Published : 18 Aug 2017 03:44 PM
Last Updated : 18 Aug 2017 03:44 PM

யானைகளின் வருகை 14: காப்பாற்றப்பட்ட மூர்த்தி; குற்றுயிராக வந்த காந்தி

 

நீதிமன்ற உத்தரவின்படி மக்னாவிற்கு சிகிச்சையளிக்க அயர்லாந்து டாக்டர் ஜேம்ஸ் மகோன்னி நியமிக்கப்பட்டார். மகோன்னியும், வக்கீல் ராஜேந்திரனும் முதுமலை வந்தனர். செய்தியாளன் என்ற முறையில் நானும் அவர்களுடன் சென்றிருந்தேன்.

ஆனால் மருத்துவர் மகோன்னிக்கு வனத்துறையினர் ஒத்துழைக்க மறுத்தனர். முக்கியமாக 'இங்குள்ள கால்நடை டாக்டர் கொடுக்காத சிகிச்சையை இந்த அயர்லாந்து டாக்டர் கொடுத்து விடப்போகிறாரா?' என்ற ஈகோ சண்டை வேறு அங்கே கொடி கட்டிக் கொண்டது.

இறுதியில் வக்கீல் அங்கே வாதிட்டதில், 'கோர்ட் உத்தரவுப்படி மகோன்னியையும், வக்கீல் என்ற முறையில் உங்களையும் மக்னாவிடம் அனுமதிக்கிறோம். மகோன்னியுடன் வந்திருக்கும் மருத்துவர் குழுவை நாங்கள் அனுமதிக்க முடியாது!' என்று கறாராக சொல்லி விட்டனர்.

அதையடுத்து தன்னுடன் அழைத்து வந்த தன் உதவியாளர்கள் கனடாவை சேர்ந்த அலக்சியாவையும், ஸ்வீடனை சேர்ந்த ஜோகன் என்பவரையும் வெளியிலேயே விட்டு விட்டு மக்னா இருக்கும் இடத்திற்கு சென்று சில மணிநேரம் சிகிச்சையில் ஈடுபட்டார் டாக்டர் மகோன்னி. பத்திரிகை என்ற முறையில் நான் மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டேன்.

இந்த சிகிச்சையின் போது நம்மிடம் பேசிய வக்கீல் ராஜேந்திரன், 'யானையை அவங்க கட்டி வச்சு அடிக்கறதால அது படற அவஸ்தையை பார்த்துட்டுத்தான் அந்த ஆதாரங்களோட கோர்ட்டுல நான் வழக்கு தொடுத்தேன். அவங்க அதுக்காகவே வன்மத்தோட செயல்படறதா தெரியுது. இதே மக்னாவுக்கு மூணு வருஷம் முந்தி இதே மகோன்னியும், உள்ளூரில் உள்ள நைஜில் ஓட்டரும்தான் பெரும்பான்மை சிகிச்சை தந்தாங்க. ஆனா இப்ப அவர்கூட நைஜில் ஓட்டர் கூட அனுமதிக்கப்படவில்லை. மகோன்னிக்கு பதினைஞ்சு நாள்தான் விசா. அதற்குள் யானையை பரிசோதித்து முழு சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பிறகும் அவர் கொடுக்கும் ஆலோசனைப்படி சிகிச்சைகளை இங்குள்ள மருத்துவர்கள் தொடர வேண்டும். இப்போது நீதிமன்றங்கள் வேறு விடுமுறை. இந்த ஆர்டரையே மருத்துவ உதவியாளர்களை சேர்த்து மாற்றி வாங்குவது உடனே முடியாத காரியமாக இருக்கிறது. இந்த நிலையில் என்ன செய்ய முடியும்?' என்று வேதனை தெரிவித்தார்.

அப்போது முதுமலை வனவிலங்குகள் காப்பாளர் ஒருவர் அப்போதுதான் மாற்றலாகி வந்திருந்தார். 'அவருக்கு மக்னாவிற்கு முந்தைய காலத்தில் கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரம் தெரியாது. அதைப் பயன்படுத்தி இங்கு இருக்கும் கம்பவுண்டர் ஒருவரும், ஒரு வனத்துறை ரேஞ்சரும்தான் இந்த அலைக்கழிப்பை செய்கிறார்கள். இவர்கள் சிகிச்சையில் ஈடுபட்டால் இதுவரை மக்னாவை முன்வைத்து என்னென்ன குளறுபடிகள் நடந்தது என்று கண்டுபிடித்து விடுவார். வெளியே விஷயம் கசிந்து விடும் என்பதாலேயே இப்படியெல்லாம் தடுக்கிறார்கள்!' என்பது மருத்துவர் குழுவின் புகார். அதையெல்லாம் வனத்துறையினர் சட்டை செய்யாததால் தான் ஒருவரே சென்று சில நாட்கள் மக்னாவிற்கு சிகிச்சையளித்தார் மகோன்னி.

அவரிடம் பேசியபோது, 'நான் மூன்று வருஷத்துக்கு முன்பு மக்னாவை எப்படி பார்த்தேனோ அதை விட எடை குறைந்துள்ளது. யானை பிடிக்கப்பட்ட போது சுமார் ஆறு டன் எடை. இப்போது இரண்டு டன் எடை குறைந்து நான்கு டன்னாக உள்ளது. நான்கு கால்களிலும் சீழ் ஏறிக்கிடக்கிறது. அதில் ஆள்காட்டி விரலே உள்ளே போகிறது. இந்த அளவு புண் இருக்கும்போது இப்போது இருப்பதை விட கொஞ்சம் எடை கூடுதலாக இருந்திருந்தாலும் யானை துவண்டு படுத்திருக்கும். எழுந்து நிற்க முடியாது. அப்படியே அது இறந்து விடும் அபாயமும் ஏற்பட்டிருக்கும். இவர்கள் இப்போது புண்ணுக்கு வெளியில் மட்டும் மருந்து போடுகிறார்கள். அதனால் எல்லாம் எந்தப் பலனும் இல்லை. எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் காலில் உள்ள சீழ்பூராவும் டிரில் போட்டு வெளியே எடுத்துவிடுவேன். அந்த டெக்னிக் தெரிந்த இரண்டு உதவியாளர்கள் கூட இருந்தால் வேலை எளிதாக இருக்கும். இவங்க விடற மாதிரி தெரியவில்லை!' எனத் தெரிவித்தார்.

அப்போதைக்கு மக்னாவிற்கு முதல் உதவி சிகிச்சை செய்த மகோன்னி மேலும் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சைகள் அளித்தார். இப்போது அந்த மக்னாதான் 56 வயதாகி பாகன் சொல்படி கேட்டு முதுமலையில் நடப்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். முதலில் மூர்க்க மக்னா, பிறகு பரிதாபத்திற்குரிய மக்னா, இப்போது பழக்கப்பட்ட மூர்த்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

மக்னாவுக்கு வெளிநாட்டு மருத்துவர் சிகிச்சையளித்ததில் வனத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இடையே நடந்த ஈகோ யுத்தத்தில் நீதிமன்றம் வரை செல்ல வேண்டி வந்தது. அதன் பலனாகவே அது அந்த காலகட்டத்தில் பிழைத்தது என்பதை இன்றைக்கும் விஷயம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

அந்த மக்னாவுக்கான சிகிச்சையில் மேனகா காந்தி வரை தலையிட்டிருக்கிறார் என்பதை மசினக்குடியை சேர்ந்த இபான் அமைப்பின் நைஜில் ஓட்டர் இப்போதும் நினைவு கூர்கிறார். அப்போது வெளிநாட்டு கால்நடை மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சையளிப்பதற்கும், இதற்காக சென்னையில் வழக்கு தொடுக்க யானை வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கும் அப்போது டெக்னிக்கலாக உதவி புரிந்தவர் இவர்.

