Published : 29 Aug 2017 10:21 AM
Last Updated : 29 Aug 2017 10:21 AM
அ
வசர சிகிச்சைகளுக்கும், அவசர உதவிகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்கும், குழந்தைகளை காப்பதற்கும் அரசு சார்ந்த ‘ஹெல்ப் லைன்’கள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மதுரையில், ஆதரவற்றோர், பெண்கள், குழந்தைகளை மீட்கவும், அவர்களுக்கான உதவிகளைச் செய்யவும். ‘ஹெல்ப் லைன்’ (0452 4982828) ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இதை உருவாக்கியிருப்பது யார் தெரியுமா? எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த போட்டோகிராபர் சிவகுமாரும் அவரது நண்பர்களும்!
சேவையில் சிவகுமார்
வீட்டு விசேஷங்களுக்கு படமெடுக்கும் அமெச்சூர் போட்டோகிராபர் சிவகுமார். தொடக்கத்தில் இவர், தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, ஆதரவற்றோருக்கு உதவிவந்தார். வேலை நேரம் போக எஞ்சிய நேரத்தில், மதுரை தெருக்களில் திரியும் மனநோயாளிகள், ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களை உரிய காப்பகங்களில் சேர்ப்பதை ஒரு சேவையாகச் செய் தார் சிவகுமார். சிகிச்சை தேவைப்படுவோரை அரசு மருத்துவமனையில் சேர்த்து, அவர்களை தொடர்ந்து கண்காணித்தும் வந்தார்.
அப்படி இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை மீட்டிருக்கும் இவரை மாவட்ட ஆட்சியர் தொடங்கி பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளனர். தொடக்கத்தில், செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்து சமூக பணிகளில் ஈடுபட்டதால் ஏற்பட்ட ஈர்ப்பே தன்னை இந்தப் பணிக்கு உந்தித் தள்ளியதாகச் சொல்கிறார் சிவகுமார்.
நண்பர்களையும் சேர்த்து..
இதுவரை தனி ஆளாக செயல்பட்டுக் கொண்டிருந்த இவர் இப்போது, தன்னுடன் தொழில்முறையாக பழகும் புகைப்படக்கலைஞர் நண்பர்களுடன் சேர்ந்து ஆதரவற்ற முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்கவும், அவர்களை அவர்களது உறவினர்களிடம் சேர்க்கவும், ‘ஹெல்ப் லைன்’ ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகர், ‘ஹெல்ப் லைன்’ சேவையைத் தொடங்கி வைத்துப் பாராட்டியதோடு இவர்களால் மீட்கப்படும் ஆதரவற்றோரை தற்காலிகமாக தங்க வைக்க இடைக்கால பயண காப்பகம் ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
தங்களின் பணி குறித்து நம்மிடம் பேசினார் சிவகுமார். “விலைமதிப்பற்ற மனித உயிர்கள் அன்றாட சாப்பாட்டுக்கும், மருத்துவச் சிகிச்சைக்கும் வழியில்லாமல் ரோட்டோரங்களில் போராட்டத்தில் விடப்படுகின்றன. இவர்கள் இறந்து போனால் மட்டும் உடலை உடனே அப்புறப்படுத்த அவசரம் காட்டும் இந்த சமூகம், உயிருடன் இருக்கும்போது ஒருவேளை உணவுக்கு உதவுவதில்லை. இப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்படுபவர்களை கண்டுபிடித்து உரிய இடத்தில் சேர்க்கும் வேலையைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.
கடவுள் புண்ணியத்தில், புகைக்கபடம் எடுக்கும் தொழிலில் எங்களுக்கு ஓரளவுக்கு வருமானம் வருகிறது. ஆர்டர் இல்லாத நேரங்களில் ஸ்டுடியோவில் சும்மாதான் இருப்போம். அந்த நேரங்களில் யாராவது தகவல் அளித்தால் ரோட்டில் கிடக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வாங்கிக் கொடுப்போம்; மருத்துவமனையில் சேர்ப்போம். ரொம்பவே முடியாதவர்களை காப்பகங்களில் சேர்ப்போம்.
ஏன் காப்பகத்தில் சேர்க்க வேண்டும்?
இவர்களை ஏன் காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி என் மனதில் திடீரென எழுந்தது. அனைவருமே ஆதரவற்றவர்களாக இருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு கண்டிப்பாக குடும்பம் இருக்கும். அந்தக் குடும்பத்தைக் கண்டுபிடித்து அவர்களோடு இவர்களைச் சேர்த்தால் இன்னும் மன நிறைவாக இருக்குமே என நினைத்தபோதுதான் இந்த ‘ஹெல்ப் லைன்’ யோசனை வந்தது. உடனேயே அதை செயல்படுத்திவிட்டோம்.” என்கிறார் சிவகுமார்.
ஆதரவற்றோரைப் பற்றி யார் வேண்டுமானாலும் இந்த ஹெல்ப் லைனில் தகவல் தரலாம். அந்தத் தகவலை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவரை மீட்டு, அவரை அவரது குடும்பத்துடன் சேர்த்துவைக்க இவர்கள் காத்திருக்கிறார்கள்.
ஒருவேளை, ஆதரவற்ற நிலையில் இருக்கும் நபர்கள் தனது குடும்பத்துடன் சேர மறுத்தாலோ அல்லது அவர்களை குடும்பத்தினர் சேர்க்க மறுத்தாலோ உளவியல் நிபுணர்களைக் கொண்டு இருதரப்புக்கும் மனநல ஆலோசனை வழங்கவும் இவர்கள் ஏற்பாடு செய்வார்களாம். இதற்காக, குழுவுக்கு 5 பேர் வீதம் மீட்பு, ஆலோசனை, ஒப்படைப்புக் குழு என மூன்று குழுக்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
குழுக்களின் வேலை
ஒரு குழு, ஹெல்ப் லைனில் தொடர்பு கொள்வோரை அணுகி சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸுடன் சென்று ஆதரவற்றோரை மீட்கும். இன்னொரு குழு அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும். இன்னொரு குழு, அவர்களது உறவினர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களோடு சேர்க்கும் முயற்சியில் இறங்கும். உறவினர்கள் இல்லாதபட்சத்தில் ஆதரவற்றோர் இல்லங்களில் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்.
“உறவினர்கள் இருக்கும் ஆதரவற்றோரை எக்காரணத்தை முன்னிட்டும் காப்பகங்களில் சேர்க்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறோம்” என்று சொல்லும் சிவகுமார், “ஆதரவற்றோரை மீட்டு வருவதற்காக இரண்டு ஆம்னி வேன்களை வைத்திருக்கிறோம். எங்களது சேவைக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் நாங்களே கவனித்துக் கொள்கிறோம். தற்போதைக்கு, மதுரை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே உதவும் வகையில் இந்த ‘ஹெல்ப் லைன்’ சேவையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் இன்னும் பல ஊர்களில் இதுபோல குழுக்களை ஏற்படுத்தி, அரசு உதவியுடன் தமிழகம் முழுவதுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்துவதே எங்கள் எதிர்கால திட்டம்.” என்கிறார்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT