Published : 15 Jul 2019 05:38 PM
Last Updated : 15 Jul 2019 05:38 PM

கருக்கலைந்த காரணத்தால் என்னால் சரியாக தண்ணீர் பிடிக்க முடியவில்லை: இளம்பெண்ணின் துயரக் குரல்

  பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட தள்ளுவண்டி இடம்: பொக்கரனேந்தல் படம்: தனபாலன்

பெண் உடலை உறிஞ்சி எடுக்கும் ‘தண்ணீர் நோய்மை’ பெண்களின் கல்வி, வேலைத்திறன், உற்பத்தி அளவு, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு என மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்புடன் பேசப்படும் தண்ணீர் பஞ்சத்தின் முக்கியமான சமூக அவலம், தண்ணீர் நோய்மையால் அதிகரித்து வரும் பாலின அசமத்துவம். வறண்ட தொண்டையுடன், தண்ணீருக்காக பல மணிநேரங்களைச் செலவிடும் தமிழ்நாட்டுப் பெண்களின் கதைகளைக் கேட்டு காகிதத்தை எடுக்கும்போதே பேனா மூச்சிரைக்கிறது.

சென்னை யானைக்கவுனியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெனிதா, தலைநகரின் மிக மோசமான தண்ணீர் நெருக்கடியின் உச்சபட்ச விளைவுகளை இந்நாட்களில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். தன் வீட்டின் ஒருநாள் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய அவர் தன் படிப்பை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. மாலை நேரத்தில் தன் குடியிருப்பின் அருகில் உள்ள தண்ணீர் டேங்கில் தண்ணீர் பிடிக்க வந்தார் ஜெனிதா. மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டில் தன் உடைமைகளை வைத்துவிட்டு, பள்ளிச் சீருடையைக் கூட ஜெனிதா மாற்றவில்லை. தண்ணீர் பிடிக்கும்போது பெண்களுக்குள் ஏற்படும் காட்டமான விவாதங்களுக்கிடையில் ஜெனிதாவிடம் பேசுவது சற்று சிரமமாகவே இருந்தது. 

"அம்மா காலையில் வேலைக்குச் சென்றால் இரவில் தான் வீட்டுக்கு வருவார். மாலையில் இங்கு வந்து தண்ணீர் பிடிக்க தினமும் 2 மணிநேரம் செலவிட வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள குழாயில் அதிகாலை 3 மணிக்கு தண்ணீர் வரும். விடிவதற்குள் தண்ணீர் நின்றுவிடும். நான், அக்கா, அம்மா அத்தனை மணிக்கு எழுந்து தண்ணீர் பிடிக்க வேண்டும்," என்கிறார், கையில் இரு குடங்களுடன் தன் முறைக்காக காத்துக்கொண்டே.

                     வீடு திரும்பியவுடன் தண்ணீர் பிடிக்கும் ஜெனிதா.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஜெனிதா, இந்த ஆண்டு பொதுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று வரும் நேரம் மட்டுமே 2-3 மணிநேரத்தைத் தின்றுவிடுகிறது. இப்போது இந்த தண்ணீர் பிரச்சினையும் அவரின் மிச்ச நேரத்தை எடுத்துக்கொள்கிறது.

"தண்ணீர் பிடிப்பதால் படிப்புதான் கெடுகிறது. சரியாகப் படிக்க முடியவில்லை. குளிக்கத் தண்ணீர் இல்லாமல், வேலைக்குத் தாமதமானால் அப்பா எங்களிடம் சண்டை போடுவார். எங்களுக்கு குளிக்கத் தண்ணீர் இல்லையென்றால் நானும் கல்லூரிக்குச் செல்லும் என் இரண்டு அக்காவும் விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும்", என்கிறார், ஜெனிதா.

தண்ணீர் பிடிப்பதில் ஜெனிதா மற்றுமொரு பிரச்சினையையும் எதிர்கொள்கிறார். அது, தண்ணீர் பிடிக்க வரும் சிறுவயதினருக்கு பெரியவர்கள் தண்ணீர் பிடிக்க வாய்ப்பு தர மறுக்கின்றனர் என்பதே.

குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் என அனைத்தும் வற்றிவிட்ட சென்னையில், இப்படி தண்ணீர் தேடுதலால் தங்கள் நேரத்தைத் தொலைத்து, உடல், மன அவதிகளுக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஏராளம்.

பெண் குழந்தைகளுக்கு தண்ணீர் பிரச்சினையால் படிப்பு பாதிக்கப்படுகிறது என்றால், நடுத்தர, முதியப் பெண்கள் தங்களின் வேலை, உடல்நலத்தை இதனால் இழக்க நேரிடுகிறது.

அதே டேங்கில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த ஆனந்தி, கடந்த 2 மாதங்களாக தண்ணீர் பிரச்சினையால் வேலைக்கே செல்லவில்லை என்கிறார். 

"தினமும் வீட்டுக்கு குறைந்தபட்சம் 10 குடங்கள் பிடிக்க வேண்டும். இதனால், எங்கு வேலைக்குச் செல்ல முடிகிறது? மண்ணடியில் உள்ள புத்தகக் கடையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். இப்போது இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனாலேயே வேலையை விட்டுவிட்டேன். 2 மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை’’ என்கிறார் ஆனந்தி.

ஆனந்தியின் கணவர் தண்ணீர் பிடித்தால் அதிக நேரம் செலவாகும் என்பதால் இதில் ஈடுபட மாட்டாராம். "தண்ணீர் பிடிக்க ரொம்ப நேரம் செலவாகும் என்பதால் இந்த இடத்திற்கே வர மாட்டார். அவர் வேலைக்குச் செல்ல வேண்டுமே" என்கிறார், சிரித்துக்கொண்டே.

தண்ணீர் பிடிப்பதால் உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால், அவரின் குரல் கொஞ்சம் கோபத்துடன் மேலெழுகிறது. 

"உடல் வலி எப்படி வராமல் இருக்கும்? நிச்சயமாக வரும். எங்கள் வீடு மூன்றாவது மாடியில் இருக்கிறது. இடுப்பு வலி, கை வலி வரும்.. இரவில் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி போட்டுக்கொள்வேன், இல்லையென்றால் தைலம் தேய்த்துக்கொள்வேன். மாதவிடாய் நேரத்தில் அந்த வலியையும் அனுபவித்து தண்ணீர் பிடிக்க வேண்டும்", என்றார், ஆனந்தி.

ரிக்‌ஷாவில் 10-க்கும் மேற்பட்ட குடங்களுடன் தள்ளிக்கொண்டே பேசின்பிரிட்ஜ் அருகே தண்ணீர் பிடிக்கச் சென்ற மீனாவை நிறுத்திப் பேசினேன். ஏற்கெனவே தான் செய்துவரும் துப்புரவுப் பணியால், உடல், மன வேதனைகளுக்கு ஆளாகியிருக்கும் மீனாவுக்கு, இந்தத் தண்ணீர் பிரச்சினை இன்னும் அதிக நெருக்கடியைத் தந்திருக்கிறது.

"2-3 கி.மீ.நடந்து வந்து தண்ணீர் பிடிக்க வேண்டும். இந்த வாடகை ரிக்‌ஷாவுக்கு ஒரு நடைக்கு 20 ரூபாய் கொடுக்க வேண்டும். என் சம்பளமே ஒருநாளைக்கு 200 சொச்சம் தான்", என்கிறார், மீனா. மீனாவின் கணவர் கூலி வேலை செய்கிறார். காலை 6 மணிக்கு பணிக்குச் சென்றுவிட்டு மாலை 3 மணிக்கு வீடு திரும்பும் மீனா, உடனடியாக தண்ணீர் பிடிக்கும் அடுத்த வேலைக்குள் இறங்க வேண்டும். 

                                                                        மீனா தன் மகளுடன்

துப்புரவு வேலைகளுக்கிடையே இந்த தண்ணீர் பிரச்சினை எத்தகைய சிரமமாக இருக்கிறது என்று கேட்டால், "என்ன செய்வது? ரோடு பெருக்கும் வேலைக்குச் செல்கிறேன். அங்கேயும் வண்டி தள்ளுகிறோம், குப்பை அள்ளுகிறோம். சிறிய வயதிலிருந்தே கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்", என்கிறார் துயரம் கலந்த புன்னகையுடன்.

முன்பெல்லாம் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் தானே பிடித்து வீட்டுக்குச் செல்லும் மீனா, இப்போதுதான் ரிக்‌ஷாவை வாடகை எடுத்து தண்ணீர் பிடிக்கிறார். "வீட்டில் சில சமயங்களில் தண்ணீர் இல்லையென்றால், யாரும் குளிக்கவும் முடியாது, துணி துவைக்கவும் முடியாது", எனக்கூறும் மீனா, தன் வீடு மட்டுமல்லாமல், தன் கணவரின் சகோதரி வீட்டுக்கும் தண்ணீர் பிடித்து வர வேண்டும்.  தன் அத்தைக்கு உதவியாக 9 ஆம் வகுப்பு படிக்கும் தேவியும், மீனாவின் 4 வயது மகளும் மீனாவுக்கு அருகில் உள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகரில் கருக்கலைப்புக்கு ஆளான இளம்பெண் ஒருவர், மருத்துவர் அறிவுரையையும் மீறி தன் வீட்டின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறார். மூன்றாம் மாடியில் உள்ள வீட்டுக்கு அவர் தான் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.

"எனக்கு இருமுறை கருக்கலைப்பு நடந்துவிட்டது. இப்போது என் உடல்நிலை தண்ணீர் பிடிக்க ஏற்ற சூழலில் இல்லை. இருந்தாலும் நான் தான் இந்த வேலையைச் செய்ய வேண்டும். சாப்பிடும் போது குடிக்க தண்ணீர் இல்லையென்றாலும் கணவரிடமிருந்து எனக்குதான் திட்டு விழும். மாதவிடாய் நேரத்தில் வீட்டில் தண்ணீர் இல்லாமல், என் அக்கா வீட்டில் தங்கியிருக்கிறேன்", என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத அவர். தண்ணீர் பிடிக்கும் பிரச்சினையில் அக்கம்பக்கத்தாரிடம் தேவையற்ற சண்டைகள் ஏற்படுவதையும் அவர் விரும்பவில்லை. 

சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே தண்ணீர் பிரச்சினையால் தன் சுயசுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை பெண்கள் இரையாக்கிக் கொண்டிருக்கின்றனர். சென்னையைத் தாண்டி தண்ணீர் நெருக்கடியின் தீவிரம் அதிகமாக இருக்கும் சில மாவட்டப் பெண்களிடம் பேசினோம்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்கரனேந்தல் கிராமத்தில் தண்ணீர் வறட்சி காரணமாக 2-3 கி.மீ நடந்து சென்று தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்கிறார், நடுத்தர வயதைக் கடந்துவிட்ட கோவிந்தம்மாள். "100 நாள் வேலையும் இப்போது இல்லை. அதனால் பணமும் கையில் இல்லை. இருப்பினும், இந்த தள்ளுவண்டியை வாங்கி தண்ணீர் பிடிக்கிறோம்" என்று தான் பிடித்திருக்கும் தள்ளுவண்டியைக் காண்பித்துக்கொண்டே பேசுகிறார் கோவிந்தம்மாள்.

  நாள் முழுவதும் தண்ணீர் குறித்தே யோசனை: கோவிந்தம்மாள் படம்: தனபாலன்

ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 5-6 குடங்கள் வைக்கும் அளவுக்கு தண்ணீர் பிடிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட தள்ளுவண்டி பயன்பாட்டில் உள்ளது. இந்த தள்ளுவண்டி 3,500 முதல் 4,000 வரை செலவாகிறது.

