Published : 28 Aug 2017 02:41 PM
Last Updated : 28 Aug 2017 02:41 PM

யானைகளின் வருகை 22: செவ்வி கவுண்டரும், சந்தன வீரப்பனும்

 

2003-ம் ஆண்டு முதன்முதலாக கோயில் யானைகள் முகாம் முதுமலை தெப்பக்காட்டில் நடத்தி முடித்த பின்பும் பல்வேறு சர்ச்சைகள் இதையொட்டி எழுந்தன. கோயில் யானைகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் அதில் இருந்த கழிவுகளை ஆங்காங்கே காடுகளிலேயே போட்டுவிட்டனர். அந்த லாரியை மாயாற்றில்தான் கழுவினர். முகாம் நடந்த நாட்களில் கோயில் யானைகள் முழுக்க மாயாற்றிலேயே குளியல் போட்டன.

இந்த கோயில் யானைகள் உண்டதன் மீதி உணவுகள், தீவனங்கள் காடுகளிலேயே எறியப்பட்டன. போதாக்குறைக்கு பாகன்கள், ஊழியர்கள், அலுவலர்கள் பயன்படுத்திய பாலித்தீன் பைகள், மருந்து பாட்டில்கள் எல்லாமே காடுகளில் ஆங்காங்கு கிடந்தன. இதனால் தொற்றுவியாதிகள் கானுயிர்களுக்கு பரவும். அவை பல்வேறு இடையூறுகளுக்கு ஆட்படும் என்றெல்லாம் மறுபடியும் பிரச்சினைகளை கிளப்பினர் சூழல் ஆர்வலர்கள்.

காடுகளில் சிதறிக்கிடக்கும் கழிவுகளையே புகைப்பட, வீடியோ ஆதாரங்களாக எடுத்து சிலர் இதற்காக நடவடிக்கை எடுக்கவும், இனிவரும் காலங்களில் இப்படியொரு முகாமை முதுமலையில் நடத்தக் கூடாது என்றும் கோரிக்கை வைத்து நீதிமன்றம் செல்வதாகவும் அறிவித்தனர். என்றாலும் அவர்கள் குரல் மிகவும் அதலபாதாளத்திலேயே ஒலித்தது.

அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என 2005-ம் ஆண்டு வரை இந்த கோயில் யானைகள் முகாம் ஆண்டுதோறும் நடந்தது. 2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி தொடங்கிய பின்பு இந்த யானைகள் முகாம் நடத்தப்படவில்லை. மறுபடி அதிமுக ஆட்சி ஆரம்பித்த 2011-ல் மீண்டும் முதுமலையில் கோயில் யானைகள் முகாம் நடந்தது.

அப்போதும் இங்கே இந்த முகாம் நடத்துவதற்கு சூழலியாளர்கள் எதிர்ப்பு மட்டுமல்ல, கோயில் யானைப் பாகன்கள் மற்றும் அலுவலர்களிடமே எதிர்ப்புகள் கிளம்பின. அதில் கோயில் யானைகளை லாரிகளில் ஏற்றுவது, இறக்குவது, அவற்றை ஏற்றிக் கொண்டு மலைகளில் பயணிப்பது ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை எதிர்த்தே இந்த பிரச்சினைகள் எழுந்தன. எனவே அடுத்த ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் முகாமினை ஆரம்பித்தது தமிழக அரசு.

சரி. இந்த கோயில் யானைகள் முகாமிற்கும், அது முதுமலையில் நடத்தப்பட்டதற்கும் நாம் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் வாழும் யானைகள் கிராமங்களில் புகுந்து விளைநிலங்களை அழிப்பதற்கும், நகரங்களில் புகுந்து அங்குள்ள மனிதர்களை மிதிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். நிறைய சம்பந்தம் இருக்கிறது. இந்த யானைகள் முகாம் நடப்பதற்கு முன்பு காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து இவ்வளவு அழிச்சாட்டியம் செய்ததாக வரலாறு இல்லை என்பதுதான்.

