Published : 31 Jul 2017 04:34 PM
Last Updated : 31 Jul 2017 04:34 PM
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கோவை புதூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான சிறு கிராமம் பச்சாபள்ளி.
புதர்கள் நிறைந்த சிறுபள்ளம். வடக்கு தெற்காக செல்லும் இந்த பள்ளத்தில் வரிசையாய் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுக்கூரை வீடுகள். விடிந்து எழுந்தால் கூலி வேலைக்கும், தோட்டத்து வேலைகளுக்கும் செல்லும் ஜனங்கள். அது ஒரு நள்ளிரவு கடந்த நேரம். அந்த வீட்டிற்குள் கடமுடா சத்தம்.
ஒற்றை அறைக்குள் கணவன் மனைவி மட்டுமே படுத்து அயர்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். சத்தம் கேட்டு முதலில் விழித்தவர் மனைவி. 'ஏங்க ஏதோ உருட்டற சத்தம் கேட்குது, என்னன்னு பாருங்க!' என்று சொல்லிவிட்டு புரண்டு படுத்தாள். கணவன் விழித்தான்.
அங்கு பார்த்தால் தன் தாழ்வான வீட்டுக்கூரை உடைக்கப்பட்டு அதிலிருந்து அனகோண்டா பெரிய மலைப்பாம்பு போன்று புஸ், புஸ் என்ற இரைச்சலுடன் உள்ளுக்குள் ஏதோ தேடிக் கொண்டிருந்தது. கும்மிருட்டிலும் தெரிந்த அந்த தோற்றம் கணவனை வெளிற வைத்துவிட்டது. வியர்க்கவும் வைத்து விட்டது.
'இவ்வளவு தடிமனான மலைப்பாம்பா?' என்று சுதாரித்து பார்த்த நேரத்தில்தான் வீட்டின் ஓரமாய் ஜன்னல் ஓரம் வைத்திருந்த தக்காளிக்கூடைகளில் ஒவ்வொன்றாக உறிஞ்சி உறிஞ்சி எடுத்து ஜன்னல் வழியே அது போட ஆரம்பித்தது.
அப்புறம் அதை உற்றுப் பார்த்தால்தான் தெரிந்தது. ஜன்னலோரம் நின்றிருந்தது பெரிய கொம்புள்ள யானை. தக்காளி ஒவ்வொன்றாக போடப்பட்ட இடம் யானையின் அகன்ற வாய். மலைப்பாம்பு போல் கூரையிலிருந்து தெரிந்தது யானையின் தும்பிக்கை. அந்த யானைதான் தன் தும்பிக்கையால் ஓட்டுக்கூரையை பொத்தல் போட்டு லாவகமாக தக்காளிகளை எடுத்து தன் வாய்க்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதை கணவனின் மூளை பளிச்சென்று உணர்ந்த நேரத்தில் அங்கே படுத்திருந்த மனைவியும் விழித்து விட்டார்.
அச்சத்தில் இருவருக்குமே பேச நா எழவில்லை.
'உஸ்.. உஸ்.. ஆனெ.. பேசாம எங்கூட அப்படியே வா!'
கிலி கிசு, கிசுப்புடன் கணவன் சொல்லி எழுந்தால் கூட யானைக்கு தெரிந்து விடும் என அப்படியே தவழ்ந்தான் கணவன். அப்படியே படுத்த வாக்கில் எழுந்து வீட்டுக்கதவின் நாதாங்கியை திறந்தான். ஒரே நேரத்தில் இருவரும் விருட்டென்று வெளியேறினார்கள்.
'அய்யோ.. யானை... யாராவது வாங்களேன்!' என்று ஒரே ஒரு கூச்சல்தான்.
மறுகூச்சலை மனைவியால் மட்டுமல்ல, கணவனாலும் போடமுடியவில்லை.
ஏனென்றால் இவர்கள் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்து ஜனங்கள் வரவில்லை. மாறாக வீட்டு வாசலில் மேலும் இரண்டு யானைகள் நின்றிருந்தது. அவ்வளவுதான் இருவரும் பதுங்கிப் பதுங்கி சுவரோரமாகவே நடந்தும் தவழ்ந்தும், பிறழ்ந்தும் வீட்டின் பின்பகுதிக்கு வந்தார்கள்.
நல்லவேளை அங்கே யானைகள் இல்லை.
எடுத்தனர் ஓட்டம்.
'ஐயோ யானை.. யானை.. எல்லாம் ஓடி வாங்க!'
அந்த நள்ளிரவு அலறல் சத்தத்தில் அந்த பகுதியில் வரிசையாக இருந்த வீடுகள் முழித்துக் கொண்டன. சிலவற்றில் மின் விளக்குகள் பளிச்சிட்டன. சில வீடுகள் மின் விளக்குகளை போடவே பயந்தன.
ஏனென்றால் வெளிச்சம் பார்த்தால் மிரண்டு வந்து தாக்கும் காட்டுயானைகள் என்பது அந்த வீடுகளில் வசிப்பவர்களின் கடந்த கால அனுபவம்.
சில நிமிடங்களில் பல வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வந்துவிட்டார்கள்.
ஆளாளுக்கு கையில் வானவெடியை எடுத்து கொளுத்தி யானைகள் நின்ற பக்கம் வீசினார்கள்.
அங்கே ஒரே பிளிறல் சத்தம். திபு, திபு ஓட்டம்.
கரிய இருட்டிலும் புழுதி கிளம்பும் படிமம் வானில் மேகம் போல். யானைகள் அடுத்ததாக இருந்த குடியிருப்புகளில் பாய்ந்தன. அங்கும் பட்டாசு வெடி சத்தம்.
அங்கிருந்து தென்னந்தோப்பு, வாழைத்தோப்புகளில் புகுந்தன. அங்கெல்லாம் மின்சார வேலி பாதுகாப்பு, அந்த மின் கம்பியில் பட்டு முன்னேறிச் சென்ற யானை பிளிறல் சிக்னல் கொடுக்க மற்ற யானைகள் நின்றன.
பிளிறல் எழுப்பிய யானை பின்பக்கமாகவே நகர்ந்து வேறு திசையில் பாய்ச்சல் காட்ட மற்ற யானைகளும் அதை பின்தொடர்ந்தன. இப்படியாக கிட்டத்தட்ட 2 மணி நேரம் யானைகள் விரட்டின விரட்டல். அதன் பிறகே அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தில் மையம் கொண்டன யானைகள்.
இந்த பச்சாபள்ளி மட்டுமல்ல கோவை மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் கேரள மாநில எல்லை தொடங்கி வடமேற்கு பகுதியில் உள்ள சத்தியமங்கலம் காடுகள் வரை நூற்றுக்கணக்கான மலை கிராமங்கள் காட்டு யானைகள் கிளப்பும் நள்ளிரவு கிலியுடன்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
பச்சாபள்ளியைப் பொறுத்தவரை கோவை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட நகரமைப்புக்குள் வருவது. அதை ஒட்டிய மாதிரி கூப்பிடு தூரத்தில் பிரஸ் என்கிளேவ் எனப்படும் பத்திரிகையாளர் குடியிருப்பு. சுமார் 10 ஏக்கர் நிலத்தை ஒரு விவசாயியிடம் விலைக்கு வாங்கி, அதை 110 வீட்டுமனைகளாக பிரித்து, அதில் சுமார் 40 வீடுகள் உருவாகியுள்ளன.
அதில்தான் எட்டு ஆண்டுகளாக கோவை பத்திரிகையாளர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அதற்கு பின்புறம் (மேற்குப்பகுதியில்) இப்போதுதான் நிறைய குடியிருப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதன் மேற்குக் கோடியில் ஆறேழு கிலோமீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் சூழ்ந்திருக்கின்றன. இதற்கு தெற்கில் ஏழெட்டு கிலோமீட்டர் தூரத்தில்தான் பாலக்காட்டுக் கணவாய் தொடக்கம் தெரிகிறது.
இந்த பாலக்காட்டுக் கணவாய்க்கு மேற்கில் ஒட்டினாற்போல் பெருவழி ஒன்று உள்ளது. சோழ, சேரர், பாண்டியர் காலத்தில் ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்ட இந்த வழியில்தான் கொச்சின் துறைமுகத்தில் வந்திறங்கின ரோமானிய, ஸ்பானிய நாட்டின் அந்நியப் பொருட்கள் எல்லாம் கொங்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல, அதைத் தாண்டி சோழ, பாண்டிய நாடுகளுக்கும் சென்றன. இந்த பெருவெளி தற்போது காடும், காடு சார்ந்த வனவிலங்குகள் மயமாக காணப்படுகிறது.
இதன் அடிவாரத்தில் சுமார் 1300 ஏக்கர் பரப்பளவில் மினி சுவிட்சர்லாந்து எனப்படும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நவீன ரக வீடுகள் உருவாகியுள்ளன. அதனூடே உலகத்தரத்தில் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 'கோல்ப்' புல்வெளி மைதானம் ஒன்றும் உருவாகியிருக்கிறது. இந்த கோல்ப் மைதானத்தை ஒட்டியிருக்கிற நவீன ரக வீடுகள் விலை ரூ.1.50 கோடி தொடங்கி ரூ. 15 கோடி வரை விற்கிறது.
அதை பெரும்பாலும் வாங்கியிருப்பவர்கள் என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள். இந்த வீடுகளை சுற்றிலும் யானைகள் வராமல் இருப்பதற்காக பெரிய, பெரிய அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடவே மின்வேலிகளும் காணப்படுகின்றன. இதற்கும் பச்சாபள்ளிக்கும் இடையே துண்டு துக்காணியாக சில நிலங்களில் மட்டும் விவசாயம் நடக்கிறது.
அவர்களும் வாழை, தென்னை, சோளத்தை தவிர வேறு எதையும் விதைப்பதில்லை. யானைகளுக்கு விருப்பமான உணவு இவை. தங்களுக்கு போக்கிடம் இல்லை. காடுகளில் பசியாற பயிர் பச்சைகளும் இல்லை. குடிக்கத் தண்ணீரும் இல்லை என்ற சூழ்நிலையில் காட்டுயானைகள் இங்கே படையெடுக்கின்றன என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதுவெல்லாம் யானைகளின் வலசைப் பாதை. அதில் குடியேற்றம் நிகழ்நதால் யானைகள் எங்கே போகும்? என்ற கேள்விகளுடன் நகரும் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றன. உண்மையில் இவை யானைகளின் வலசைப் பாதையா நிச்சயம் இல்லை என்றும் சொல்ல முடியாது. அதற்காக இவை எல்லாமே யானைகளின் வலசைப்பாதை என்று உறுதியாகவும் சொல்லிவிடமுடியாது.
மேற்கே வாளையாறு, ஆனைகட்டி தொடங்கி, கோபனாரி, முள்ளி, மேட்டுப்பாளையம், சிறுமுகை என நீண்டு செல்லும் கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டிக்கிடக்கும் அடிவாரப் பகுதி கிராமங்களை முன்பெல்லாம் மக்கள் மலையோர கிராமங்கள் என்றுதான் வகைப்படுத்தினார்கள்.
1997 முதல் 2016 வரை பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை புரட்டிப் பார்க்கிறேன். நான் இந்தப் பகுதிகளில் சேகரித்த செய்திகளையும் கோர்த்து பட்டியலிட்டு பார்க்கிறேன். அதில் கிடைத்த யானைகளை பற்றிய தரவுகள், செய்திகளை தேடியதில் பெரிய அதிர்ச்சியும், ஆச்சர்யமுமே ஏற்பட்டது.
அதாவது, 1997 ஆம் ஆண்டில் தொடங்கி இரண்டரை ஆண்டுகாலம் மேற்சொன்ன சுற்றுவட்டாரங்களில் இப்படி யானைகள் ஊருக்குள் நுழைந்ததாகவோ, விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்ததாகவோ, குடியிருப்புகளை நொறுக்கியதாகவோ, தோட்டத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகளை மிதித்துக் கொன்றதாகவோ, அதிகாலை காலைக்கடன் கழிக்க சென்ற காலனிவாசியை அடித்துக் கொன்றதாகவோ செய்திகளே இல்லை.
'காட்டுக்குள் விறகு பொறுக்கச் சென்றவர் யானை மிதித்து பலி; வனப்பொருட்கள் எடுக்கச் சென்ற ஆதிவாசி காட்டு யானை தாக்கி சாவு!' என்ற செய்திகள் மட்டுமே அவ்வப்போது வந்துள்ளன. அதுவும் சத்தியமங்கலத்தை ஒட்டியுள்ள வீரப்பன் காடுகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. நான் சேகரித்த செய்திகளில் கூட மேற்சொன்ன விதத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன என்ற விதத்தில் எந்த செய்தியும் பதிவானதில்லை.
ஆனால் 2000 ஆம் ஆண்டு தொடங்கி 2003 வரை குடியிருப்புகளில், வாழைத்தோட்டம், கரும்புத்தோட்டங்களில், ஊருக்குள் குடியிருப்புகளில் புகுந்த யானைகள் பற்றி பதிவான செய்திகள் ஏராளம்.
அதிலும் யானை மிதித்து இறந்தவர்களின் துயரம் குறித்த செய்திகளை விட, ரயிலில் அடிபட்டு, பாலீதின் பை வயிற்றில் எடுக்கப்பட்டு, வெடி வெடித்து, துப்பாக்கி ரவை பாய்ந்து, மின்வேலியில் சிக்கி, அகழியில் மாட்டி இறந்த யானைகளின் சோகச்செய்திகளை பார்க்கும்போது நம்மை அறியாமல் மனம் சஞ்சலப்படுகிறது..
அதிலும் 2013 செப்டம்பர் தொடங்கி இன்றுவரை மாதம் தவறினாலும் தவறும், மாதத்தில் பாதிநாட்கள் ஏதாவது ஒரு மூலையில் மனிதத்தவறினால் காட்டு யானை இறப்பு காட்டு, யானையால் மனிதர்கள் இறப்பு, மனிதர்கள் உடமைகள் சேதம் என்ற செய்தி இடம் பிடிப்பது தவறுவதேயில்லை. இதிலெல்லாம் உச்சபட்ச கொடுமை தொடர்ந்து காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள்தான்.
சுமார் 20 ஆண்டுகளுக்குள் எப்படி இந்த முரண்பாடு. முதல் 3 ஆண்டுகளில் ஊருக்குள் கண்ணுக்கே தட்டுப்படாத யானைகள், ஏன் அதற்குப்பிறகு இங்கே வந்து வீழ்கின்றன. யானைகள் யானைகளாகத்தான் இருக்கின்றன. மனிதர்கள்தான் அசுர பலத்தில் தங்கள் வரையறைகளை பாய்ச்சல் வேகத்தில் தாண்டிக் கொண்டிருப்பதால் நடக்கும் கேடுதான் என்பதை அந்த செய்தி அனுபவங்களை முன்வைத்தே பேச முடிகிறது.
அதிலும் நான் சேகரித்த, யானைகளுடனே வாழ்ந்து சேகரித்த செய்திகளை நினைக்கும்போது நெஞ்சு நெகிழ்கிறது. அதையே இங்கே நம் இணையதள வாசகர்களுக்காக யானைகளின் வருகை என்ற தலைப்பில் விரிக்கிறேன். அதில் முதலாவதாக வருவது ஒரு காட்டு யானையின் காலடியில் நான் விழுந்து தப்பித்த அனுபவம்.
- மீண்டும் பேசலாம்...
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT