் ஜெர்சி போன்ற ஐரோப்பிய இன மாடுகள், 2-3 லிட்டர் பால் தரும் உள்நாட்டு இன மாடுகளின் இடத்தைப் பிடித்தன. இதனால், உள்நாட்டு இன மாடுகளின் தேவைகளும் முக்கியத்துவமும் புறந்தள்ளப்பட்டு, வெளிநாட்டு இன மாடுகள் பால் உற்பத்திக்காகவும், அதன் மீதான கவர்ச்சிக்காகவும் தமிழகத்தில் பெருகியது.
1970-களில் வெண்மை புரட்சியின் விளைவாக, தமிழகத்தில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, உள்நாட்டு இன மாடுகளை வெளிநாட்டு காளை மாட்டின் இன விந்துக்களை கொண்டு செயற்கை கருவூட்டல் மூலம் உருவாக்கப்படும் கலப்பின மாடுகளும் அதிகமாகியது.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்நாட்டு இன மாடுகளின் சரிவு குறித்து, தன்னுடைய 'நைன் ருபீஸ் அன் ஹவர்' (Nine Rupees An Hour) எனும் புத்தகத்தில், பத்திரிகையாளர் அபர்ணா கார்த்திகேயன் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், "இந்தியா முழுவதும் எருமைகள் தவிர்த்து 19 கோடி மாடுகள் இருந்தன. இந்த எண்ணிக்கை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவற்றின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். 2016-17ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி மதிப்பு 6 லட்சத்து 14 ஆயிரத்து 387 கோடியாகும். மாட்டுக்கறி உற்பத்தி மதிப்பு 25 ஆயிரத்து 332 கோடியாகும். 2007-ம் ஆண்டிலிருந்து 4% என்ற அளவுக்கு இந்த கால்நடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. தேசிய விலங்கு மரபணு வள அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 37 இந்திய இன மாடுகள் தற்போது வரை 9% குறைந்துள்ளது. உள்நாட்டு காளைகள் மற்றும் எருது இனங்கள் 19% குறைள்ளது. அதே சமயத்தில், இந்தியாவில் ஐரோப்பிய நாட்டின மாடுகளின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளது.
2014-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வெளிநாட்டு இன மற்றும் கலப்பின மாடுகளின் மூலம் இந்தியா முழுவதும் 55.61% பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என, மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது, தமிழ்நாட்டில் 90.98% ஆக இருந்தது" என குறிப்பிடப்பட்டுள்ளது,.
இதன்மூலம், தமிழகத்தில் வெளிநாட்டு இன மாடுகளின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்திருப்பதைக் காணலாம்.
தமிழகத்தில், தஞ்சாவூர் பகுதியில் உம்பளச்சேரி இன மாடுகள், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, ஆகிய பகுதிகளில் புலிக்குளம் இன மாடுகள், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளில் ஆலம்பாடி மாடுகள், திருப்பூர், ஈரோடு , கரூர் , கோயம்புத்தூர், திண்டுக்கல்லின் ஒரு பகுதி, நாமக்கல், சேலத்தின் ஒரு பகுதிகளில் காங்கேயம் இன மாடுகள், ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலையில் பர்கூர் மலை மாடுகள் என 5 வகையான முக்கியமான நாட்டு இன மாடுகள் உள்ளன. தற்போது இந்த அனைத்து இனங்களும் அழிவை சந்தித்து வருவதாகக் கூறுகிறார், திருப்பூரில் செயல்பட்டு வரும் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி.
"உதாரணத்திற்கு காங்கேயம் இனத்தை எடுத்துக்கொள்வோம். சுதந்திரத்திற்கு முன்பு காங்கேயம் மாடுகளின் எண்ணிக்கை 1940-களில் 34 லட்சமாக இருந்தது. இன்றைக்கு 1 லட்சத்துக்கும் குறைவாகத்தான் காங்கேயம் மாடுகள் உள்ளன. உள்நாட்டு இன கால்நடைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் 1970-களில் ஐசிடிபி எனப்படும், ஒருங்கிணைந்த கால்நடை வளர்ச்சித் திட்டத்தை (integrated cattle development programme) இந்திய அரசு உருவாக்கியது. இது தமிழகத்தில் தோல்வியடைந்து விட்டது" என்கிறார், சிவசேனாபதி.
