Published : 25 Nov 2019 06:53 PM
Last Updated : 25 Nov 2019 06:53 PM
தங்களை சக மனிதர்களாகவும், மாண்புடனும் குறிப்பிடும் பெயரைச் சொல்லி இச்சமூகம் அழைப்பதற்காகவே, மாற்றுப் பாலினத்தவர்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்திருக்கின்றனர். தமிழ்ச் சமூகம், பல்வேறு இழிவான பெயர்களைக் கூறி மாற்றுப் பாலினத்தவர்களை அழைத்த போது, 2006-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கு 'திருநங்கை', 'திருநம்பி' எனப் பெயரிட்டு சட்டம் இயற்றினார். அந்தப் பெயரே தங்களை சக மனிதராக மற்றவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது என திருநங்கைகள் பலரும் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு ஆவணங்கள், செய்தி வெளியீடுகளில் 'திருநங்கை' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், 'மூன்றாம் பாலினத்தவர்' என்ற பெயரைப் பயன்படுத்துவதாக விமர்சனங்கள் சமீபத்தில் எழுந்துள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2008-ம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்ட ஏப்.15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் 'திருநங்கைகள் தினமாக' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் வரும் 2020 ஆம் ஆண்டு, ஏப்.15-ம் தேதி சமூக நலத்துறை சார்பில் 'திருநங்கைகள் தினம்' கொண்டாடப்படுவது குறித்தும், அவ்விழாவில் வழங்கப்பட உள்ள 'சிறந்த திருநங்கை விருது' பெறுவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள் தங்களின் ஆவணங்களை அனுப்பலாம் என்றும் குறிப்பிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்தும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் மூலமாக கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், 'திருநங்கை' என்ற வார்த்தை அச்சிடப்பட்ட இடங்களில் 'மூன்றாம் பாலினத்தவர்' என்ற வார்த்தை கையால் எழுதப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி வெளியீடானது, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோரின் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டுள்ளது.
'திருநங்கை' என்ற பெயர் 'மூன்றாம் பாலினத்தவர்' என மாறியது ஏன் என, தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். கடந்த பல மாதங்களாகவே சமூக நலத்துறை இயக்குநரகத்திலிருந்து தங்களுக்கு வரும் அறிவிப்புகளில் 'மூன்றாம் பாலினத்தவர்' என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
"2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, 06.11.2015 அன்று தமிழக அரசு அரசாணை எண்.71-ஐ பிறப்பித்தது. அதில், ஆண், பெண் இரு பாலினம் தவிர்த்து, மற்ற மாற்றுப் பாலினத்தவர்களை 'மூன்றாம் பாலினத்தவர்' எனக் குறிப்பிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் 'மூன்றாம் பாலினத்தவர்' என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாகவே சமூக நலத்துறை 'மூன்றாம் பாலினத்தவர்' என்ற வார்த்தையையே பயன்படுத்தி வந்திருக்கிறது.
ஆனால், 'திருநங்கை' என்ற வார்த்தை அழிக்கப்பட்டு அதன் மீது 'மூன்றாம் பாலினத்தவர்' என எழுதப்பட்டுள்ளதால் இந்த விஷயம் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த விருதுகள், திருநங்கை மட்டுமின்றி திருநம்பிக்கும் வழங்கப்படுவதால், பொதுவான வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது," என்றார் அவர்.
'திருநங்கை' என்ற வார்த்தையையே அந்தச் செய்தி வெளியீட்டில் ஆரம்பத்தில் பயன்படுத்தியதாகவும், அலுவலகத்தில் இருந்தவர்கள் அறிவுறுத்தலின்படி, 'மூன்றாம் பாலினத்தவர்' என மாற்றியதாவும் அந்த அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.
'திருநங்கைகள்' என்ற வார்த்தையும் 'மூன்றாம் பாலினத்தவர்' என்ற வார்த்தையும் மாறிமாறி பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதில் குழப்ப நிலையே நிலவுவதாகக் கூறுகின்றனர். இதுகுறித்து, சமூக நலத்துறை இயக்குனரகம் தெளிவை ஏற்படுத்துவதற்காக, மாவட்ட சமூக நல அலுவலகம் காத்திருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.
'திருநங்கை' என்ற பெயரை மாற்றி 'மூன்றாம் பாலினத்தவர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது சமூக நீதிக்கு எதிரானது என்கிறார், திருநங்கை மற்றும் திருநம்பியர்களுக்கான உரிமைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிரேஸ் பானு கூறுகிறார். திருநங்கைகளுக்கு எதிரான பல்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும் 'மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019'-ஐ எதிர்த்து வரும் வேளையில், தமிழக அரசின் இந்த செயல்பாடு திருநங்கைகள் சமூகத்தை தனித்து விட்டது போன்று உள்ளது என அவர் கூறினார்.
"2014-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக கருதலாமே என்று தான் கூறியிருக்கிறது. அப்படித்தான் அழைக்க வேண்டும் என கட்டாயமாகச் சொல்லவில்லை. ஆனால், மாற்றுப் பாலினத்தவர்கள் தங்களின் பாலினத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குத்தான் உண்டு என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
உச்ச நீதிமன்றத்தைப் பின்பற்றுவதாக சொல்லும் தமிழக அரசு, பாலினத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறுவதைப் பின்பற்றுகிறார்களா? உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்திய அரசியலமைப்பில் முதல் பாலினம் யார், இரண்டாம் பாலினம் யார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா? அப்படி இல்லாதபட்சத்தில் ஏன் எங்களை 'மூன்றாம் பாலினத்தவர்' என எண்ணின் அடிப்படையில் அழைக்க வேண்டும்? பொதுப்பெயராக 'திருநர்' என அழைக்கலாமே" எனக் கேட்கிறார் கிரேஸ்.
'திருநங்கை', 'திருநம்பி' ஆகிய வார்த்தைகள்தான் தங்களை மரியாதைக்குரியவர்களாக உணர வைப்பதாக கூறுகிறார் கிரேஸ் பானு.
திமுக கொண்டு வந்தது என்பதற்காகவே 'திருநங்கை’ பெயரை தமிழக அரசு நீக்கியிருப்பதாக, முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவன் கூறுகிறார். இதுதொடர்பாக சமூக நலத்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என பதிலளித்தார்.
மூன்றாம் பாலினம் திருநங்கைகளும், திருநம்பிகளும் என்றால் முதல் பாலினம் யார்? இரண்டாம் பாலினம் யார்? பாலினங்களை ஒன்று, இரண்டு, மூன்று என தரவரிசைப்படுத்துவது யார்?
திருநங்கைகள் என இருந்ததை மூன்றாம் பாலினம் என மாற்றிய அரசு மாற்றுப் பாலினம் என்றோ, திருநர் என்றோ குறிப்பிடலாம். இது செயல்பாட்டு வடிவில், எழுத்து வடிவில் வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT