Last Updated : 12 Jul, 2019 02:58 PM

 

Published : 12 Jul 2019 02:58 PM
Last Updated : 12 Jul 2019 02:58 PM

பிறந்த மண்ணின் வளங்களையும் பெருமைகளையும் ஆவணப்படுத்தும் நானும் போராளிதான்!- மதுரை இளைஞரின் பரந்துபட்ட பார்வை

பிறந்த மண்ணின் இயற்கை வளங்களையும் தொல்லியல் பெருமைகளையும் ஆவணப்படுத்தும் நானும் போராளிதான் என்கிறார் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

சினிமா நடிகருக்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டும் இதே ஊரில்தான் மக்களுக்கு இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஊரில் வளங்களை ஆவணப்படுத்தும் இந்த இளைஞரும் இருக்கிறார்.

அமைதியான தெளிவான பேச்சு தான் வாழும் பகுதி பற்றி ஆழமான புரிதல் என நல்ல ஆளுமையாகத் திகழும் இளைஞர் ரவிச்சந்திரன் "அரிட்டாப்பட்டி பறவைகளும், பல்லுயிர் வளங்களும்" என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த புத்தக வெளியீட்டு விழா சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் எளிமையாக நடந்து முடிந்தது.

அரிட்டாப்பட்டி ஓர் அறிமுகம்..

திரும்பிய பக்கமெல்லாம் பசுமை, குன்றாத நிலத்தடி நீர், புத்துணர்ச்சி தரும் காற்று, மலைகள், மரங்கள், பழமையான கோயில்கள், கல்வெட்டுகள் இவையெல்லாம் நிறைந்ததுதான் அரிட்டாப்பட்டி எனும் கிராமம்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் இருக்கிறது இந்த ஊர். மதுரையிலிருந்து சரியாக 25 கி.மீ, நான்கு வழிச் சாலையில் பயணித்து நரசிங்கம்பட்டியில் இருந்து வடக்குபுறம் 4 கி.மீட்டர் சென்றால் அரிட்டாபட்டியை அடைந்துவிடலாம்.

எழில் கொஞ்சும் இத்தைய ஊர்க்காரர்தான் இளைஞர் ரவிச்சந்திரன். தான் வாழும் கிராமத்தைப் பற்றியும் அதன் இயற்கை வளங்கள் பற்றியும் புத்தகம் எழுதி வெளியீட்டுவரை கொண்டுவந்த ரவிச்சந்திரனை தி இந்து தமிழ் திசை இணையதளத்துக்காக பேட்டி கண்டோம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..

என் பெயர் ரவிச்சந்திரன். தந்தை பெயர் அழகு. அரிட்டாப்பட்டிதான் நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் கிராமம். மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரியில் வரலாறு படித்தேன். ஒயிலாட்டம், சிலம்பம், ஆண்களுக்கான கும்மியாட்டம் ஆகிய கலைகள் எனக்கு விருப்பமானவை. எனது தந்தை விவசாயி. நானும் விவசாயம்தான் செய்கிறேன். அதுதவிர இப்போதைக்கு கராத்தே, சிலம்பம் ஆகிய தற்காப்புக் கலைகளை சுற்றுவட்டாரப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறேன். இயற்கையோடு இயைந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

வரலாறு படித்துவிட்டு விவசாயம், கூடவே புத்தகங்கள்.. எப்படி இது சாத்தியமாயிற்று?

எல்லோருக்குமே சொந்த ஊர் என்ற பற்று இருக்கும். அப்படியானதுதான் அரிட்டாப்பட்டி மீதான என் காதலும். இந்த காதல்தான் என் ஊரின் பெருமையை ஆவணப்படுத்த வேண்டும் என்று என்னைத் தூண்டியது. தன் மண்ணின் பெருமைகளை ஆவணப்படுத்துவதும்கூட போராளியின் அம்சம் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், மண்ணின் பெருமைகளை அறிந்து வளரும் குழந்தைகள்தான் எதிர்காலத்தில் அதில் எவ்வித ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும் நடைபெறாமல் காத்து நிற்பார்கள். 

