Published : 18 Sep 2019 02:33 PM
Last Updated : 18 Sep 2019 02:33 PM

சப் டைட்டில்: தமிழ் சினிமாவின் சர்வதேசக் கரங்கள்!

'முறைப்பெண்' என்பதை தமிழ்ப் பார்வையாளர்கள் அல்லாத சினிமா ரசிகர்களுக்கு எப்படி மொழிபெயர்ப்பது? 'கொழுக்கட்டை' என்பதை அந்த உணவை பற்றியே அறியாதவர்களுக்கு எப்படித் தெரியவைப்பது? திரைப்படப் பாடல்களில் உள்ள கவிதை மொழியை, வேறொரு கலாச்சாரம் கொண்டவர்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியும்? தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தான நகைச்சுவை வார்த்தைகளை வேறொரு மொழி பேசுபவர்களுக்கு எப்படிக் கொண்டு செல்வது? இவையெல்லாம் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் எழுதும் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.

தமிழ்த் திரைப்படம் உலக அளவிலான பார்வையாளர்களையும், விமர்சகர்களையும், விருதுகளையும் பெறுவதற்கு சப் டைட்டில் மிக முக்கியக் கருவியாக இருக்கிறது. சப் டைட்டில் என்பது தமிழ் வசனங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டுமல்ல, இயக்குநர் சொல்ல வருவதை சாராம்சம் மாறாமல், வேறொரு கலாச்சாரம் கொண்டவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். வரிகளாக, எழுத்துருக்களாக நாம் திரையில் கடந்து செல்லும் சப் டைட்டிலுக்குப் பின்னால் இருக்கும் முகங்கள் யார் யார்?

களத்தைக் கலக்கும் கலைஞர்கள்:

நந்தினி கார்க்கி, தன் கணவரும் பாடலாசிரியருமான மதன் கார்க்கியின் பாடல்களுக்கு சப் டைட்டில் எழுத ஆரம்பித்து அதன்பிறகு, 'ஐ', 'தங்க மீன்கள்', 'என்னை அறிந்தால்', 'பிசாசு', 'ரேடியோ பெட்டி' உட்பட பல திரைப்படங்களுக்கு சப் டைட்டில் எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்படங்களுக்கு சப் டைட்டில் எழுதும் மற்ற கலைஞர்கள் போல் அல்லாமல், இதற்கென பிரத்யேகமாக ஐரோப்பிய நிறுவனம் ஒன்றில், தொலைதூரக் கல்வி மூலம் 3 மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார் நந்தினி.

தான் கற்ற கலையை இந்தியாவுக்கு ஏற்றாற்போன்று மாற்றிக்கொண்டு, 2016-ல் 'சுபமி' (Subemy) என்ற பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்தார், நந்தினி. தற்போது அந்நிறுவனத்தில் உள்ள குழுவினர் தான், திரைப்படங்களுக்கு சப் டைட்டில் எழுதுகின்றனர். 'கேம் ஓவர்', 'மான்ஸ்டர்', 'காஞ்சனா 3', 'சர்கார்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இக்குழுவினர்தான் சப் டைட்டில் எழுதியுள்ளனர். சப் டைட்டில் பணிகளை ஆராய்ந்து செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் நந்தினி. தான் சப் டைட்டில் எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை சப் டைட்டில் எழுதுவதில் சில சவால்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறார் நந்தினி.