"ராத்திரி, பகலாக தண்ணீர் குறித்து யோசிக்கவும், அதுகுறித்த வேலைகளில் ஈடுபடவுமே நேரம் இருக்கிறது. இதற்கு நேரம் செலவிடுவதால் வேலைக்கும் செல்ல முடிவதில்லை", என்கிறார் கோவிந்தம்மாள்.

வேலூர் மாவட்டம் அவ்வை நகரைச் சேர்ந்த திலகம், வீட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள தண்ணீர் டேங்கில் வந்து தண்ணீர் பிடிக்க வேண்டும். "காலையில் 8 மணிக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்தால் மாலை 5 மணிக்குத்தான் தண்ணீர் பிடிக்க முடியும். சில சமயம் 8 மணி கூட ஆகிவிடும். சில சமயங்களில் அந்தத் தண்ணீரும் கிடைக்காது. காலையில் குடத்தை வரிசையில் வைத்துவிட்டு 3-4 மணிபோல் மீண்டும் வருவோம். அதற்குள் வீட்டு வேலைகளைச் செய்துவிடுவோம். நான் இன்னும் தண்ணீர் பிடிக்கவில்லை" என திலகம் கூறும்போது மணி மாலை ஐந்தை நெருங்கிவிட்டது.  

இந்தப் பகுதிக்கு 5 கி.மீ. தொலைவில் இருந்தும் பெண்கள் தண்ணீர் பிடிக்கிறார்கள் என்கிறார் திலகம்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலைச் சேர்ந்த மெர்ஸி, "சொந்த வீட்டில் தண்ணீர் ஒழுங்காக வராததால், வீட்டைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டுக்கு வந்துவிட்டோம். இங்கு காலை 6-7 மணிக்குள் தண்ணீரைப் பிடித்து நிரப்பி விட வேண்டும். வீட்டு வேலைகளுக்குத் தண்ணீர் இல்லையென்றால் அது பெண்களுக்குத் தான் அதிக பாதிப்பு. எந்த வேலையும் செய்ய முடியாது. ஆண்கள் தண்ணீர் எடுக்க மாட்டார்கள், தண்ணீருக்கும் நாம் தான் போய் அலைய வேண்டும். உதவி கேட்டால் "நாங்க பாக்குற வேலைய நீ பாப்பியா" ன்னு கேப்பாங்க", என தண்ணீர் நெருக்கடியில் உள்ள பாலின பேதத்தை விளக்குகிறார்.

சிவகங்கை மாவட்டம் சித்தனூரில் பெண்கள் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. ஊற்றில் இரவில் தான் சற்று அதிகமாக தண்ணீர் ஊரும் என்பதால் அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இரவு 10 மணிக்கு மேல் ஆபத்தான நடைப்பயணத்தை மேற்கொள்கின்றனர். டார்ச் லைட், மொபைல் லைட் உதவியுடன் ஊற்றுக்குச் சென்று அதில் இறங்கி குடங்களை நிரப்பி தண்ணீர் எடுக்க வேண்டும்.

தண்ணீர் பிரச்சினை பெண்கள் சம்பந்தப்பட்டதா, அதில் பாலின பேதம் உள்ளதா என்ற கேள்வி கூட நமக்கு எழும். ஆனால், தமிழகம் மட்டுமல்ல, இந்திய, உலக அளவிலேயே தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்வது பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர். அதற்காக அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் ஏராளம். குடும்பத்தின் சுத்தம், சுகாதாரம், குடிநீர் விநியோகம் என்பது பெண்களின் கடமையாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நேர செலவு, கடினம் இதனைத் தாண்டி பெண்கள், தண்ணீர் பிடிக்கச் செல்லும்போது பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகின்றனர். 

