Published : 23 Nov 2019 05:53 PM
Last Updated : 23 Nov 2019 05:53 PM

மகாராஷ்டிராவில் ஆட்சி; அமித் ஷா தலையீட்டால் நடக்கவில்லை: மும்பை பாஜக எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் பேட்டி

அமித் ஷா: கோப்புப்படம்

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலால், கூட்டணி பிரிந்தது. இதனால், எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாமல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின. 3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் இன்று (நவ.23) காலையில் பதவி ஏற்றனர். அதன்பொருட்டு, காலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது.

288 எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு, ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், 105 எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கும் பாஜக, தேசியவாத காங்கிரஸின் 54 எம்எல்ஏக்கள், 11 சுயேச்சை எம்எல்ஏக்கள் என 170 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், இந்த ஆட்சிக்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் தொடர்பில்லை, சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்றும், பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்றும் அறிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியமைத்ததை சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜகவின் ஆட்சியமைப்பை , 'அருவருப்பான செயல்' என விமர்சித்துள்ளார்.

"பாஜகவுக்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு. தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. அஜித் பவார் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கப்படுவார்," என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

காலையில் துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவாருடன் சென்ற 3 எம்எல்ஏக்கள், மதியம் சரத் பவாருடனேயே தாங்கள் இருப்பதாக காட்சி ஊடகங்களில் தோன்றி அறிவித்தனர்.

அஜித் பவார் பாஜகவால் மிரட்டப்பட்டதாகவும், அதனால் அக்கட்சி ஆட்சியமைக்க அஜித் பவார் உதவியுள்ளதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

பாஜக, வரும் 30-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பாஜக தன் பலத்தை நிரூபிக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, மும்பையின் சியோன் கோலிவாடா தொகுதி பாஜக எம்எல்ஏவும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்.

சிவசேனா ஆட்சியமைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகியுள்ளார். ஓர் இரவில் என்ன பேச்சுவார்த்தையை பாஜக நடத்தியது?

இது ஓர் இரவில் நடந்த மாற்றம் இல்லை. காலை 8 மணிக்குதான் முதல்வர் பதவிப் பிரமாணம் நடந்தது. சிவசேனா, தாங்கள் ஆட்சியமைக்க இரண்டு நாட்கள் மட்டும் கொடுங்கள் என, நீதிமன்றத்தை அணுகியது. "நீங்கள் அரசை அமைத்துக் காண்பியுங்கள்" என, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா என எல்லோரும் ஒரு மாதம் அப்படியே விட்டனர். இந்த ஒரு மாதத்தில் அவர்களால் ஆட்சியமைக்க முடியவில்லை. தினமும் செய்தியாளர் சந்திப்பு, பேச்சுவார்த்தை தானே நடந்தது. அவர்கள் தாமதித்தனர். இன்று காலையில் பாஜக ஆட்சியமைத்து விட்டது.

பாஜகவுக்கு ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுள் 3 பேர் மீண்டும் சரத் பவாரிடம் திரும்பியுள்ளனர். சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்குமா?

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் உட்படஎல்லா கட்சி எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் பட்னாவிஸின் செயல்பாடுகள் குறித்துத் தெரியும். இன்னும் சில கட்சிகளிலிருந்தும் எம்எல்ஏக்கள் வருவார்கள். எங்கள் பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிக்கும் போது 145 எம்எல்ஏக்கள் அல்ல, 190-க்கும் மேல் எம்எல்ஏக்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைக்கும். சிவசேனாவிலிருந்து 22 எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. சிவசேனாவிலிருந்து வருகிறார்களோ இல்லையோ, காங்கிரஸிலிருந்து நிச்சயம் வருவார்கள்.

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவருமே கையெழுத்திட்டதால்தான் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் கையெழுத்திடாமல், குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கிவிட்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளதில் நேரடியான மத்திய அரசின் நெருக்கடி உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிக்கும்போது தேசியவாத காங்கிரஸின் அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவும் எங்களுக்குத்தான் கிடைக்கும். சரத் பவாரிடம் திரும்பிய எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயும் என, சரத் பவார் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது, அக்கட்சி எம்எல்ஏக்கள் உங்களுக்கு எப்படி ஆதரவு தெரிவிப்பார்கள்?

ஒரு கட்சியிலிருந்து மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் வந்துவிட்டாலே, மீண்டும் தேர்தல் வைக்கக்கூடாது என்பதுதான் விதி. எனவே, தேசியவாத காங்கிரஸில் உள்ள மூன்றில் ஒருபங்கு எம்எல்ஏக்கள் அதிக எண்ணிக்கையிலேயே எங்களை ஆதரிப்பார்கள். எனவே, அவர்களுக்கு கட்சித் தாவல் சட்டம் தடையாக இருக்காது.

பல வருடங்கள் உங்களுடன் கூட்டணியில் இருந்த சிவசேனாவுடனேயே முறிவு ஏற்பட்டு விட்டது. தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இணைந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக நிலைக்குமா?

பட்னாவிஸ் கடந்த 5 ஆண்டுகள் எப்படி நல்லாட்சியைத் தந்தாரோ அதேபோன்று இப்போதும் நல்லாட்சியைத் தருவார்.

பெரும்பான்மையாக பாஜக எம்எல்ஏக்களைத் தேர்ந்தெடுத்தது மக்கள்தான். பட்னாவிஸ்தான் தங்களுக்கு நல்லது செய்வார் என மக்கள் நம்புகின்றனர். அவர் முதல்வராக வர வேண்டும் என்றுதான் எல்லா கோயில்களிலும் பூஜைகள் நடைபெற்றன. சிவசேனா, எங்கள் பிரதமர், முதல்வர், பாஜகவின் பெயரைச் சொல்லி ஓட்டுகள் வாங்கியது. இப்படி ஓட்டு வாங்கிய சிவசேனா, ஆட்சியமைப்பதற்காக, வேறு கட்சியுடன் செல்வது எந்தவிதத்தில் நியாயம்? ஓட்டு வாங்குவதற்கு மட்டும் நாங்கள் தேவை. ஆட்சியமைக்க காங்கிரஸுடன் சென்றால் எப்படி ஜெயிக்கும்? பாஜகவுக்கு சிவசேனா அநீதி இழைத்துவிட்டது. சிவசேனா கட்சியினர் எங்களைப் பயமுறுத்தி பார்க்க நினைத்தனர். பாஜக இந்த அதட்டல்களுக்கு பயப்படாத கட்சி.

பாஜக ஆட்சியமைப்பதற்காக ஆளுநரைப் பயன்படுத்திக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதே?

காங்கிரஸ் கட்சி தான் ஜெயிக்கவில்லை என்றால் இப்படித்தான் சொல்லும். அவரைப் பயன்படுத்த வேண்டும் என்றால் முன்பே பயன்படுத்தியிருப்போமே? எதற்கு ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும்? அமித் ஷா, தேவேந்திர பட்னாவிஸ் தலையிட வேண்டும் என நினைத்திருந்தால் முதலிலேயே செய்திருப்போம். உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் பதவியை இந்த விவகாரத்தில் பயன்படுத்தவில்லை.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x