எப்படி? கொஞ்சம் விரிவாகவே இந்த இடத்தில் உட்புகுவது அதற்கடுத்தடுத்து வரும் கட்டுரை தொடர்களை புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

முதுமலை யானைகளின் சரணாலயம். தென்னிந்தியாவின் உயிர்ச்சூழல் முடிச்சு. தென்னிந்திய நதிகளின் ஊற்றுக்கண் பலவும் இங்கிருந்துதான் புறப்படுகிறது. இங்கே சூழலுக்கு எந்த சேதாரம் நடந்தாலும், இங்குள்ள பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு எந்த வகையான ஊறு நேர்ந்தாலும் ஒட்டுமொத்த தென்னிந்திய பகுதிக்கும் ஆபத்து என்பதெல்லாம் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஆராய்ச்சிகளின் பலன்கள்.

ஆனால் அத்தகைய சேதாரம் என்பது ஒட்டுமொத்த புவிக்குமே ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை உலக இயற்கை, சூழல் ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்தே வருகிறார்கள்.

இங்கு மட்டுமல்ல, எங்கும் எந்த உயிரிகளுக்கும், மண் சார்ந்துள்ள இயற்கைக்கும் ஊறு விளைவித்தால்- சிறு தொந்தரவு ஏற்படுத்தினாலும் கூட அதன் சாதக பாதகங்களை மனிதகுலம் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி. இந்த கட்டுரை தொடரின் ஆரம்பத்திலிருந்து இருபதாம் அத்தியாயம் முடிந்தது வரையிலான விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்தால் இதை வாசிப்பவர்களுக்கு ஒரு விஷயம் அழுத்தமாகவும் ஆழமாகவும் புலப்படும்.

1997 ஆம் ஆண்டு தொடங்கி, 2 ஆண்டுகள் கோவை, நீலகிரி காடுகளை ஒட்டியுள்ள ஊர்ப்புற நகர்ப்புற பகுதிகளில் யானைகள் என்பது எந்த இடத்திலும் பிரவேசிக்கவில்லை. அப்படி அவை நுழைந்து யாரையும் அடித்துக் கொன்றோ, தானே பள்ளத்தில் விழுந்தோ, ரயிலில் விழுந்தோ இறக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு தாண்டின பின்புதான் கூடலூர் மலைகிராமங்களில் 22 பேரை அடித்துக் கொன்ற மக்னா பிடிக்கப்படுகிறது.

இதே காலகட்டத்தில்தான் கோவையின் மேற்கு கோடியான ஆனைகட்டியின் தூமனூர், சேம்புக்கரை, தூவைப்பதி,சின்ன ஜம்புகண்டி, பெரிய ஜம்புகண்டி, பால்பண்ணை பகுதி மலைகிராமங்களில் யானைகள் பலரை அடித்தும், மிதித்தும் கொன்றுள்ளன. 2000- 2002 ஆம் ஆண்டுகளில்தான் வாளையாறு காடுகளினூடே செல்லும் ரயில்பாதையில் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன. மற்றபடி இவை எங்கும் ஊருக்குள், நகருக்குள் பிரவேசிக்கவேயில்லை.

இந்த காலகட்டத்திற்கும், அதற்கு முந்தைய காலகட்டத்திற்கும் யானைகள் வேட்டைக்கும், மனித யானை மோதலுக்கான சூழல் என்பது சத்தியமங்கலம், கடம்பூர், திம்பம், ஆசனூர், சாம்ராஜ்நகர், தாளவாடி, காரேபள்ளம், தெங்குமராஹாடா, லிங்காவயல், பவானி சாகர் சுற்றுவட்டாரக் காடுகளில்தான் நடந்துள்ளது. குறிப்பாக சத்தியமங்கலம் காடுகளே யானைகள் வேட்டையர்களின் கூடாரமாகவே திகழ்ந்தது. அதிலும் வீரப்பனின் ஊரான கோபிநத்தம் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடிகளின் தலைமையிடமாகவே இருந்திருக்கிறது.