30 நிமிடங்களுக்கு மேல் செலவு செய்து தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பகுதிகளை 'எளிதில் தண்ணீரை அணுக முடியாத பகுதி’  என்கிறது, உலக சுகாதார மையம். உலக அளவில் 10-ல் 8 வீடுகளில் வாழ்விடத்திலிருந்து தொலைவுக்குச் சென்று வீட்டின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளே என்கிறது, யுனிசெஃப் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை.

வீட்டின் தண்ணீர் தேவைக்காக மட்டும் தொலைதூரங்களுக்குச் செல்லும் பெண்கள் ஒருநாளைக்கு செலவிடும் காலம் 210  மில்லியன் மணிநேரங்கள்! தண்ணீர் பிடிப்பதில் பெண்கள் ஏராளமான நேரத்தைச் செலவிடுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறித்து எச்சரிக்கும் யுனிசெஃப் அறிக்கை, உலக அளவில் 70% பெண்கள் தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலைகள், தண்ணீர் சேமிப்பு நிர்வகித்தலில் ஈடுபடுபவர்களாக உள்ளதாகத் தெரிவிக்கிறது. 

தண்ணீர் பிடிப்பது மட்டுமின்றி, அதனுடன் சம்பந்தப்பட்ட, பாத்திரங்கள் துலக்குதல், துணி துவைத்தல், சமைத்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் இந்தப் பிரச்சினையை பெண்களுக்கு இன்னும் மோசமானதாக மாற்றுகிறது. மாதவிடாய், கர்ப்ப காலம், பிள்ளைப் பேறு உள்ளிட்ட சமயங்களில் பெண்கள் தண்ணீர் பிரச்சினையால் அதிக உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாவதாக ஐ.நா.வின் 'தண்ணீர்' அமைப்பு தெரிவிக்கிறது. 

இந்தியாவில் தண்ணீர் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம்  சாதி, மதம், பாலின ஏற்றத்தாழ்வுகளோடு கூடுதலான கடினங்களை பெண்களை வதைக்கும் தண்ணீர் வழி பாலின அசமத்துவமும் விவாதத்துக்கு வரும். ஆனால், நம் சமூகவியல் மற்றும் சூழலியல் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கும் இப்பிரச்சினை அரசால் இதுவரை முறையாக அணுகப்படவில்லை. இதுவரை இந்தியாவில் 1987, 2002, 2012 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்ட தேசிய நீர் கொள்கை பாலின சமத்துவத்துடன் வடிவமைக்கப்படவில்லை என்றும், தண்ணீர் வளத்தை அதிகரிக்க அக்கறை எடுத்துக்கொள்ளும் அரசுகள், தண்ணீர் பிடிக்க பெண்கள் அதிக தொலைவு பயணம் மேற்கொள்வதை கருத்தில் கொள்ளவில்லை என்றும் நீர்க்கொள்கைகளின் போதாமையை வரையறுக்கிறது 'எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி' இதழ்.

தண்ணீர் நோய்மையால் எழும் பாலின அசமத்துவம் ஒட்டுமொத்தப் பெண்களின் பிரச்சினை என்றாலும் நிலமற்ற, சொத்துரிமை இல்லாத ஏழை, விளிம்புநிலை பெண்களே தண்ணீர் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பு சமூகத்தில் முன்னேறிய தரப்பைச் சேர்ந்த, சமூக - பொருளாதார வசதிகள் கொண்ட மற்றபெண்களிடமிருந்து இவர்களைத் துல்லியமாகப் பிரிக்கிறது; பாதிக்கப்பட்ட பெண்களின் சமூகப் பங்களிப்பு, தனிப்பட்ட முன்னேற்றம் இரண்டையும் கூடுதலாக வீழ்த்துகிறது. நீர் மேலாண்மை குறித்த முறையான பாதையை வகுத்துக்கொள்ளும் நெருக்கடியை தமிழ்நாடு உணரும் நேரத்தில், நீர்மேலாண்மையோடு தொடர்புடைய பாலின அசமத்துவத்தவமும் இனி நம் தீர்வுப்பாதையில் திட்டங்களாக இருக்கவேண்டும்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x