Published : 17 Sep 2019 12:50 PM
Last Updated : 17 Sep 2019 12:50 PM
கட்டுமானங்கள் இல்லையெனில் தேசத்தின் வளர்ச்சி இல்லை. ஒரு கட்டுமானத்தின் ஆணிவேராகத் திகழ்வது செங்கல். இத்தகு செங்கலைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமின்றி, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் லட்சக்கணக்கானோரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செங்கல் சூளை தொழிலை வரைமுறைப்படுத்த வேண்டுமென்று செங்கல் தொழில் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுமே வலியுறுத்தி வருகின்றனர்.
கட்டிடங்களும், கட்டுமானமுமே ஒரு நாடு வளர்ச்சியடைந்ததற்கு அடையாளமாகத் திகழ்பவை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுட்ட செங்கற்களால் வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, நாகரிகம் தோன்றிய மற்றும் மிகுதியாக இருந்த பகுதிகளில் செங்கல் கட்டுமானங்கள் இருந்துள்ளன. செங்கலும், சுண்ணாம்புக் கலவையும் சேர்த்து கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும், உறுதியாக உள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சியில்...
கோவையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 110 ஆண்டுகளுக்கு முன்பே பீளமேடு பகுதியில் செங்கல் தயாரிப்பு இருந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குதிரை வண்டி நீதிமன்றம் உள்ளிட்ட கட்டிடங்களும், சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு கட்டிடங்களும் கோவையில் தயாரிக்கப்பட்ட செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளன. ஏறத்தாழ 40, 50 ஆண்டுகளுக்கு முன் கவுண்டம்பாளையத்தில் செங்கல் சூளை தொழில் இருந்துள்ளது. கணுவாய், பன்னிமடை, இடையர்பாளையம், சோமையம்பாளையம், கேஎன்ஜி.புதூர், தடாகம் பகுதிகளில் மழையின்மை காரணமாக விவசாயம் பொய்த்துப்போகவே, அப்பகுதியினர் தங்களது வாழ்வாதாரத்துக்காக கொஞ்சம் கொஞ்சமாக செங்கல் சூளை தொழிலில் ஈடுபடத் தொடங்கினர்.
அப்பகுதிகளில் கிடைத்த வளமான செம்மண், செங்கல் தயாரிக்க ஏதுவாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் சுமார் 60 செங்கல் சூளைகள் இருந்துள்ளன. கோவையின் வளர்ச்சி காரணமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, தற்போது 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இப்பகுதிகளில் உள்ளன. குறிப்பாக, 22 நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், தடாகம், பன்னிமடை, வீரபாண்டி ஊராட்சிகளில் செங்கல் சூளை தொழில் பிரதானமாக உள்ளது.
ஆரம்பத்தில் கையாலேயே மண் பிசைந்து, செங்கல் தயாரித்துள்ளனர். கட்டை வண்டியில் மண் அள்ளிக் கொண்டுவந்து, பதப்படுத்தி, செங்கல் தயாரித்து, மாட்டு வண்டியில் அதை கோவைக்கு கொண்டுசென்று விற்பனை செய்துள்ளனர். இப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் மிகுந்த தரம் உடையவை என்பதால், இவற்றுக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் செங்கல் சூளைகள் விரிவடையத் தொடங்கின. 1998-க்கும் பிறகு செங்கல் தயாரிப்புத் தொழில் நவீனமாகத் தொடங்கியது. கோவை நகரின் அசுர வளர்ச்சி காரணமாக, பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் உருவாகத் தொடங்கின.
இதனால், செங்கற்களின் தேவையும் அதிகமானது. இதனால், இயந்திரங்களைப் பயன்படுத்தி, அதிக அளவிலான செங்கற்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.
வட மாநிலத் தொழிலாளர்கள்!
செம்மண், களிமண் ஆகியவற்றைக் கலந்து, செங்கற்கள் தயாரிக்கத் தொடங்கினர். ஒருகட்டத்தில் நிறைய வேலைவாய்ப்புகளை செங்கல் சூளைகள் உருவாக்கித் தந்தன. இதனால், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர், தங்கள் குடும்பத்துடன் இப்பகுதிகளில் குடியேறி, செங்கல் சூளைகளில் பணியாற்றத் தொடங்கினர். தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுதவிர, லாரி, டிராக்டர், டிப்பர் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள், கிளீனர்கள், வாகன கூண்டுகட்டுவோர், பழுதுபார்ப்போர், வெல்டிங், டயர் ரீட்ரேடிங் தொழில் செய்வோர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் கொத்தனார், மேஸ்திரி, சித்தாள், பிளம்பர், பெயின்டர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்டோர் என லட்சக்கணக்கானோர் இந்த தொழிலை நம்பியுள்ளனர்.
மேலும், 22 நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், தடாகம், பன்னிமடை, வீரபாண்டி ஊராட்சிகளில் வாரச்சந்தைகள், தினசரி சந்தைகள், பல்வேறு கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவையும், இப்பகுதி செங்கல் சூளைத் தொழிலாளர்களையே நம்பியுள்ளன. செங்கல் சூளை தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், இப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவில் அமைந்துள்ளது, இப்பகுதி பொருளாதார நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. வார மற்றும் தினசரி சந்தைகளில் லட்சக்கணக்கில் வர்த்தகம் நடக்கிறது.
தரம் மிகுந்த செங்கற்கள்...
கோவையில் தயாரிக்கப்படும் செங்கற்கள் கோவை மட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த செங்கற்கள் உறுதியாகவும், தரமாகவும் இருப்பதால், கட்டுமானத் துறையினர் மற்றும் பொதுமக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. இப்பகுதிகளில் மட்டும் தினமும் பல லட்சம் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. சோமையனூர் செங்கல் தரம் மிகுந்தவையாக இருப்பதாகவும், அவற்றால் கட்டப்படும் கட்டிடங்கள் உறுதி மிக்கவையாக இருப்பதாகவும் பாராட்டி, பிரிட்டிஷ் அதிகாரி பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சிலர் புகார் தெரிவித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர்கள் தரப்பில் கேட்டபோது, "கனிம வளத் துறையிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே செம்மண் எடுத்து, செங்கற்கள் தயாரிக்கிறோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை எவ்விதப் புகாருக்கும் உள்ளானதில்லை.
முந்திரி தோல் மற்றும் பனைமரத்தை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்த உடனேயே, அவ்விரண்டையும் பயன்படுத்தி, செங்கற்கள் சுடுவதை நிறுத்திவிட்டோம். சீமைக்கருவேல மரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமான நிலக்கரி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். அதேபோல, 30 மீட்டர் உயரத்துக்கு புகைபோக்கிகள் அமைத்து, புகையை வெளியேற்றுகிறோம்.
இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சோதனை நடத்தினர். கோவை நகரில் காற்றுமாசுடைய அளவு 5.3 என்ற அளவில் இருக்கும் சூழலில், எங்கள் பகுதியில் 3.2-தான் உள்ளது. இதிலிருந்தே காற்றில் மாசுவின் அளவு குறைவாக இருப்பதை தெரிந்துகொள்ளலாம். அதேபோல, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில்தான் வசிக்கிறோம். பெரிய அளவுக்கு நோய் தாக்குதல் எதுவும் கிடையாது. மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை குழிகளில் யானையோ அல்லது மற்ற விலங்குகளோ விழுந்து இறந்த சம்பவமே நடக்கவில்லை. மின்சாரம் தாக்கியும், ரயிலில் அடிபட்டும்தான் யானைகள் இறந்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
டிப்பர் லாரிகளையும் நாங்கள் தடாகம் உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் அனுமதிப்பதில்லை. புறவழிச் சாலைகளில்தான் வரவழைக்கிறோம். அதேபோல, தூசு கிளம்புவதாக புகார்கள் எழுந்தவுடன், செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் லாரிகளில் தண்ணீரை வாங்கி, சாலைகளில் தெளிந்து, தூசு எழும்பாமல் பார்த்துக் கொண்டோம்.
செங்கல் சூளை தயாரிப்பாளர்கள் சார்பில், இப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க, உதவித்தொகை, நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் என பலவற்றையும் வழங்கி வருகிறோம். தேவைப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறோம். இதையெல்லாம் மறைத்துவிட்டு, சிலர் வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பது மன உளைச்சலை உண்டாக்குகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமாகத் திகழ்பவை செங்கல் சூளைகள்தான். எங்கள் தொழிலை வரைமுறைப்படுத்தி, பிரச்சினைகளின் தொழில் செய்ய அரசு உதவ வேண்டும். இது தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். செங்கல் சூளை தொழிலை ஊக்குவிப்பது, கோவையின் வளர்ச்சிக்கும் உதவும். மேலும், அரசுக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும். லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!
செங்கல் சூளைகளுக்காக வெட்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், இப்பகுதிகளில் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. பல்வேறு சிறு, குறுந்தொழில்கள் நெருக்கடிக்கு உள்ளான சூழலில், கட்டிட கட்டுமானத் துறைதான் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இவற்றுக்கு அடித்தளமாக உள்ளது செங்கற்கள்தான். மேலும், செங்கல் தயாரிப்பால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் பயனடைகின்றனர்.
அதுமட்டுமின்றி, செங்கற்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களைத் பயன்படுத்துவது, பிரச்சினைக்குத் தீர்வாக இருக்காது. மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ள கட்டுமானத் துறையின் தேவையை, செங்கற்களால்தான் பூர்த்திசெய்ய முடியும். மேலும், சுட்ட செங்கற்களால் கட்டப்படும் கட்டிடங்கள், உடலுக்கு உகந்தவை என அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளை நிர்வாகங்கள் தொழில் தொடங்குவதற்காகவும், விரிவாக்கத்துக்காகவும் இங்குள்ள பொதுத்துறை வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளன. இந்த தொழில் முடங்கினால், வங்கிக் கடனை திரும்பச் செலுத்துவது எப்படி? எனவே, செங்கல் சூளை தொழிலை வரைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்" என்றனர்.
தடாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசியபோது, "செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள்தான், அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் பயில்கின்றனர். அந்தக் குழந்தைகள் நன்கு தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு, பாடங்களைப் பயில்கின்றன" என்றனர்.
தடாகம் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "செங்கல் சூளைகள்தான் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை நம்பித்தான் பெரும்பாலான கடைகள் செயல்படுகின்றன. மேலும், செங்கல் சூளை சார்ந்த தொழில், வணிக நிறுவனங்கள் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதுவரை சுற்றுச்சூழல் அல்லது மாசு பிரச்சினைகள் பெரிய அளவில் எழவில்லை" என்றனர்.
- ஆர்.கிருஷ்ணகுமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT