Last Updated : 30 Aug, 2017 10:03 AM

 

Published : 30 Aug 2017 10:03 AM
Last Updated : 30 Aug 2017 10:03 AM

ஆட்டுக்குத் தடா.. அரை நூற்றாண்டாய் தொடருதடா!

வே

லைக்குப் போய் சம்பாதிக்க ஆள் இல்லாவிட்டாலும் வீட்டில் நாலு வெள்ளாடு இருந்தால் போதும்; காலத்துக்கும் அது கஞ்சி ஊற்றும் - இன்றைக்கு நேற்றல்ல.. கிராமங்களில் காலங்காலமாக பேசப்படும் மெய்ப்பிக்கப்பட்ட விஷயம் இது. அதனால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூட ஏழைப்பட்ட குடும்பங்களுக்கு ஆடு - மாடு வழங்கும் திட்டத்தைக் கையில் எடுத்தார். இந்த அளவுக்கு கிராமப் பொருளாதாரத்துக்குக் கைகொடுக்கும் ஆடுகளை வளர்க்க ஒரு கிராமத்தில் அரை நூற்றாண்டாக தடைபோட்டு வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

50 ஆண்டுகளுக்கு முன்பு

தஞ்சை மாவட்டம் காசவளநாடு வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில்தான் வெள்ளாடுகளுக்கு இந்த விநோதத் தடா! 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்ட சமயம் இந்த கிராமத்திலும் கடும் வறட்சி தாண்டவமாடியது. ஆடு - மாடுகள் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் ஊரே வறண்டுபோன நிலையில், ஊருக்குள் இருந்த மரம், செடி, கொடிகளை வெட்டி, ஆடுகளுக்குத் தீவனமாகத் தந்தார்கள் மக்கள். இதனால், ஊருக்குள் இருந்த மரங்கள் எல்லாம் மொட்டையடிக்கப்பட்டன.

ஒரு கட்டத்தில், ஆடுகளுக்கு இலை - தழைகளை வெட்டுவதில் கடும் போட்டி ஏற்பட்டு விவகாரம் வெட்டுக் குத்து ரேஞ்சுக்குப் போனது. அதேசமயம், மரக்கிளைகள் வெட்டப்பட்டு மரங்கள் மொட்டையடிக்கப்பட்டதால் ஊருக்குள் மழையும் குறைந்து போனது. அந்த சமயத்தில் தான் ஒரு முடிவுக்கு வந்தது கிராமம். வெள்ளாட்டுக்காகத்தானே மரங்களை மொட்டையடிக்கிறார்கள்; ஊருக்குள்ளும் பிரச்சினை வருகிறது என்று கூடிப்பேசி விவாதித்த கிராம சபையானது, ‘இனிமேல், இந்த ஊருக்குள் யாரும் வெள்ளாடு வளர்க்கக்கூடாது’ என தடைவிதித்தது. அந்தத் தடையானது இன்றளவும் தொடர்கிறது.

வெள்ளாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்துப் பேசினார் விவசாயி து.வைத்திலிங்கம். “சுத்துப்பட்டு கிராமங்களிலேயே எங்க கிராமத்துலதான் தரிசு நிலங்கள் அதிகம். அதேபோல், மரங்களும் இங்கு அதிகமா இருக்கு. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாடுகளுக்கு இலை - தழை வெட்டுறதுல ஊருக்குள்ள ஏகப்பட்ட பிரச்சினை. அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதுக்காக, அன்னைக்கி இருந்த பெரியவங்க எடுத்த முடிவுதான் இந்தத் தடை. ஏழைக் குடும்பங்களுக்கு அரசாங்கம் குடுத்த ஆடுகளைக்கூட கொஞ்சநாள்தான் இங்க வெச்சிருந்தாங்க. அதுக்கப் புறம் பக்கத்து ஊருகள்ல கொண்டுபோய் விட்டு வளர்த்துட்டு இருக்காங்க.

வெள்ளாடு மட்டும்தான்

வெள்ளாடு மட்டும்தான் செடி, கொடி, தழைகளைத் தின்னும், செம்மறி ஆடுகள் புல், வைக்கோல் இதுகளத்தான் தின்னும். அதனால, செம்மறி ஆடுகள வளர்க்குறதுக்கு இங்கே எந்தத் தடையுமில்லை. ஆனாலும் எதுக்கு வம்புன்னு அந்த ஆடுகளையும் வளர்க்க யாரும் முன்வரல. எங்க ஊரு மாதிரியே இந்தப் பக்கத்துல இன்னும் சில ஊருகள்லயும் வெள்ளாட்டுக்குத் தடை இருந்துச்சு. ஆனா, நாளடைவில் அங்கெல்லாம் அந்தக் கட்டுப்பாடு தளர்ந்திருச்சு.

மரங்கள் செழிப்பா இருக்கணும்கிறதுக்காக எங்க ஊருல மட்டும் இப்ப வரைக்கும் கட்டுப்பாடு தொடருது” என்றார் வைத்திலிங்கம்.

தென் மாவட்டங்களிலும் பல கிராமங்களில் வெள்ளாடு வளர்க்க தடை இருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் தோட்டங்களில் புகுந்து பயிர்களை கடித்து நாசம் செய்துவிடும் என்பதாலேயே தடை. ஆனால் இங்கு, மரங்கள் செழிக்க தடை போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் - பாராட்டுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x