வீரப்பனுக்கு முன்பு...
  • வீரப்பனுக்கு முன்பே செவ்வி கவுண்டர் என்பவர் யானை வேட்டையாடிகளை ஊக்குவிக்கும் பின்புலமாக இருந்திருக்கிறார் . இதை என்றென்றும் யானைகள் என்ற தனது நூலில் விளக்குகிறார் யானை ஆராய்ச்சியாளர் ராமன் சுகுமார்.

ஆப்பிரிக்க தந்தங்களை வாங்க அனுமதி (லைசென்ஸ்) வாங்கி வைத்திருந்தவர்கள், அதை முன்வைத்து ஆசிய யானைகளையும் அழித்து தந்தங்களை எடுத்தார்கள் என்பதும்,இந்திய யானை தந்தத்திற்கும், ஆப்பிரிக்கா யானை தந்தத்திற்கும் வேறுபாடு இல்லாமல் இருப்பதே இவர்களின் யானை வேட்டைக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்தே வீரப்பன் வந்துள்ளான். அவன் தன் கும்பலோடு சேர்ந்து, யானைகளை வேட்டையாடியுள்ளான். தந்தம் வியாபாரிகள் அவனுடன் ஐக்கியம் பூண்டிருந்தனர் என்பதெல்லாம் வரலாறு.

இந்த தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடும் கோபிநத்தம் பகுதி வேட்டையர்கள் 1983 ஆம் ஆண்டில் முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா பகுதிகளிலும் புகுந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மட்டும் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் 1970 முதல் 1985 வரை ஆண்டுக்கு சுமார் 100 முதல் 150 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்றும், அதில் சராசரியாக 100 ஆண் யானைகள் தந்தத்திற்காகவே வேட்டையாடப்பட்டன என புள்ளி விவரம் கொடுக்கிறார் ராமன் சுகுமார். 2003 அக்டோபரில் முதுமலை பகுதியில் கோயில் யானைகள் முகாமை நடத்துகிற வரையில் காட்டு யானைகள் கோவை காடுகளிலிருந்து வெளியே வரவில்லை. அப்படிப்பட்ட சம்பவங்களும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நிகழ்ந்திருக்கின்றன.

ஆனால் அதற்கு பின்பே மந்தை, மந்தையாய் யானைகளை வடகிழக்கே கிருஷ்ணகிரி காடுகள் தொடங்கி, தென்மேற்கே வாளையாறு காடுகள் வரை காணமுடிகிறது. அதுவும் நகருக்குள் புகுந்து விளையாடுகிறது என்றால் என்ன அர்த்தம்? 1970களில் செவ்வி கவுண்டர் ஆட்கள் மூலமும், 1980களில் வீரப்பன் கும்பல் மூலமும் ஒசூர் தொடங்கி சத்தியமங்கலம் காடுகள் வரை யானைகள் எந்தந்த வகையில் இடையூறுகளுக்கு (DISTURBANCE) ஆட்பட்டதோ, அந்த தொந்தரவுகள் இங்கும் நடந்திருக்கிறது, நடந்து வருகிறது என்றே கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் காடுகள் அழிப்பில் நூறு வீரப்பன்கள், செவ்வி கவுண்டர்கள் செய்திருக்க வேண்டிய அட்டூழியத்தை இங்குள்ள தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆன்மீக மையங்கள், அரசியல்வாதிகள் செய்துள்ளனர் என்றே உவமானம் சொல்கின்றனர் இப்பகுதியை ஆராய்ச்சி செய்யும் சூழலியாளர்கள். அதனால்தான் அவை காட்டை விட்டு வெளியேறுகின்றன. கண்டவர்களையும் போட்டு மிதிக்கின்றன. அவையும் வழிதெரியாமல் ரயிலிலும், மின்வேலியிலும் சிக்கி சாகின்றன. அப்படியென்ன அட்டூழியங்கள் இங்கே நடந்தன. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x