நந்தினி கார்க்கி

"வசனங்களை ஆங்கிலத்திற்கு அப்படியே மொழிபெயர்த்தால் காமெடியாகிவிடும். நகைச்சுவை, பாடல்களுக்கு வார்த்தைகளை உள்ளபடியே மொழிபெயர்க்காமல் வித்தியாசமாக சப் டைட்டில் எழுத வேண்டும். இவைதான் மிகப்பெரிய சவால்கள்.பாடல்களுடன் ஒப்பிடுகையில் நகைச்சுவை வசனங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது சப் டைட்டில் கலைஞர்களுக்கு மிகுந்த சவாலானதாகவே உள்ளது. அந்த மாதிரியான சமயத்தில், தமிழ்க் கலாச்சாரத்தை அறியாதவர்களுக்கு எப்படி அதனைப் புரிந்துகொள்வது போல் வார்த்தைகளை மாற்ற வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். அது கடினமான பணிதான். ஆனால், அதன் அர்த்தம் சிதையாமல், அதனைப் புரியவைப்பதற்கு முயற்சி செய்வோம். ஒரு காற்புள்ளி மாற்றிப் போட்டுவிட்டாலும் அதனைப் பிறகு படிக்கும்போது காமெடியாக இருக்கும். நான் செய்யும் பணிகளிலேயே அப்படிச் சிரித்திருக்கிறேன். ஆனால், அதனை ஆரம்பத்திலேயே திருத்திவிடுவோம். வசனங்கள் மட்டுமல்லாமல் எல்லாவற்றுக்கும் மனசுக்குள்ளேயே படிக்காமல், வாய்விட்டுப் படிக்க வேண்டும். அப்போதுதான் பிழையில்லாமல் சப் டைட்டில் எழுத முடியும்", என்கிறார் நந்தினி கார்க்கி.

சப் டைட்டில் கலைஞர்கள் சிலருடன் உரையாடியதில், அவர்கள் அனைவருக்குமே நகைச்சுவை வசனங்கள், உறவுமுறைகள், பாடல்கள், வட்டார மொழி ஆகியவற்றுக்கு சப் டைட்டில் எழுதுவது சவாலான ஒன்றாகவே உள்ளதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

சப் டைட்டில் கலைஞர்கள் வர்ஷா மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து 70-80 திரைப்படங்களுக்கு சப் டைட்டில் எழுதியுள்ளனர். 'பேபிள்ஃபிஷ் மீடியா' (Babelfish Media) என்ற சப் டைட்டில் நிறுவனத்தை நடத்திவரும் இருவரும் இணைந்தே திரைப்படங்களுக்கு சப் டைட்டில் எழுதி வருகின்றனர். 'விசாரணை', 'வடசென்னை' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சப் டைட்டில் எழுதியுள்ளனர். இதில், 'வடசென்னை', 'விசாரணை' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வர்ஷா உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். 'அசுரன்', 'எனை நோக்கிப் பாயும் தோட்டா', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', வசந்தபாலனின் 'ஜெயில்' உள்ளிட்ட வெளிவராத திரைப்படங்களுக்கு சப் டைட்டில் செய்து வருகின்றனர். நெட் ஃப்ளிக்ஸில் வெளிவரவிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் 'குயின்' தொடருக்கு இவர்கள்தான் சப் டைட்டில் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மணிரத்னம் படங்களுக்கு மட்டுமே இதுவரை சப் டைட்டில் எழுதிவரும் ஷாலினி சங்கர் சப் டைட்டில் செய்த முதல் படம் 'ராவணன்’. தொடர்ந்து 'கடல்', 'ஓகே கண்மணி', 'காற்று வெளியிடை', 'பரதேசி', 'எவனோ ஒருவன்' உள்ளிட்ட படங்களுக்கு சப் டைட்டில் எழுதிய ஷாலினி, 'ராவண்' இந்திப் படத்திற்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் எழுதியுள்ளார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். 2008-ல் இருந்து புரொடக்‌ஷன், லைன் புரொடியூசர், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் என பல்வேறு பணிகளில் இருந்துள்ளார். அந்தப் பணிகளில் இருந்ததால் கிடைத்த அனுபவங்களின் வாயிலாக சப் டைட்டில் பணிக்கும் வந்துள்ளார். அடுத்தடுத்த மணிரத்னத்தின் படங்களுக்கு சப் டைட்டில் எழுதும் பணியில் ஷாலினி ஈடுபட்டுள்ளார்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டுள்ள பிரியங்கா, ‘ஐரா’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ ஆகிய படங்களுக்கு சப் டைட்டில் எழுதியுள்ளார்.

