Published : 16 Aug 2017 11:03 AM
Last Updated : 16 Aug 2017 11:03 AM
கு
டி தண்ணீருக்காக தனது கிராமத்து மக்கள் குடமும் கையுமாய் அலைவதைப் பார்த்துப் பதறிய ஒரு நல்ல உள்ளம், துபாயிலிருந்து கொண்டு ஒரு திட்டம் தீட்டியது.
அதனால், உறங்கான்பட்டி இப்போது குடி தண்ணீருக்குக் கவலையில்லாமல் நிம்மதியாய் உறங்குகிறது!
என்னதான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ‘கேன்’கள் வந்தாலும் கிராம மக்கள் இன்னமும் குளத்துத் தண்ணீரையும் குழாய் தண்ணீரையும் தான் நம்பியிருக்கின்றனர். ஆனால், அண்மை ஆண்டுகளாக கோடையில் நாம் எதிர்க்கொண்டு வரும் கடும் வறட்சியானது இந்தத் தண்ணீருக்கும் தட்டுப்பாட்டை உண்டாக்கி வருகிறது. அதனால், மக்கள் கோடையில் குடங்களோடு அலைகிறார்கள்.
ரொம்ப வருத்தப்பட்டார்
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள உறங்கான்பட்டி மக்களுக்கும் முன்பு இந்தப் பிரச்சினை இருந்தது. இப்போது இல்லை. அதற்குக் காரணம் பார்த்திபன். பணி நிமித்தம் துபாயில் இருக்கும் இவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு, சொந்த ஊரான உறங்கான்பட்டிக்கு வந்திருந்தபோது, குடி தண்ணீருக்காக தனது ஊர்மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்துப் பரிதாபப்படார்.
அதற்குப் பிறகு நடந்ததை அவரது உதவியாளர் ரமேஷ் சொல்கிறார். “உறங்கான்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம் இளங்கச்சி. இவர் இப்ப உயிரோடு இல்லை. இவரோட பிள்ளைகள் அசோகன், விக்கிரமன், பார்த்திபன் மூணு பேருமே வெளிநாட்டுல வேலை பார்க்கிறாங்க. ஊருல ஏதாச்சும் விசேஷம்னா இங்க வந்து போவாங்க. ரெண்டு வருசத்துக்கு முந்தி பார்த்திபன் அப்படி ஊருக்கு வந்திருந்தப்பத்தான் இங்குள்ள தண்ணிக் கஷ்டத்தைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டார்.
பார்த்திபன் கனவு
‘விவசாயமும் செத்துப்போயி, குடி தண்ணீருக்கும் மக்கள் இப்படி கஷ்டப்படுறாங்களே’ன்னு ஆதங்கப்பட்டவரு, ‘இங்களோட தண்ணிக் கஷ்டத்தை எப்படியாவது போக்கணும்’னு சொன்னாரு. அதுக்காகவே, துபாய்க்குப் போனதும் தனது தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார். அறக்கட்டளை நிதியிலிருந்து தனது சொந்த நிலத்தில் ஆழ்துளைக் கிணறு ஒன்றை அமைத்தார்.
அதிலிருந்து தண்ணீர் எடுத்துச் சுத்திகரித்து, அந்தத் தண் ணீரை பொதுமக்கள் தாங்களாகவே வந்து பிடித்துக் கொள்ளும்படியான வசதியை ஏற்படுத்தினார். இந்தப் பணிகளை எல்லாம் கவனித்துக் கொள் வதற்காக என்னையும் ஆறுமுகம் என்பவரையும் நியமித்தார் பார்த்திபன்.” என்றார் ரமேஷ்.
தொடர்ந்தும் அவரே பேசுகையில், “உறங்கான்பட்டி மட்டுமில்லாம, பக்கத்திலுள்ள அழகிச்சிபட்டி, குப்பச்சிபட்டி, உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்க வந்து தண்ணீர் பிடிச்சுட்டுப் போறாங்க.
மாதம் முப்பதாயிரம்
சராசரியா ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணியைச் சுத்திகரிச்சு வழங்குறோம். இதுக்காக மாசம் 30 ஆயிரம் ரூபாய் செலவாகுது. இதில்லாம, வீட்டு விசேஷங்களுக்கும் பிற காரியங்களுக்கும் பைசா வாங்காம கூடுதலாவும் தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறோம். குடி தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமா பயன்படுத்தணும். அதுக்காகத்தான் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு தான் தண்ணீர்னு கட்டுப்பாடு வெச்சுக் குடுத்துட்டு இருக்கோம்” என்று சொன்னார்.
இதுதவிர, ஊர் பொதுக்காரியங்களுக்கும் பள்ளிக் கூடத்துக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் முடிந்தவரை உதவிவரும் பார்த்திபன், அண்மையில், அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிகாக அங்கே 60 சென்ட் இடம் வாங்கி அதில் இலவச கழிப்பறையையும் கட்டிவிட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்!
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT