Published : 29 Aug 2017 10:39 AM
Last Updated : 29 Aug 2017 10:39 AM

வந்தாள் வைஷாலி! - 1: கொடூர விபத்தில் சிக்கிய ஓர் ஏழை பெண் மறுபிறவி எடுத்த உண்மைக் கதை..!

ஜூன் 6, 2017... செவ்வாய்க்கிழமை மாலைப் பொழுது... ‘தி இந்து’ தமிழ் அலுவலகம்...

வந்து கொட்டிக் கொண்டிருந்த செய்திகளுக்கிடையே, ஆசிரியர் குழு மொத்தமும் பரபரவென இயங்கிக் கொண்டிருக்க... அலுவலக வரவேற்பாளர் துர்கா அழைத்தார்.

‘‘குஜராத்ல இருந்து யாரோ வந்திருக்காங்க... எடிட்டர் உங்களைப் போய் என்னனு விசாரிக்கச் சொன்னாரு..!’’

குழப்பத்துடன், ‘‘என்னையா? யார் அவங்க?’’

‘‘தெரியலை. நீங்களே வந்து பாருங்க...’’

யோசனையுடன் வரவேற்புப் பகுதிக்குச் சென்றேன். ஒரு பெரியவர், அம்மா, இளைஞர் மற்றும் ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தனர்.

அந்த இளம்பெண் மீது தானாய் பார்வை படிந்தது. நல்ல நிறம்; அவரது ஒரு கண் மூடியிருந்தது. மற்றொரு விழி அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. வாய் கொஞ்சம் உள்ளே அமர்த்தலாய் இருந்தது.

தயக்கத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். பெரியவர் பேசத் தொடங்கினார் -

‘‘என் பேரு கரீம்... சென்னைலதான் ஆட்டோ ஓட்டறேன். இந்தம்மா பேரு சுனிதா மனோகர் பவார். இது இவரோட பையனும் பொண்ணும்...

ஒருநாள் தற்செயலா என் ஆட்டோல ஏறுனாங்க. தமிழ் தெரியலை. எனக்கு நாலஞ்சு பாஷை தெரியுங்கறதால இந்தியில இவங்களாண்ட பேசிட்டே வந்தேன்.

அப்போதான் அந்தப் பொண்ணுக்கு நடந்த ஆக்ஸிடென்ட் பத்தி தெரிஞ்சுது. வைஷாலிக்கு ஆன கதி, வேற யாருக்கும் வரக் கூடாதுங்க. யாரு காப்பாத்துவாங்கனு புரியாம ஸ்டேட் ஸ்டேட்டா போயி, கடைசியா நம்ம சென்னைக்கு வந்திருக்காங்க’’ என்றார் ஆட்டோக்காரர் கரீம் பாய்.

மாறி மாறி அவரையும் என்னையும் அந்த மூவர் பார்த்துக் கொண்டிருக்க... கேட்டுத் தெரிந்துகொண்டதை நம்மிடம் விவரித்தார் கரீம் பாய்.

‘‘இந்தப் பொண்ணு வைஷாலி... முழுசாச் சொல்லணும்னா வைஷாலி மனோகர் பவார், 18 வயசு. இவங்க மகாராஷ்டிராகாரங்க. பிழைப்பு தேடி புறப்பட்ட குடும்பம் 20 வருஷமா குஜராத்லதான் பிழைச்சுகிட்டு இருக்குது.

 

29ChRGN_Vaishali-2100

 

ஒரு வருசத்துக்கு முன்னாடி, இந்தப் பொண்ணு வைஷாலி ராஜ்கோட்டுல கட்டிட வேலை செஞ்சுகிட்டு இருந்துது. வேலைக்கு அவங்க மர லிஃப்டதான் பயன்படுத்துவாங்களாம். போன வருசம், இதே ஜூன் மாசம் அந்த சம்பவம் நடந்திருக்கு. சித்தாள் வேலையில் இருந்த வைசாலி யாரோ கூப்டறாங்கன்னு லிஃப்டுக்குள்ள இருந்து வெளியே எட்டிப் பார்த்திருக்கு.

அப்போ அங்க இருந்த பீமுக்கும், லிஃப்டுக்கும் இடையில இதோட தலை மாட்டிக்கிச்சு. லிஃப்ட் சடக்குனு இறங்குனதால தலைக்கு மேலயும், கீழயும் வேகமா அமுக்கிடுச்சு. அதுல, பல்லெல்லாம் உடைஞ்சு, வாய்க்குள்ள இருக்கற எலும்புகள் நொறுங்கி, திசுக்கள் எல்லாம் கிழிஞ்சு சேதமாயிடுச்சு. ஒரு கண்ணும் அப்படியே நசுங்கி மூடிக்கிச்சு.

சம்பவம் நடந்த உடனேயே தூக்கிட்டுப் போயி அங்கே ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில வச்சு உசுரைக் காப்பாத்தி இருக்காங்க. அவசரத்துக்கு ஒரு ஆபரேஷன் பண்ணிருக்காங்க. கன்னத்துல பிளேட் வச்சு தச்சுருக்காங்க. ஆனா, மேல் தொண்டைப் பகுதியில சதை மொத்தமா பிய்ஞ்சு போயி, வாய் மூடி அப்படியே ‘லாக்’ ஆயிடுச்சு. ஒரு கண்ணும் சேதம் ஆனது ஆனதுதான்னு சொல்லிட்டாங்க.

இப்ப இந்தப் பொண்ணால வாய் வழியா சாப்பிட முடியாது. வாயைத் திறந்து பேசவும் முடியாது. வாயைத் திறக்க வைக்கவும், தொண்டையைச் சரிபண்ணவும் நிறைய ஊருக்குப் போயி உதவி கேட்டிருக்காங்க. யாரோ டாக்டருங்க ஆறரை லட்சம் வரை இருந்தா பார்க்கலாம்னு சொன்னாங்களாம். அப்படியே ஆபரேஷன் பண்ணாலும், அது ரொம்ப சிக்கலானது, உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்குனு சொல்லிட்டாங்களாம்.

 

கரீம் பாய்

 

ராஜ்கோட்ல இருக்கற அவங்க அப்பா கட்டிட வேல செஞ்சு அம்மா, பொண்ணு, பையன் மூணு பேரும் ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்க்க பணம் அனுப்பியிருக்காரு. ஆனா அது அவங்க போக்குவரத்து செலவுக்கே போதலை.

கடைசி முயற்சியா தமிழ்நாட்டுல யாராவது டாக்டரைப் பாருங்கனு, தெரிஞ்சவங்க சொல்லியிருக்காங்க. அதோட, ஆபரேஷன் செலவுக்கும் இங்க யாராச்சும் நல்ல மனசோட பண உதவி செய்வாங்கனு சொல்லி இருக்காங்க. அதான் நம்ம ஊருக்கு வந்து இறங்கிட்டாங்க. எங்கே போயி நிக்கறதுனுகூட இவங்களுக்குத் தெரியலை. ஏதோ தோணுச்சு... ‘தமிழ் இந்து’ ஆபிஸுக்கு கூட்டியாந்துட்டேன்...”

கரீம் பாய் சொல்லி நிறுத்தியபோது, வேதனையும் பிரமிப்பும் மிகுந்தது.

‘‘ஏங்க... நம்ம பேப்பர்ல செய்தி போட்டா யாராச்சும் உதவி செய்ய மாட்டாங்களா?’’ என்றார் கரீம் பாய்.

மொழி புரியாவிட்டாலும், தனது ஒரு விழியில் ஏக்கத்தை நிறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்த வைஷாலிக்கு ஓரளவு புரிந்திருந்தது அந்தப் பேச்சு. அம்மா அவரது வாயைத் திறந்து காண்பிக்கச் சொன்னார். சிறிதளவே திறக்க முடிந்த அவரது வாயைப் பார்த்தபோது அதிர்ந்தே போனேன். வெளிப்புறத்தில் இருந்தோ, புகைப்படம் வழியாகவோ விளக்க முடியாத நிலையில் இருந்தது.

‘எப்படித்தான் சாப்பிடுகிறார்’ என்று அம்மாவிடம் சைகையில் கேட்டேன்.

வைஷாலியின் மேலாடையைத் தூக்கி வயிற்றுப் பகுதியைக் காண்பித்தார். அங்கே குழாய் ஒன்று வயிற்றோடு இணைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாகத்தான் கடந்த ஒரு வருடகாலமாக, கிடைக்கின்ற காசில் பழச்சாறு வாங்கி ஊற்றி, தன் மகளின் பசியாற்றிக் கொண்டிருக்கிறார் அந்தத் தாய்!

மெல்ல முன்னால் சாய்ந்து வைஷாலியின் கைகளைப் பற்றிக்கொண்டேன். கதகதப்புடன் இருந்த அந்த சகோதரியின் கையை நான் பற்றியதும், அவர் உடல் மெலிதாய் அதிர்ந்தது.

முதல் உதவி போல நடந்து முடிந்துவிட்ட முந்தைய அறுவை சிகிச்சை, தற்போது தேவைப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்கள் தந்த பரிசோதனைக் குறிப்புகள் அனைத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டேன்.

காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, ஆசிரியர் இலாகா சென்றேன். ஆசிரியர் மற்றும் சக பத்திரிக்கையாளர்களுடன் சுருக்கமாக விவாதம் நடத்தியதில், முதல்கட்டமாக சில எண்ணங்கள் தோன்றின.

முகச்சீரமைப்பு சிகிச்சையில் சென்னை தாண்டி பல நாடுகளிலும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் எஸ்.எம்.பாலாஜியிடம் வைஷாலியைக் கூட்டிச் செல்வது என்று முடிவானது...

- பயணம் தொடரும்... | படங்கள்: எல்.சீனிவாசன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x