சப் டைட்டில் பணியும், சூழலும்:

"சப் டைட்டில் துறை நிச்சயம் 9-5 மணி வேலை கிடையாது. படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, இரவு, பகலாக வேலை செய்ய வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட எல்லா படங்களுக்கும் தூங்காமல் வேலை செய்திருக்கிறோம். படம் வெளியாகும் தேதி நெருங்கும்போது, எல்லாக் குழுவினரும் அப்படித்தான் வேலை செய்வார்கள். அதுபோன்றுதான். கடந்த வாரம் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' ரிலீஸ் ஆவதாக இருந்தது. நாங்கள் அதற்கேற்றாற் போல் வேலை செய்து முடித்துக்கொடுத்தோம். ஆனால், சில காரணங்களுக்காக அந்தப் படம் வெளியாகவில்லை," என்கிறார் விக்ரம்.

படம் முடிந்த பிறகு, தணிக்கைக்குப் பின்பு, இயக்குநர், பாடலாசிரியர் உள்ளிட்டோரின் பரிந்துரைகளுக்குப் பின்பு என பலமுறை படம் முழுவதும் சப் டைட்டில்களை மாற்ற வேண்டியிருக்கும். இப்பணியின் மிகக்கடினமான பகுதியே, படத்தின் பல காட்சிகளை 30-40 முறை பார்க்க வேண்டியிருக்கும் என்கின்றனர் சில சப் டைட்டில் கலைஞர்கள்.

சப் டைட்டில் எழுதுவதற்கு என ஒவ்வொரு சப் டைட்டில் கலைஞரும் தனக்கென விதிமுறைகளையும் சூத்திரங்களையும் வகுத்துக்கொண்டிருக்கின்றனர். அதில், பெரும்பாலான சப் டைட்டில் கலைஞர்கள், பிபிசி பின்பற்றும் விதிமுறைகளையே பின்பற்றுகின்றனர்.

அடிப்படை விதிகளாக, ஒரு வரியில் அதிகபட்சமாக 6-8 வார்த்தைகள் இருக்கலாம். சப் டைட்டிலில் இரு முக்கியப் பணிகள் இருக்கின்றன. மொழிபெயர்ப்பு, ஸ்பாட்டிங். இதில் ஸ்பாட்டிங் என்பது ஒரு வசனம் பேசப்படும் நேரத்திற்குள் அதற்கான சப் டைட்டிலை அடங்கச் செய்வது. அதற்காக, வசனத்தின் அர்த்தம் சிதையாமல், வசனத்தை சில கலைஞர்கள் சுருக்கிக்கொள்கின்றனர்.

"கிட்டத்தட்ட திரைக்கதை மாதிரி சப் டைட்டிலை எழுத வேண்டும். 'வழவழ' என இருந்தால் படத்தின் அழகியலைப் பார்க்க முடியாது. சப் டைட்டில் என்பது கலை," என அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார் ஷாலினி சங்கர்.

ஷாலினி சங்கர்

பெருகும் வணிகம், உருவாகும் புதுத்தேவை:

"சப் டைட்டிலுக்கான முக்கியத்துவம் தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது. வணிக ரீதியிலான திரைப்படங்களுக்கு சப் டைட்டில் அவசியம் என இயக்குநர்கள் கருதுகின்றனர். உலக அளவில் தமிழ்த் திரைப்படங்கள் செல்வதற்கு சப் டைட்டில் தேவை. அப்போதுதான் அந்த நாடுகளில் திரைப்படத்தைத் தணிக்கை செய்வார்கள். வெளிநாடுகளில் இருக்கும் இரண்டாம், மூன்றாம் தலைமுறைத் தமிழர்கள், சப் டைட்டில் மூலமாகத்தான் தமிழ்த் திரைப்படங்களுடன் அப்டேட்டாக இருக்கின்றனர். உலகத் திரைப்பட விழாக்களுக்கு தமிழ்ப்படங்கள் செல்வதற்கும் சப் டைட்டில் மிக மிக முக்கியம். காது கேளாதவர்கள் திரைப்படம் பார்க்கவும் பயனுள்ளதாக இருக்கும்", என, சப் டைட்டிலின் முக்கியத்துவத்தை சப் டைட்டில் கலைஞரும், பயிற்சியாளருமான நந்தினி கார்க்கி பட்டியலிடுகிறார்.

நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட தளங்களில் தமிழில் ஒரிஜினல் படங்கள், தொடர்கள் இப்போதுதான் வரத் தொடங்கியிருக்கின்றன. அதன் வருகையும், சப் டைட்டிலின் முக்கியத்துவத்தையும், அதன் கலைஞர்களுக்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறது. அமேசான், நெட் ஃப்ளிக்ஸ் போன்றவை தனக்கென பிரத்யேக விதிமுறைகளை கடைபிடிக்கின்றன. அதனால் ,சப் டைட்டில் கலைஞர்கள் செய்துதரும் பணியை தங்கள் தரத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடன் சப் டைட்டிலை வெளியிடுகின்றன.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சப் டைட்டில் கலைஞர்களுக்கு 30,000 - 45,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகின்றது. அனுபவம் மிக்கவர்களுக்கு 1-1.5 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப இவை மாறலாம்.

பண்பாட்டுக்கூறுகளும், சப் டைட்டில் சவால்களும்:

மாமா, அண்ணன் உள்ளிட்ட உறவுகள், தமிழ்க் கலாச்சாரத்தில் ரத்த உறவுகளுக்கு மட்டுமல்லாமல், நெருக்கத்தின் காரணமாக மற்றவர்களையும் அழைக்கின்றனர். அதனால், உறவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் வர்ஷா.

"டீக்கடைக்காரரையும் திரைப்படங்களில் 'அண்ணன்' என அழைப்பார்கள். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் சர்வதேசப் பார்வையாளர்கள் இருவரும் சகோதரர்கள் என நினைத்துக்கொள்வார்கள். உறவுகளை மொழிபெயர்ப்பது சில சமயங்களில் சவாலானதாக இருக்கும். 'முறைப்பொண்ணு' என்பதை 'கசின்' (cousin) என்றே எழுதுவோம். உறவுகளை மொழிபெயர்க்கும்போது, சில சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கும்," என்று கூறுகிறார், வர்ஷா.

இதேபோன்று, தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகி, கதாநாயகனை 'மாமா' என அழைக்கும்போது, அதனை 'அங்கிள்' என மொழிபெயர்ப்பது சர்வதேசப் பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார், நந்தினி கார்க்கி. சில சமயங்களில் அண்ணி, சகோதரி என்பதை சர்வதேசப் பார்வையாளர்களுக்கு 'தீதி' (Didi) என இந்தியில் மொழிபெயர்க்கின்றனர். சர்வதேசப் பார்வையாளர்களுக்கு இத்தகைய இந்தி வார்த்தைகள் பரிச்சயமாக இருப்பதாக, சப் டைட்டில் கலைஞர்கள் கருதுகின்றனர்.

வட்டார மொழிகளை சர்வதேசப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, இயக்குநருடன் ஆலோசிப்பதும், திரைப்படத்தின் சாராம்சத்தை முழுவதும் அறிந்துகொள்வதும் அவசியம் என்கின்றனர் சப் டைட்டில் கலைஞர்கள். "நான் சப் டைட்டில் எழுதிய திரைப்படங்களில், 'மதயானைக் கூட்டம்' படம் கடினமாக இருந்தது. நுணுக்கமான கலாச்சாரக் கூறுகளுடன் அந்தப் படம் அமைந்திருந்தது. இயக்குநர், உதவி இயக்குநர்களுடன் கலந்தாலோசித்து சப் டைட்டில் செய்தேன்", என்கிறார் நந்தினி கார்க்கி.