 

2011-ல் அரிட்ட்டாப்பட்டியில் கிரானைட் குவாரி ஆக்கிரமிப்பு நடந்தபோது நானும் போராட்டக் குழுவில் இருந்தேன். அப்போது என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதன்பின்னர் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டன. ஆனால், அத்துடன் கடமை முடிந்துவிடவில்லை. அதனால்தான் அரிட்டாப்பட்டி ஏழுமலை பாதுகாப்புச் சங்கம், அரிட்டாப்பட்டி பறவைகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்புகளை ஏற்று நடத்தி வருகிறேன். இதன் முதல் நகர்வுதான் இயற்கை வளங்களை ஆவணப்படுத்தும் முயற்சி. அரிட்டாப்பட்டி, பறவைகளும், பல்லுயிர் வளங்களும் என்ற நூல் வெளியாகியிருக்கிறது. இதை வாசிப்போருக்கு அரிட்டாப்பட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான கிராமம், பல்லுயிர் வளங்கள் நிறைந்த ஊர் என்பது விளங்கும்.

உங்கள் ஊரின் சிறப்பம்சங்கள் என எவற்றைப் பட்டியலிடுவீர்கள்?

எங்கள் ஊரின் மேற்குப்புறம் கழுகு மலை, கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, தேன்கூடு மலை, கூகைகந்தி மலை என 7 மலைகள் இருக்கின்றன.

இந்த மலைகளைச் சுற்றி 72 கண்மாய்கள், 200-க்கும் மேற்பட்ட நீர் ஊற்றுகள், நீர் சுனைகள் அமைந்துள்ளன. இத்தகைய நீர் ஆதாரங்களால்தான் இங்குள்ள மலைகளைச் சுற்றி மரம் செடி கொடிகள், மூலிகைச் செடிகள், மரங்கள், பல்லாயிரக்கணக்கான பறவைகள், விலங்குகள் உள்ளன.

 

சிறுவயதிலிருந்தே இவற்றின் மீதான ஈடுபாட்டை என்னுள் விதைத்தவர் என் தந்தை அழகு. விவசாயியான அவர் காட்டிய பாதையில்தான் நான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் வளர வளர என் ஊரின் மீதான் என் காதலும் ஆழமானது.

இந்தியாவிலேயே அரிதான பறவையான லகடு வல்லூறு இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. ஒன்று ராஜஸ்தான் வனப்பகுதி மற்றொன்று அரிட்டாப்பட்டி. லகடு வல்லூறு, சிவப்பு வல்லூறு, செந்தால வல்லூறு, ராஜாளி கழுகு, வெண்ணிகள் நாரை என 175 வகையான பறவைகள். புள்ளிமான், மிளாமான், மலைப்பாம்பு, தேவாங்கு, உடும்பு உள்ளிட்ட விலங்குகள். கணுக்காலிகள், பூச்சிகள், புழுக்கள் என்று செழித்திருக்கிறது எங்கள் ஊர்.

 

இதுதவிர 2300 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், கி.பி. 7-ம், 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் குடைவரை சிவன் கோயில், 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23-ம் தீர்த்தங்கரரான மகாவீரர் சிலை, குகை ஓவியம், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், இறந்த போர் வீரர்களை அடக்கம் செய்யும் கல் வட்டம் என வரலாற்றுச் சான்றுகள் நிறைய இருக்கின்றன.

இவற்றை ஆவணப்படுத்துவதே என் இலக்கு.

