Last Updated : 05 Aug, 2019 04:40 PM

 

Published : 05 Aug 2019 04:40 PM
Last Updated : 05 Aug 2019 04:40 PM

அழிக்கப்படும் அமேசான் மழைக்காடுகள்:  பேராபத்தில் பூர்வகுடிகள் 

”போல்சோனரோ நல்லவர் அல்ல... அவர் பழங்குடிகளைக் கொல்ல நினைக்கிறார்.  எங்களது பச்சை நிலத்தில் குண்டு வீசுகிறார். இது தான் நாங்கள் உங்களுக்கு கூறும் செய்தி”, பிரேசில் பழங்குடி இனத்தவர்களின் ஒட்டுமொத்தக் குரலாக இது  ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் வசிக்கும் 300க்கும் அதிகமான பூர்வகுடிகள் தங்களின் உலகமாகிய காடுகளை அழிப்பதற்கு எதிராகப் பெரும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த திங்களன்று ஆயுதம் ஏந்திய குழுவால் வைய்பி இனக் குழுவின் தலைவர் எமிரா வைய்பி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 

எமிராவின் கொடூர மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்ததையடுத்து பிரேசிலின் மழைக்காடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உலக நாடுகள் திரும்பிப் பார்க்க தொடங்கி இருக்கின்றன.

மேலும், எமிராவின் இந்த மரணத்துக்குப் பின்னர் வைய்பி இன மக்கள் இரவு பகல் பாராமல் தங்களது உயிருக்கு ஆபத்து எழலாம் என்று அந்த மழைக்காடுகளில் சுற்றி வருகின்றனர். தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி இருக்கிறார் என்றும் உலக நாடுகளை நோக்கி கூடுதல் சத்தத்துடன் குரல் எழுப்ப முயல்கின்றனர். 

ஜெய்ர் போல்சனரோ பிரேசிலின் தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்ட தலைவர்களில் ஒருவர். அமேசான் காடுகளை நியாயமான அளவில் பிரேசிலின் பொருளாதாரத் தேவைகளுக்காக சுரண்டிக்கொள்ளலாம் என்பதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை என்று போல்சோனரோ முன்னரே பேசியிருந்தார். இந்நிலையில், இவரது தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு, கடந்த ஜூலை மாதம் வரை சுமார் 4,000க்கும் அதிகமான சதுர கி.மீ. காடுகளை அழித்துள்ளது என்று சமீபத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்தது. 

பிரேசிலின் மழைக் காடுகள்

சுமார் 10,000க்கும் அதிகமான சுரங்கத் தொழிலாளர்கள் பிரேசிலின் மழைக்காடுகளை முகாமிட்டு வனங்களின் காவலர்களாக உள்ள பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்து தங்கச் சுரங்கங்களாகவும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும் பயன்படுத்த காடழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதனைப் பற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் போல்சோனரோ ஒரே அடியாக மறுத்துவிட்டார்.

ஆனால், பழங்குடிகளின் தரப்பில் போல்சோனரோ எங்களது உரிமைகளையும் எங்களது மக்களையும் கொன்று  நாங்கள் சொர்க்கமாக கருதிய மழைக்காடுகளை போர்ப்பகுதியாக மாற்றி விட்டார் என்றும் அரசாங்கத்திடம் பாதுகாப்பு கேட்டும் எங்களுக்கு எந்த உதவியும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரேசில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பூர்வகுடிகள் 

பிரேசில் பழங்குடி மக்கள் தங்கள் உயிரைப் போல் காத்து வரும் மழைக்காடுகள் குறித்தும், பருவமழைகளை வரைமுறைப்படுத்துவதில் மழைக்காடுகளின் முக்கியப் பங்கு என்ன என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்  கூறியதாவது:

''நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் சுமார்  20 சதவீதத்தை உற்பத்தி செய்வது, பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகள். இதுமட்டுமல்ல, இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய தாவரங்கள், விலங்கினங்களில் சுமார் 10% இந்தக் காடுகளில்தான் உள்ளன. அவ்வளவு பல்லுயிரியம் நிறைந்த செழிப்பான தன்மை கொண்டவை இந்த மழைக்காடுகள். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக மனிதன்  வெளியிட்ட கார்பனை பிரேசிலின் மழைக்காடுகளில் உள்ள மரங்கள் உள்வாங்கி நிற்கின்றன. அதுவும்  இந்தக் காடுகளை ஒட்டிய நாடுகளிலிருந்து வெளிவரக்கூடிய கார்பனை கடந்த பல ஆண்டுகளாக அமேசான் காடுகள் உள்வாங்கி உலகத்தை புவி வெப்பமயமாதலில் இருந்து காப்பாற்றி வருகின்றன. 

பிரேசிலின் இந்த மழைக்காடுகளில் காடுகளில் சுமார் 10 லட்சம் பூர்வகுடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்/ அவர்களுக்கு அமேசான்தான் வாழ்வாதாரம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் காடுகள் இவ்வுலகின் நுரையீரல்கள் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அமேசானில் காடழிப்பு இப்போதல்ல, கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 1995 ஆம் ஆண்டு அதன் உச்சத்திற்குச் சென்று சுமார் 29,500 சதுர கி.மீ. அளவிற்கும் காடுகள் அழிக்கப்பட்டன. அது படிப்படியாக குறைந்து 2012 ஆம் ஆண்டு குறைவான காடுகளே அழிக்கப்பட்டதாக தரவுகள் சுட்டிக் காண்பிக்கின்றன. 2012 ஆம் ஆண்டிற்கு[ பிறகு காடழிப்பு மிக அங்கு அதிகமாகத் தொடங்கியது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 60% கூடுதலாக காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் 488.4 சதுர கி.மீ. ஆக இருந்த காடழிப்பு இந்த ஆண்டு 769.1சதுர கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. இது எவ்வளவு என்றால், சுமார் 'ஒன்றரை கால்பந்தாட்ட மைதானம்' அளவிற்கு ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

பிரேசில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அமேசான் காடுகளின் முழு வளமும் பயன்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி சிந்தனை கொண்ட போல்சோனரோ வெளிப்படையாக அறிவித்தார். தேர்தலில் அவர் வெற்றிபெற்ற பிறகு அவரும் அவருடைய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் சேர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்களை தளர்த்தியது மட்டுமல்லாமல் ஒழுங்குமுறை அமைப்புகளையும் நீர்த்துப்போகச் செய்தனர்.

முன்னெப்போதும் இல்லாமல் இந்த அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்கிற விவரத்தை சொல்வது பிரேசில் அரசாங்கத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்தான். சென்ற மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு வெளியிட்டுள்ளது.

போல்சோனரோவும் அவருடைய அரசாங்கமும் இவ்வுலகத்தின் 'காலநிலை சமநிலைக்கு எதிரானவர்கள்' மட்டுமல்ல பிரேசிலின் பொருளாதாரச் சீரழிவுக்கு இன்னும் சிலஆண்டுகளில் காரணமாகிவிடுவார்கள் என்கிறது பிரேசில் நாட்டிலுள்ள கிரீன்பீஸ் அமைப்பு. 

போல்சோனாரோவின் இம்மாதிரியான வணிகசார்பு நிலைப்பாட்டால் துணிச்சலான மரம் கடத்திகள், விவசாயிகள் மற்றும் சுரங்க முதலாளிகள், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, அமேசான் வனப்பகுதிக்குள் அழிக்கப்பட்டு வரும் நிலப்பரப்பின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்கிறார் ரிட்டில். காடழிப்பை கட்டுக்குள் வைக்க நினைக்கும் அமைப்புகளை அரசு முடக்க ஆரம்பித்துள்ளது.

பூவிலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

மேலும் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமலாக்க நிறுவனமான பிரேசிலிய சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கக்கூடிய  நிறுவனத்தின் (ஐபாமா) பட்ஜெட்டை 23 மில்லியன் டாலர் குறைத்துள்ளது போல்சோனரோ அரசு. மேலும் ஆறு மாதங்களில், அரசாங்கம் ஐபாமாவின் 27 மாநில அலுவலகங்களில் நான்கிற்கு மட்டுமே பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அந்த நான்கு மாநிலங்களுமே அமேசான் மழைக்காடுகள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய அளவில் இல்லை.

பருவநிலை மாற்றங்களால் மனிதனின் இருத்தியல் கேள்விக்கு உட்படுத்தியிருக்கும் இந்தத் தருணத்தில், காடுகளை அதிகப்படுத்தினால்தான் ஓரளவிற்காவது புவி வெப்பமயமாதலைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் உலகின் கார்பன் தொட்டி என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது துளி அளவிற்குக் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது''.

இவ்வாறு சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் பூர்வகுடிகளின்  நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுத்தான் வந்து கொண்டிருக்கிறது. இதில் வலதுசாரி சிந்தனை கொண்ட தலைவர்களில் ஆட்சியில் இது சற்று கூடுதல் என்ற  குற்றச்சாட்டை போல்சோனரோ தனது அண்மைக்கால செயலின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 

தங்களைப் பாதுகாப்பதற்கான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் தங்களுக்கான கடைசி வாய்ப்பு என பழங்குடிகள் தங்கள் போராட்டத்தை  தீவிரப்படுத்தியுள்ளனர்.  மறுபக்கம் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள  மாற்று வழிகளை பிரேசில் தேடிக்கொள்ள வேண்டும் என்று  சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சூழலை விரும்பும் நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.

பிரேசில் அதிபர் போல்சோனரோ செவி சாய்ப்பாரா? 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x