"வடசென்னை திரைப்படத்தின் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதுவது கொஞ்சம் கடினமாக இருந்தது. வடசென்னையின் வட்டார மொழியை சப் டைட்டில் செய்வது கடினமாக இருந்தது. அந்தத் தமிழ் புரிவதற்கு கொஞ்சம் நாளானது. 'மூஞ்சிய புடிச்சிட்டு வா' என அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். அப்படியென்றால் 'பணம் சம்பாதித்துவிட்டு வா' என அர்த்தம். இதனைப் புரிந்துகொள்வது சிரமம். இம்மாதிரியான சமயத்தில் இயக்குநருடன் கலந்தாலோசிக்க வேண்டும்," என்கிறார் விக்ரம்.

காட்சி வடிவங்களும், சப் டைட்டில் பணியும்:

பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய சொற்கள், உறவு முறைகள், கலச்சார உணவுப்பொருட்கள், வட்டாரச் சொற்கள் போன்ற பிரத்யேக வார்ததைகளை மொழிபெயர்ப்பதைப் போலவே நீளமான வசனத்தை, சுருக்கமாக, உயிர் கெட்டுவிடாமல் பார்வையாளர்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம். இல்லையென்றால், காட்சியில் வசனம் முடிந்தபிறகும், சப் டைட்டிலில் அதே வசனம் ஓடிக்கொண்டிருக்கும். சப் டைட்டில் கலைஞர்களுக்கான சவாலில் இதுவும் முக்கியமானது.

"ஒரு வசனத்தை கிரிஸ்ப்பாக 1-2 வரிகளில் சொல்லிவிட வேண்டும். சென்னையின் வட்டார மொழியைச் சொல்லும்போது, பயன்படுத்தும் ஆங்கிலம் அதற்கேற்றாற் போல் இருக்க வேண்டும். அந்த வசனம், என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பதை பிரதிபலிக்க வேண்டும்," எனக்கூறுகிறார் ஷாலினி சங்கர்.

"ஒரு காட்சியில் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள் என்றால், அதைக்கூட 'க்ரௌட் கேதரிங்' (Crowd gathering) என படங்களில் சப் டைட்டில் வரும். ஆனால், நாம் அதனைக் கண்ணாலேயே பார்க்கிறோம். அந்த மாதிரியான விஷயங்களை சப் டைட்டில் செய்யக்கூடாது. பார்வையாளர்களின் திறனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. மக்கள் கூடுவதைப் பார்வையாளர்கள் கவனித்திருப்பார்கள். கண் தெரியாதவர்களுக்கான ஆடியோ டிஸ்கிரிப்ஷனில் தான் இதனைப் பயன்படுத்த வேண்டும். கண்ணுக்கே தெரியாமல், காதில் ரகசியம் சொல்வது போல் தான் சப் டைட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான், பார்வையாளர்கள் காட்சியைப் பின் தொடர முடியும்.

ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் போதும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அப்படியில்லை. நிச்சயமாக மொழிபெயர்ப்பு மட்டும் சப் டைட்டில் இல்லை. ஒலி, எடிட்டிங் உள்ளிட்ட திறன்களையும் அறிந்திருக்க வேண்டும். சிலர் மொழிபெயர்த்துத் தருகின்றனர், வேறொருவர் கோடிங் செய்கின்றனர். அப்படியில்லாமல், ஒருவராக செய்வதற்குப் பயிற்சி தேவை. புரியாத வார்த்தைகளைப் போடக் கூடாது. சப் டைட்டில் வார்த்தைகள் மிகவும் சிரமமாகவும் இல்லாமல்,மிக எளிமையாகவும் இல்லாமல் நடுநிலையுடன் இருக்க வேண்டும். " என்கிறார் நந்தினி கார்க்கி.

பாடல்களுக்கு சப் டைட்டில் எழுதும்போது அதன் கவிதை நடை குறையாமலும், அதேசமயத்தில் சிரிப்பை வரவழைக்காததாகவும் இருத்தல் அவசியம் என்கின்றனர் சப் டைட்டில் கலைஞர்கள்.