தீவிர போராட்டத்திலிருந்து இப்போது இப்படி மென்மையான போராளியாக இருப்பதில் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

வித்தியாசம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. போராட்ட முறையே மாறியிருக்கிறது தவிர என் ஊரைப் பற்றிய புரிதலை எங்கள் இளைஞர்களுக்கு விதைத்து வைப்பதும் போராட்டம்தான். இப்போதே ஒன்றிரண்டு தொழிற்சாலைகள் முளைத்துவிட்டன. எதிர்காலத்தில் இவை பெருகி ஆபத்து நேராமல் இருக்க வேண்டும். ஊரின் பெருமையை பறைசாற்றும் ஆவணம் அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை எப்போதுமே மக்கள் மனதில் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

உங்கள் தந்தையே உங்களுக்கு வழிகாட்டி என்றீர்கள்.. அவரைப் பற்றியும் சொல்லுங்கள்..

என் தந்தை அழகு அந்தக் காலத்திலேயே 10-ம் வகுப்பு படித்தவர். விவசாயியான அவர் சிறுவயதிலிருந்தே எனக்கு இயற்கை மீதான ஆர்வத்தைப் புகட்டினார். தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவித்தார். இயற்கையை ரசிப்பதோடு அதை பாதுகாப்பதும் முக்கியம் என்பதையும் அவரிடமே கற்றுக்கொண்டேன். கடுமையான உழைப்பாளியான அவர் இறுதிநாள் வரை யாரையும் தன் வேலைகளுக்காகச் சார்ந்திருந்ததில்லை. ஒருமுறை அவரது வலது கையில் விஷ ஜந்து கடித்துவிட்டது. அதிலிருந்து அந்தக்கை செயலிழந்து போனது. அதன்பின்னரும் தளராத அவர் ஒற்றைக்கையால் மண்வெட்டியைப் பிடித்து வரப்பு வெட்டும் காட்சி இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே இனிமையான வாழ்க்கை என்பதை அவரிடம் கற்றுக் கொண்டேன் என் ஊரை ஆவணப்படுத்துவதன் மூலம் அதை எதிர்கால சந்ததிகளிடம் விதைப்பேன்.

மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளீர்கள் அல்லவா..?

எங்கள் ஊரில் கண்மாய்களில் உள்ள நன்னீர் மீன் வகைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 1500 வகை நாட்டு மீன்கள் இருந்த இடத்தில் இப்போது 50 வகையான மீன்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றை மீட்டு இயற்கை முறையில் பேணி வளர்த்து வருகிறேன். இதற்காக பண்ணை ஏதும் அமைக்கத் தேவையில்லை. பாதுகாப்பான கண்மாயில் விட்டாலே போது அவை பெருகிவிடும்.

 

 

ஈகோ டூரிஸம் பற்றி சூழலியல் ஆர்வலர்கள் எப்போதுமே கேள்வி எழுப்புகிறார்கள்? உதாரணத்துக்கு பிச்சாவரம் காடுகளில் சுற்றுலாப்பயணிகள் குவிவதால் அதீத படகு போக்குவரத்தால் சதுப்பு நிலத்தின் நீரோட்டமே மாறுவதாக அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் பேர்ட் - வாட்சிங்குக்கு சுற்றுலா வருபவர்களை அழைத்துச் செல்கிறீர்கள்? அது பறவைகளுக்கு இடையூறாக இருக்காதா?

நிச்சயமாக ஈகோ டூரிஸத்துக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. நான் எதிக்கல் பர்ட் வாட்சிங்கைத்தான் (Ethical bird watching) பின் பற்றுகிறேன். நம் புகைப்படக் கருவி எழுப்பும் ஓசைகூட பறவைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். அதனால் குறைந்த அளவிலான நபர்கள் கொண்ட குழுவினர்தான் ஒவ்வொரு முறையும் என்னுடன் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கேமரா பயன்பாட்டிற்கும் நிபந்தனைகள் இருக்கின்றன.

இவ்வாறாக ஊரைப் பற்றியும் தனது முயற்சிகள் பற்றியும் உற்சாகமாக பேசும் 37 வயது இளைஞர் ரவிச்சந்திரன் தனது கிராமத்தை பயோ டைவர்சிட்டி வில்லேஜ் அதாவது பல்லுயிரினப்பெருக்க பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். அதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறார்.

தொடர்புக்கு:bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x