வெளிநாட்டு இன மாடுகளுக்கு நோய்களுக்கான சிகிச்சை, தீவணம், பராமரிப்பு என பல்வேறு செலவுகள் உள்ளதாகக் கூறும் சிவசேனாபதி, உள்நாட்டு இன மாடுகளுக்கு அத்தகைய செலவுகள் அதிகம் இல்லை என்கிறார்.
"உள்நாட்டு இன மாடுகள் வாலை வைத்து கொசுக்களை விரட்டிவிடும். அதனால், அவற்றை நோய்கள் அதிகம் தாக்காது. மடிநோய் போன்றவை வெளிநாட்டு இன மாடுகளைத்தான் அதிகம் தாக்கும். அவற்றுக்கு நோய்த்தடுப்பு இல்லை. உள்நாட்டு இன மாடுகள் தானாக தீவனத்தைத் தேடிக்கொள்ளும். ஆனால், வெளிநாட்டு மாடுகளுக்கு அப்படியில்லை. தீவனத்துக்கே அவற்றுக்கு தனியாக செலவழிக்க வேண்டும். ஒரு உள்நாட்டு இன மாட்டை வளர்க்க 20-30 ரூபாய் செலவு ஆகும் என வைத்துக்கொண்டால், வெளிநாட்டு இன மாட்டை வளர்க்க 100 ரூபாய் செலவாகும்" என்கிறார் சிவசேனாபதி.
உள்நாட்டு இன மாடுகளின் அழிவு சாதாரண விவசாயிகள், பெண்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எனவும் அவர் கூறுகிறார்.
"தமிழகத்தில் சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக மாடுகளை வளர்ப்பர். கிராமப்புறங்களில் பெரும்பாலான ஏழை பெண்கள், கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்களுக்கும் மாடுகள் தான் வாழ்வாதாரம். அதனால் தான் தமிழகத்தில் மாடுகளை 'செல்வம்' என அழைக்கிறோம். திருவள்ளுவரும் திருக்குறளில் மாடுகளுக்கு 'செல்வம்' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார். உள்நாட்டு மாடுகளின் அழிவு என்பது ஒரு கலாச்சாரத்தின் முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் பால் உற்பத்தி என்பது முழுக்க தனியார்மயமானது. ஆனால், நம் நாட்டில் 50% பால் உற்பத்தி, விவசாயிகளிடம் இருந்து தான் பெறப்படுகின்றன, உள்நாட்டு இன மாடுகளின் அழிவால், தமிழகத்திலும் பால் உற்பத்தி முழுக்க தனியார்மயமாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்" எனக்கூறுகிறார், சிவசேனாபதி.
தமிழக அரசு இந்தாண்டு கொண்டு வந்த தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம்-2019, வெளிநாட்டு இன மாடுகளை ஊக்குவிக்கவே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதனால், தனியார் பெருநிறுவனங்களே லாபம் அடையும் என்கிறார் சிவசேனாபதி.
"இந்த புதிய சட்டத்தின்படி, கால்நடைத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. கால்நடை வளர்ப்போர் அனைவரும் இந்த அமைப்பின்கீழ் கொண்டு வரப்படுவர். யார், யாரெல்லாம் காளைகள் வைத்திருக்க முடியும் என்பதையும் அந்த அமைப்பு கட்டுப்படுத்தும். மாடுகளை செயற்கையாக கருவூட்டுவது கூட சாதாரண மக்களுக்கு செலவுகரமானதாக மாறும்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டும் வரும் ஜீனஸ் ஏபிஎஸ் (Genus ABS) என்ற தனியார் நிறுவனம் ஒன்று, இதனை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு விதைகளை எப்படி மான்சான்ட்டோ நிறுவனம் கட்டுப்படுத்துகிறதோ, அதேபோன்று மாட்டு இனங்களை இந்நிறுவனம் கட்டுப்படுத்தும். தற்போது செயற்கை முறையில் கருவூட்டப்படும் மாடுகளுக்கு தமிழக அரசு 40 ரூபாய் என மலிவு விலையில் சினை ஊசி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதுவே இம்மாதிரியான தனியார் நிறுவனத்தின் கைகளுக்கு சென்றால் ஒரு ஊசி ரூ.2,000 என்ற அளவுக்குக் கூட உயர்ந்துவிடும்.