"பாடல்களில் சப் டைட்டில் கவிதை மொழியுடன் இருக்க வேண்டும். ஆனால், பாடலாசிரியர் சொல்ல வருவதை மாற்றக்கூடாது. 'அவள் கண் மீன் மாதிரி இருக்கிறது' என பாடல் வரி இருந்தால் அதனை அப்படித்தான் எழுத வேண்டும். பதிலுக்கு, 'அவள் கண் அழகாக இருக்கிறது' என எழுத முடியாது. ஆனால், சில பாடல் வரிகளை என்ன செய்தாலும் சரியாக ஆங்கிலத்தில் கொண்டு வர முடியாது", என்கிறார், பிரியங்கா.

பிரியங்கா

சில சமயங்களில் தமிழ்ப் பாடல் வரிகளுக்கான வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் சர்வதேச அளவில் இருக்கிறது எனவும், அதனைக் கண்டறிவதும், அதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வும் முக்கியம் என்கிறார், வர்ஷா. இல்லையென்றால், பாடல்களுக்கு சப் டைட்டில் எழுதும்போது, சில சமயங்களில் நகைச்சுவையாகவும், ஆபாசமானதாகவும் மாறிவிடும் என்கிறார்.

"ஆலுமா டோலுமா பாடலுக்கு சப் டைட்டில் எழுதுவது சவாலாக இருந்தது. 'ஆலுமா டோலுமா' என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருக்கிறது. அதனைக் கண்டுபிடித்து செய்வது தான் சவால்," என்று கூறுகிறார் வர்ஷா.

"ஒரு மொழியில் இருக்கும் நகைச்சுவையை இன்னொரு மொழிக்குக் கொண்டு வருவது கடினம். நகைச்சுவை வசனங்கள் எப்போதும் நீளமானதாகவும், வேகமானதாகவும் இருக்கும். அதனை ஒரு வரி அல்லது இரண்டு வரிகளுக்குள் அடக்குவது கடினம்", என்கிறார், சப் டைட்டில் மொழிபெயர்ப்பாளர் பிரியங்கா.

"ஐரா படத்தில் 'ஓவரா பேசுனன்னா கொழுக்கட்டையில் பாம் வைச்சிக் கொடுத்துருவேன்'னு யோகி பாபுவிடம், நயன்தாராவின் பாட்டி கூறுவார். கொழுக்கட்டையை வேறு நாட்டவருக்கு எப்படிப் புரிய வைப்பது? கொழுக்கட்டையை மோமோஸ் என சொன்னால் சிரிப்பார்கள். அந்த இடங்களில் கொஞ்சம் சமரசம் செய்துகொள்ளலாம்," என்கிறார்.

கொழுக்கட்டை என்பதை மோமோஸ் என சப் டைட்டில் செய்திருக்கின்றனர். படம்: ஐரா

"ஏதாவது ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வடிவேல் வசனத்தை சொன்னால், நாம் எல்லோரும் சிரிப்போம். ஆனால் ,அது தமிழ் தெரியாதவர்களுக்குப் புரியாது. முதலில் அது வடிவேல் காமெடி என்று தெரியாது. அதனால் தான் அது நகைச்சுவை என்பதும் தெரியாது. அந்த சமயத்தில், ஒரிஜினல் வசனத்தை, மற்றவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வோம்" என்று கூறுகிறார் விக்ரம்.

வசனத்திற்கு ஒரு எழுத்துருவும் (Font) , பாடலுக்கு வித்தியாசமான எழுத்துருவும் வர வேண்டும். அப்போதுதான், இரண்டுக்குமான வித்தியாசம் தெரியும். பாடல், இசை, வசனம் ஆகியவற்றை காது கேளாதவர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் ஒளியிலான எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும். சிலர் பாடல்களுக்கு ஸ்மைலி பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனைப் பயன்படுத்தாமல் முறையாக இருந்தால் அதன் அழகியலுடன் இருக்கும் என்றே பல சப் டைட்டில் கலைஞர்கள் கருதுகின்றனர். பாலைவனம், சூரிய வெளிச்சம் அதிகமாக உள்ள இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளின்போது திரையில் மஞ்சள் மற்றும் வெள்ளை அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் ப்ளோரசண்ட் அல்லது அடர்த்தியான வண்ணங்களைப் பயன்படுத்தி, அடர்த்தியான ஷேடோவை உபயோகிக்கின்றனர். அப்போதுதான் பார்வையாளர்கள் சிரமமின்றி சப் டைட்டிலைப் படிக்க முடியும். மஞ்சளில் சப் டைட்டில் இருந்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும். வெள்ளை நிறம் பயன்படுத்தினால் திரையுடன் கலந்து படிக்க முடியாததாகிவிடும் என்கிறார், நந்தினி கார்க்கி.

உள்ளூர்தன்மையும், சர்வதேச உணர்வும்:

தணிக்கைக்குப் படம் அனுப்பும் போது அல்லது உலகத் திரைப்பட விழக்களுக்கு அனுப்பப்படும் போதுதான், சப் டைட்டில் பணி, இவர்களின் கையில் வழங்கப்படும். அதனால் குறைவான நேரத்தில், இப்பணியை முடித்துக்கொடுக்க வேணிடியிருப்பதால் இரவு, பகலாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

சப் டைட்டில் பணியில் முக்கியமான சவால், ஒரு உணர்ச்சியை சர்வதேசப்படுத்தல். காதலன் - காதலி, கணவன் - மனைவி, அப்பா - மகள், அம்மா - மகன் என உணர்வுப்பூர்வமான உறவுகள் தங்களுக்கு இடையேயான வசனத்தைப் பேசும்போது அதில் அந்தரங்கமான உணர்வுகளும், பரிமாறல்களும் இருக்கும். உள்ளூர்த்தன்மை கெடாமலும், சர்வதேச உணர்வுகளுக்கு எட்டும் வகையிலும் இதை மொழிபெயர்த்தால் மட்டுமே அந்தக்காட்சி சரியாகச் சென்று சேரும். வட்டாரச் சொற்கள், பண்பாட்டுச் சொற்களுக்கு இணையான சொற்களை, பொதுமைப்படுத்தி தரும் இப்பணி கொஞ்சம் பிசகினாலும் கேலிக்குரியதாகிவிடும் என்கிறார்கள் சப் டைட்டில் கலைஞர்கள்.

தோசையை 'பேன்கேக்' என சப் டைட்டில் செய்திருக்கின்றனர். படம்: ஐரா

"ஓகே கண்மணியில் துல்கர் சல்மான், 'என் ஆசை கொத்தமல்லி' என்பார். 'மை டியர் கூஸ்பெரி' என மொழிபெயர்த்தேன். ஆனால், தமிழ் தெரிந்தவர்கள் யாராவது படித்தால், என்ன நெல்லிக்காய் என போட்டிருக்கிறேன் என நினைப்பார்கள். ஆனால், ஒரு வார்த்தையை அப்படியே மொழிபெயர்த்தால், அதன் அழகும், நுணுக்கமும் போய்விடும். 'செக்கச்சிவந்த வானம்' திரைப்படத்தில் 'உப்புமா' என்பதை அந்நாட்டுக்கு ஏற்ற வார்த்தையில் சொல்ல முடியாது. அதனால் அந்த வார்த்தையையே பயன்படுத்திக்கொண்டேன். உப்புமா, இட்லி, தோசை என்றால் எல்லா வெளிநாட்டவருக்கும் இந்திய உணவுகள் என்பது புரியும்", என்கிறார் ஷாலினி சங்கர்.

'மை டியர் கொத்தமல்லி' - 'My sweet gooseberry' படம்: ஓ.கே.கண்மணி

நந்தினி கார்க்கி ஏற்கெனவே கூறியது போல சப் டைட்டில் 'கண்ணுக்கு தெரியாமல், காதில் ரகசியம் சொல்வது போல் இருக்க வேண்டும். அப்போதுதான், சப் டைட்டில் குறித்துக் கவலைப்படாமல், பார்வையாளர்கள் திரைப்படத்தின் அழகியலை ரசிக்க முடியும்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x