அந்த காலகட்டத்தில் நீலகிரியில் குறிப்பாக முதுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள வனவிலங்குகள் விபத்தினால் பாதிக்கப்பட்டாலோ, அதை இந்த நைஜிலின் இபான் முகாமில்தான் (தெருவில் விடப்பட்ட கழுதை, குதிரை, நாய் உள்ளிட்ட வளர்ப்பு மிருகங்களுக்கான காப்பகம் இது) வனத்துறையினர் சிகிச்சைக்காக சேர்ப்பது வழக்கம். அல்லது இங்கு வரும் வெளிநாட்டு கால்நடை மருத்துவர்களை முதுமலை முகாமுக்கு வரவழைத்து சிகிச்சை அளிப்பதும் உண்டு.

அந்த வகையில்தான் ஆரம்ப காலத்தில் மக்னாவுக்கான சிகிச்சையில் பல்வேறு உதவிகள் புரிந்து வந்தனர் இபான் அமைப்பினர். அது பரவலாக பத்திரிகை, மீடியாக்களில் செய்தியாக வெளிவந்து பிரபலமாக வனத்துறை அதிகாரிகளிடம் ஈகோ எழுந்தது. அதில் இயல்பாகவே பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. அதன் வெளிப்பாடாகவே முகாம் கால்நடை மருத்துவர்களுக்கும், இபான் போன்ற தன்னார்வலர்களுக்கும் நிழல் யுத்தம் ஏற்பட்டது.

முரண்பாடான செய்திகள்
  • இதன் விளைவாக, 'மக்னா பராமரிப்பு சிறப்பாக இருப்பதாக!' அதிகாரிகள் தரப்பிலும், 'மக்னா மோசமான நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது!' என சில தன்னார்வலர் அமைப்புகள் மூலமாகவும் மீடியாக்களில் முரண்பாடாக செய்திகள் கசிந்தன.

இதன் விளைவாக, 'மக்னா பராமரிப்பு சிறப்பாக இருப்பதாக!' அதிகாரிகள் தரப்பிலும், 'மக்னா மோசமான நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது!' என சில தன்னார்வலர் அமைப்புகள் மூலமாகவும் மீடியாக்களில் முரண்பாடாக செய்திகள் கசிந்தன.

அதன் எதிரொலியாகவே நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. வெளிநாட்டு கால்நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டார். அந்த வெளிநாட்டு டாக்டர் யானைகளுக்கான மருத்துவர் அல்ல; நாய்களுக்கான டாக்டர் என்றே வனத்துறை மருத்துவர்கள் வர்ணித்தார்கள்.

வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்து வந்தவர்களோ, 'அயர்லாந்து ஜேம்ஸ் மகோன்னி உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சிறந்த யானை மருத்துவர். இங்குள்ள மருத்துவர்கள்தான் நம் வளர்ப்பு பிராணிகளுக்கு வைத்தியம் பார்க்கும் சாதாரண மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால் சென்ற முறை மக்னாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த இதே மகோன்னியிடம்தான் இங்குள்ள கால்நடை மருத்துவர்களே யானைக்கான மருத்துவத்தை கற்றுக் கொண்டார்கள்!' என பதிலுக்கு கருத்து தெரிவித்தனர்.

இந்த ஈகோ மோதலுக்குள்ளேயே பேசுபவர்களிடம் பேசி, செய்ய வேண்டியதை செய்து ஒரு வார காலத்தில் மக்னாவுக்கு சிகிச்சையளித்து விட்டு விமானம் ஏறிவிட்டார் மகோன்னி.

அதே காலகட்டத்தில்தான் காந்தி என்ற குட்டியானை ஒன்று அதிகாரிகளிடையேயான ஈகோ யுத்தம் நடந்த காலகட்டத்தில்தான் முதுமலைக்கு குற்றுயிராய் வந்து சேர்ந்தது.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x