இதுதவிர, ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன், ஜெர்சி போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்களின் விந்துக்களையும் இந்நிறுவனம் தான் சேகரித்து வைத்திருக்கின்றது. இதனால், இந்த இனங்களின் விந்துக்களுக்கு இந்நிறுவனத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு கால்நடைகள் வளர்க்கும் சாதாரண மக்கள் தள்ளப்படுவர். வெளிநாட்டு இன மாடுகள் தனியார் நிறுவனங்களுக்கு லாபம். உள்நாட்டு இனங்கள் அதிகமானால் அவர்களுக்கு லாபமில்லை" என இச்சட்டம் குறித்து சிவசேனாபதி கூறுகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கியுள்ள தமிழக அரசு, வெளிநாட்டு இனங்களுக்காக சேலத்தில் அமைக்கப்பட உள்ள கால்நடை பூங்காவுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர் ஆர்வலர்கள்.
வெளிநாட்டு இன மாடுகள் தவிர்த்து, வெளிமாநில இன மாடுகளும் உள்நாட்டு மாடுகளின் அழிவுக்கு வழிவகுப்பதாகக் கூறுகிறார், காங்கேயம் மாடு பாதுகாவலர் சிவகுமார் வெங்கடாசலம்.
"கொங்க மாடுகள், திருச்செங்கோடு, மணப்பாறை, புங்கனூர் ஆகிய இன மாடுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளவில்லை. வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் சாஹிவால் மாடுகள், காங்க்ரேஜ் மாடுகள் ஆகியவையும் இவற்றின் அழிவுக்குக் காரணம். இயற்கை விவசாயம் அதிகமாகும் போது உள்நாட்டு இன மாடுகளுக்கான தேவை அதிகமாகும்.
உள்நாட்டு இன மாடுகளை தமிழக விவசாயிகள் முழுவதும் அழியவிட மாட்டார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு இன மாடுகள் இரண்டையும் வைத்திருக்கும் ஒருவரிடம் நான் அதுபற்றி கேட்ட போது, "வருமானத்திற்கு வெளிநாட்டு இன மாடு. என் பேரனுக்கு பால் கொடுக்க உள்நாட்டு இன மாடு" என்றார்." உள்நாட்டு இன மாடுகளின் முக்கியத்துவம் நம் மக்களுக்கு புரிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு இன மாடுகளிலிருந்து பெறப்படும் பாலால் நோய்கள் அதிகரிக்கிறது என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றார் சிவகுமார்.
உள்நாட்டு இன மாடுகளின் அழிவு குறித்து தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:
"அரசு சார்பாக பர்கூர் இன மாடுகளை பாதுகாக்க பர்கூரில் ஆராய்ச்சி மையம் உள்ளது. கங்கேயம் இனத்திற்காக சத்தியமங்கலத்தில் ஆராய்ச்சி மையம் இருக்கிறது. புலிக்குளம் இன மாடுகளுக்காக மானாமதுரையில் இருக்கிறது. இப்படி, பல ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகம் நடத்தும் பயிற்சிகளில் நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்கு விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்புத் துறையும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
நாட்டு இன மாடுகளின் தேவைகள் குறைவதும் அதன் சரிவுக்குக் காரணம். அவற்றை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதியை ஒதுக்கியுள்ளன. பர்கூர் மாடுகளின் பாலை மற்ற பகுதிகளில் விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டு இன மாடுகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்தார்.
"1970-கள் வரை 'கீ வில்லேஜ் செண்டர்' (Key Village Scheme) என்று திட்டம் இருந்தது. கால்நடை மருத்துவர்களை வைத்து கன்றுக்குட்டிகளை கணக்கெடுத்து அதனை வளர்ப்பவர்களுக்கு மாதம் 10 ரூபாய் தருவார்கள். அதுபோன்று இப்போது நேரடியாக விவசாயிகளுக்கு ரூ.1,000 மானியம் கொடுக்கலாம்" என ஆலோசனை கூறுகிறார் சிவசேனாபதி.
கிராமப் பொருளாதாரத்தின் ஆதாரமான உள்நாட்டு மாட்டினங்களை பாதுகாக்க தமிழக அரசு கொள்கை வகுத்து செயல்பட வேண்டும் என்பதே நாம் வலியுறுத்த வேண்டிய செய்தி.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT