Published : 28 Aug 2019 06:33 PM
Last Updated : 28 Aug 2019 06:33 PM
உலகின் நுரையீரல் எனப்படும் பிரேசிலின் மழைக் காடுகள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக எரிந்துக் கொண்டிருக்கிறது. அதிலுள்ள அரியவகை விலங்கினங்களும், தாவர, மர வகைகளும், ''உங்கள் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது'' என்பதை தங்களை எரித்து வரும் கனல்களின் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கின்றன.
அமேசான் மழைக் காடுகள் உலகம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி தனது மண்ணில் சேகரித்து வைத்துக் கொண்டு நமக்கு தேவையான அக்சிஜனை வெளியிடுக்கின்றன. இதன்மூலம் அமேசான் காடுகள் பருவ நிலைமாற்றத்திலிருந்து நம்மை காக்கும் காப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நமது காப்பாளர்கள் மீதுதான் பிரேசில் அதிபர் கத்தியை பாய்ச்சி இருக்கிறார்.
தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ பொதுத் தேர்தலின் போதே, 'அமேசான் காடுகளை நியாயமான அளவில் பிரேசிலின் பொருளாதாரத் தேவைகளுக்காக சுரண்டிக்கொள்ளலாம்' என்பதை வெளிப்படையாக அறிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை அவர் தீவிரப்படுத்தி இருக்கிறார் என்று பிரேசிலின் பழங்குடிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காடழிப்பு காரணமாக கடந்த ஜூன் மாதத்திலிருந்து சுமார் 4,000 சதுர கி.மீ. பரப்பளவுக்கு அதிகமான மழைக் காடுகள் அழிந்துள்ளன. காடழிப்பைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சூற்றுச் சூழல் செயல்பாட்டாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேசிலின் மழைக் காடுகளில் வரலாறு காணாத அளவில் வழக்கத்துக்கு மாறான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் சேதம் கடந்த ஆண்டைவிட 87 % சதவீதம் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.
காட்டுத் தீயினால் பிரேசிலின் மழைக் காடுகளில் பேரழிவை சந்தித்து கொண்டிருக்கும் சூழலில் ’காடு கொன்று நாடாக்கிய சமூகமும், அரசும் எந்த கொடுமைகளையும் கண்டுகொள்ளாது’ என்ற வார்த்தைகளுக்கு ஏற்பவே, இதற்கான அவசர தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்காது மெத்தனம் காட்டி வந்தது பிரேசில் அரசு.
மேலும் தன்னார்வலர்களும், விவசாயிகளும் வேண்டும் என்றே பிரேசில் மழைக் காடுகளில் தீயை ஏற்படுத்தியுள்ளனர் என்று தன் மீது பாய்ந்த குற்றச்சாட்டை அவர்கள் மீது திசைமற்றினார் ஜெய்ர்.
இதற்கிடையில்தான் சமூக வலைதளங்களில் #SaveAmazon என்ற ஹாஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் செய்யப்பட்டது. பிரபலங்கள் பலரும் அமேசான் காடுகளைக் காக்க வேண்டும் என்று குரல் எழுப்ப தொடங்கினர். பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ஒருபடி முன் சென்று ”நமது வீடு அழிந்து கொண்டிருக்கிறது. அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து ஜி -7 நாடுகள் பங்கேற்கும் மாநாட்டில் பேசப்படும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ விவாதப் பொருளாகவும் மாறியதைத் தொடர்ந்து அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பிரேசில் ஈடுபட்டுள்ளது.
காட்டுத் தீ விபத்து ஏற்படுவது இயற்கையில் இயல்பான ஒன்றுதான் என்றாலும் இதின் பின்னணியில் கார்ப்பரேட்டுகளும் அவற்றின் கைப்பாவையாக அரசுகளும் செயல்படுவதாக தெரிவிக்கிறார், காடுகள் குறித்து அவற்றின் நலன் சார்த்து அதிகம் எழுதி வரும் பறவைகள் ஆய்வாளரான ரவீந்திரன் நடராஜன்,
“இயற்கையின் வளங்கள் அனைத்தும் மனிதனுக்கானது மட்டுமே என்ற எண்ணம் உலகம் முழுவதும் பரவலாக நிலவி வருகிறது. இதனை உலக நாடுகள் அனைத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசாங்கங்கள் மூலம் தங்களுக்கான இலக்கை அடைந்து வருகிறார்கள்.
இந்த கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பதற்கு அரசாங்கத்தில் சரியான தலைமைகள் இல்லை. இதில் அமேசான் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது என்பதற்காக அதனைப் பற்றி நாம் பேசாமல் இருந்து விடமுடியாது. நாம் இதற்கு குரல் எழுப்பவில்லை என்றால் நமது ஒட்டுமொத்த பல்லுயிர் தன்மை முற்றிலுமாக பாதிப்படைந்து விடும்.
இதன் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளில் பேராபத்தை எதிர்கால தலைமுறையினர் எதிர் கொள்ளலாம். உதாரணத்துக்கு 70-களில் தண்ணீரை இன்னும் வரும் ஆண்டுகளில் காசு கொடுத்து வாங்கும் நிலை வரும் என்று கிண்டலாக கூறினர். ஆனால் அது தற்போது உண்மையாகி இருக்கிறது அல்லவா?...
அதே மாதிரி சுத்தமாக காற்று என்று கூறி அடுத்த 25 ஆண்டுகளில் பொது மக்கள் மத்தியில் திணிப்பதற்கான சூழலை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன. இதில் ஆபத்து என்னவென்றால் அவர்கள் தங்கள் திட்டத்தை சரியாகக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சில ஆண்டுகளில் இயற்கை வளங்கள் அனைத்தும் பெரிய, பெரிய கார்ப்பரேட்கள் வசம் சென்றுவிடும் இதில் சாமனிய மனிதன் என்பவன் அவர்களிடம் அடிமையாக சிக்கிக் கொள்வான்.
இங்கு கூட நிறைய பேர் கேட்கிறார்கள் மழை பெறுவதற்கு உள்ளூரில்தானே மரம் வைக்கவேண்டும், அதற்குப் பதிலாக ஏன் பிரேசிலில் எங்கோ இருக்கும் அமேசான்காற்றை பற்றி பேசுகிறீர்கள் என்று.... அவர்கள் மரம் நடலாம் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
நல்ல விஷயம். ஆனால் உங்கள் உடலில் காயம் ஏற்படுவதற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? உலகின் உயிர்ப்புத் தன்மையை நிலைப்படுத்தி வைப்பது அமேசான் காடுகள்தான். இந்த உலகிற்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடும் பெரும்பணியை அமேசான் காடுகள் பெரும் பங்கை ஆற்றி வருகின்றன.
இதன் காரணமாக, அமேசானை சுற்றிலும் உள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, ஆண்டிப்பட்டியில் இருப்பவர்களும், சென்னையில் இருப்பவர்களும், காஞ்சிபுரத்தில் இருப்பவர்களும்கூட அமேசான் காடுகளை பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டும்.
இந்த அமேசான் காட்டுத் தீ விபத்தில் நாம் இரண்டு விஷயத்தை கவனமாக பார்க்க வேண்டும். ஒன்று இந்த காட்டுத் தீ காரணமாக அமேசான் வெளியிடும் ஆக்சிஜன் முற்றிலுமாக எரிந்து விடுகிறது. இதன் காரணமாக வளிமண்டலத்தில் கார்பன் அளவு அதிகமாகி இருக்கிறது.
இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே இருக்குமேயானால்... கண்டிப்பாக இதன் முடிவு என்னவாக இருக்கும் என்றால், நிச்சயம் மழைப்பொழிவு பாதிக்கப்படும், சில இடங்களில் மழைப்பொழிவு இல்லாமலும் போகலாம், சில இடங்களில் மழை கொட்டித் தீர்க்கும். இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கும்.
இதன் பாதிப்பு பிரேசிலில் தெரிகிறதோ இல்லையோ, பிரேசில் அருகிலோ அல்லது எங்கோ ஒரு முனையில் இருக்கும் நாட்டில் இதன் பாதிப்பை உணரலாம். இதன்காரணமாக நாம் எண்ணி பார்க்க முடியாத பாதிப்பு ஏற்படும். இதனால்தான் பிரேசில் மழை காடுகள் போன்ற பெரிய பகுதிகள் பாதிப்படையும்போது நாம் அதனை பற்றி கவலைப்பட வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் சாலையில் இருக்கும் ஒவ்வொரு மரமும் முக்கியம் என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக உள்ளது அதுபோல் பெரும் பாதிப்பு ஏற்படும்போது அதை தடுப்பது அவசியம். இதற்கு எந்த அளவில் இந்தத் தகவலை அடுத்த தலைமுறைக்கும் நாம் கொண்டு செல்கிறோம். அமேசானை பற்றி பேசினால் தான் நமது பிள்ளைகள் மேற்கு தொடர்சி மலைகளைப் புரிந்து கொள்வார்கள்.
ரவீந்திரன் நடராஜன்
அதுமட்டுமில்லாது இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் நீங்கள் எடை போட்டீர்கள் என்றால், அமேசான் காடுகளில்மட்டும் சுமார் 20% விலங்கினங்கள் உள்ளன. உலகில் உள்ள விலங்கினங்களில் 10-ல் ஒரு சதவீதம் அமேசானை சேர்ந்த விலங்கினமாகதான் இருக்கும்.
காட்டுத் தீ ஏற்படுபது வழக்கமான ஒன்றுதான் ஆனால் காட்டுத் தீயிலிருந்து காடுகளே தங்களை மறுசீரமைப்புக்கு உள்ளாக்கி கொள்ளும். ஆனால் அதில் மனிதன் தலையிடாமல் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் காட்டுத் தீ என்பது நேரடியாக நடக்கிற விஷயம் கிடையாது. பெரும்பாலான காட்டுத் தீயை மனிதர்கள்தான் ஏற்படுத்துகிறார்கள்.
காட்டுத் தீ ஏற்பட்டவுடன் அந்த இடத்தை சுரங்கமாகவும், விளைச்சல் நிலமாகவும் மாற்றதான் மனிதன் முயற்சிக்கிறான்.ஏதோ ஒரு வழியில் பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலனவர்களின் எண்ணமாக உள்ளது.
இயற்கையை அழித்து அதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தலாம் என எண்ணும் எந்த நாட்டிற்கும் இது நல்வழியை ஏற்படுத்தாது. தங்க முட்டை போடுகிற வாத்தை ஒரே நாளில் கழுத்தறுக்கிற விஷயம்தான் இது. மனிதனின் பேராசையை இயற்கையால் நிச்சயம் பூர்த்தி செய்ய முடியாது. ஏன் உலகத்தின் எந்த சக்தியாலும் மனிதனின் ஆசையை முழுமையாக நிறைவேற்ற முடியாது.
ஒரு செயற்கையானத் தேவையை உருவாக்கி பின்னர் அதன் பின்னால் மக்களை ஓடவிட வேண்டியதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இது மனிதர்களிடம் ஒரு அழுத்ததை உருவாக்கும். இதனால் பெரும் மோதல்கள் ஏற்படும். நாட்டிற்கு இடையே போர்கள் கூட உருவாகலாம்.
எனவே இதற்கான விழிப்புணர்வுகள் நிச்சயம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதனை அரசாங்கம்தான் முன்னெடுக்க வேண்டும், ஆனால் இதன் பின்னணியில்தான் பெரும்பாலான அரசுகள் உள்ளன.
எனவே முதலில் தனக்கு என்ன தேவை என்பதை அரசு உணர வேண்டும். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, அவனும் இதில் ஒரு அங்கம் என்பதை உணர வேண்டும். இதை உணராத நிலையில் வரும் பெரும் ஆபத்துகளை மனிதன்தான் எதிர்கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு மதுரையில் மேலூர் பகுதியில் 70-களில் கிரானைட் குவாரி வருவதற்கு முன்னர் அப்பகுதிகளிலிருந்த மலைகள் இருந்தவரை எந்தவொரு வைரல் காய்ச்சலும் அப்பகுதிக்கு வராமல் இருந்தது. ஆனால் தற்போது வைரல் காய்ச்சல் ஏதாவது பரவுகிறது என்றால் அது முதலில் தாக்கும் பகுதி மேலூர்தான். அந்தளவு அங்கு சுரண்டப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக மழை பெய்தால் கூட தண்ணீர் நிலத்தடியில் உறிஞ்சப்படாமல் தேங்கி நோய் தொற்று ஏற்படுகிறது. அன்று மதுரையில் இந்த கிரானைட் சுரங்கம் கொண்டுவரும்போது அது பெரிதாக தெரிந்தது. பணம் சம்பதிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் பத்து வருடங்களுக்கு பின்னர் மருத்துவமனையில் செலவிட வேண்டியதாயிற்று.
வைகை ஆற்றில் சித்ரா பவுர்ணமி விழாவில் ஒரு அடியில் மண்ணை தோண்டினாலும் தண்ணீர் வந்துவிடும் ஆனால் நிலைமை தற்போது தலைகீழாகிவிட்டது. இது அமேசானாக இருந்தாலும் சரி ஆண்டிப்பட்டியாக இருந்தாலும் சரி... முடிவு ஒன்றுதான்
இயற்கை குறித்து அறிய பள்ளிகளில் குழந்தைகளை பாட புத்தகத்தை தாண்டி வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். காடு என்ன என்பதையும் அது நமக்கு என்ன அளிக்கிறது என்பதை அவர்கள் கற்க வேண்டும். இல்லை என்றால் ’ ‘பருவ நிலை மாற்றம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மாதிரியும், இயற்கை குறித்த கவலை எனக்கு இல்லை. எனக்கு ஓட்டளித்த மக்கள் குறித்துதான் எனக்கு கவலை என்று பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ மாதிரிதான் பேசிக் கொண்டு இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.
காடுகளை அழித்து பொருளாதாரத்தை உயர்த்தலாம் என்ற முரணான எண்ணத்திலிருந்து அரசுகள் பின்வாங்க வேண்டும் என்ற எச்சரிக்கையை அமேசான் மழைக் காடுகள் நமக்கு அளித்திருக்கின்றன.
அமேசான் மழைக் காடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பேரழிப்புகளால், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறைக்கவும், எதிர்காலத்தில் ஏற்படும் இம்மாதிரியான இயற்கை பேரழிவுகளை தடுக்கவும் தற்போதிருந்தே செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT