Published : 21 Aug 2017 06:37 PM
Last Updated : 21 Aug 2017 06:37 PM

யானைகளின் வருகை 17: காப்பாற்றப்பட்ட சிறூர் வலசை; சிக்கலில் கோபனாரி

தமிழகத்திலேயே அதிக வனவிலங்குகள் நிறைந்த பகுதி தெங்குமரஹாடா என கருதப்படுகிறது. யானைகள், புலிகள், சிறுத்தைகள், கருஞ் சிறுத்தைகள், காட்டு மாடுகள், காட்டெருமைகள், கடமான்கள், புள்ளிமான்கள், முள்ளம்பன்றி, கரடி என அனைத்து வகை விலங்கினங்களின் புகலிடமாக மட்டுமல்ல, இங்கு ஓடும் மாயாறில் காணப்படும் பறவைகளுக்கு கணக்கே இல்லை.

இப்படிப்பட்ட கிராமத்திற்கு பவானி சாகரிலிருந்தும், மேட்டுப்பாளையத்திலிருந்தும் மட்டுமே எண்ணிச் சில பேருந்துகள் செல்கின்றன. அவையும் மாயாற்றில் வெள்ளம் மிகுந்தால் செல்ல முடியாது. அந்த சமயம் மற்ற வாகனங்கள் செல்வதும் கஷ்டம். இப்படிப்பட்ட பசுமை சூழ் பகுதியில் மூன்று பாலங்கள் கட்டி சாலைகள் போட்டால் நிலைமை என்ன ஆகும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பாகவும், வனத்துறையினர் இதற்கு முன்னரே தடைபோட்டதற்கான காரணமாகவும் விளங்கியது.

இப்படியிருக்க கூடலூர் தொகுதியின் அப்போதைய எம்.எல்.ஏவான மில்லர் இந்த சாலையை போட்டுத் தருவதாக பிரதான தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். அந்த திட்டத்தை தூசு தட்டி அரசிடம் ஒப்புதலும் பெற்றுவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் கூடலூரில் நடந்த இலவச சட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் இந்த சாலையை உடனடியாக அமைக்க கோப்புகளை நகர்த்த வேண்டும் என்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தனர். அதை ஏற்று வாக்குறுதியும் தந்திருந்தார் ஆட்சியர். அதனால் சூழல் ஆர்வலர்களிடம் புயல் கிளம்பியிருந்தது. மக்னாவிற்காக வழக்குப் போட்ட வழக்குரைஞர் ராஜேந்திரன் இந்த சாலைக்கு எதிராகவும் வழக்கு போட உள்ளதாக அறிவித்திருந்தார்.

'இந்தப் பகுதியில் சாலை அமையக் கூடாது. ஏற்கெனவே உள்ள வனத்துறையின் பழுதுபட்ட சாலைகளையும் பழுது நீக்கக்கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி அல்ல இது என்றாலும் கூட, அதன் அருகாமைப் பகுதியாக விளங்குவது. இங்கே முதுமலையை விடவும் கூடுதலாக யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதை காணலாம். இதற்கு காரணம் இங்கே யானைகளுக்கு பிடித்த ஒரு வகைப்புற்கள் இங்கேதான் இருக்கிறது. யானைக் குட்டிகளுக்குத் தேவையான ஒரு வகைக் கிழங்குகளும் இங்கேதான் கிடைக்கின்றன. அதனால் யானைகள் பெரும்பாலும் கன்று ஈனுவதும், ஆண் யானைகளும் இணைசேர்வதும் இங்கேதான்.

இங்கே சாலைகள் அமைத்தால் மரங்கள், யானைத் தந்தம் திருடுபவர்களுக்கும், கடத்துபவர்களுக்கும் வசதியாக போய்விடும். இப்பவே கூடலூர்- பந்திப்பூர் (கர்நாடகா பகுதி) போவதற்குள் (15 கிலோ மீட்டர் தூரம்தான்) 400 முதல் 500 மிருகங்கள் வருடத்திற்கு வாகனங்களில் அடிபட்டு சாவதாக ஆவணங்களில் உள்ளது. இப்போது இந்த ரோடும் முழுமையாக உருவானால் இந்தப் பகுதியில் வனவிலங்குகளையே காணமுடியாத சூழல் ஏற்பட்டு விடும். காடுகளும் விரைவில் அழிக்கப்பட்டுவிடும்!' என்பதே அப்போது சிறூர் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழலியாளர்களின் எச்சரிக்கையாக இருந்தது.

அதே அதிருப்தியை வனத்துறையினரும் வெளிப்படுத்தினர். அவர்களில் உயர்அதிகாரிகள் சிலரிடம் பேசும்போது, 'இந்த இடம் போல மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியும் யானைகள் நடைபாதையாய் இருந்ததுதான். பிரம்மாண்ட நீர்விளையாட்டு கேளிக்கை பூங்கா (பிளாக் தண்டர்) நூற்றுக் கணக்கான ஏக்கரில் உருவானது. அதேபோல் சுவாமி சச்சிதானந்த குருகுலம் வந்தது. அதன் பிறகு என்ன ஆச்சு. அப்பகுதியில் யானைகள் அடிபடுவதும், இறப்பும் அதிகரித்தது. யானைகள் எண்ணிக்கையும் குறைந்தது. அதேபோல்தான் கோவை பூண்டி, ஆனைகட்டி பிரதேசங்களிலும் பறவைகள் ஆராய்ச்சி மையம், தியானலிங்கம் (தற்போது ஆதியோகி) என்றெல்லாம் அமைத்தார்கள். மக்கள் வருகை அதிகமாச்சு. அதனால் யானைகளின் மூர்க்கமும் அதிகமாகி ஊருக்குள் புகுவதும், அப்பாவி மக்களை தாக்குவதும் ஆரம்பித்துள்ளது.

இங்கேயும் சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்தைத் தொடங்கினால் மற்ற இடங்களை எல்லாம் விட மனித-மிருக மோதல் என்பது அதிகமாகி நிலைமை மோசமாகும். தற்போது (2001 ஆம் ஆண்டில்) முதுமலை சரணாலயப் பகுதிகளடங்கிய ஏழெட்டு கிலோமீட்டருக்குள் மட்டும் பதின் மூன்று வேகத்தடைகள் உள்ளன. அவற்றில் பயணம் செய்யும் லாரிக்காரர்கள் (மைசூர் செல்ல பிரதான சாலை இது) தடைகளை தாமே உடைத்து நொறுக்கி விட்டு, வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்கிறார்கள். இதனாலேயே மான் நரி, குரங்கு வகைகள் என காட்டு விலங்குகள் ஏராளமாக அடிபட்டு சாகின்றன.

இந்த நிலைமை இங்கு மட்டுமல்ல; வனவிலங்குகள் வசிப்பிடங்களில் எங்கும் வரக்கூடாது என்பதுதான் எங்கள் ஆசை. ஆனால் சாலை வேண்டும்; அடிப்படை வசதி வேண்டும்; தங்கள் அன்றாடப்பணிகள் சுலபமாக வேண்டும் என்று மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கே ஓட்டுரிமை இருக்கிறது. அவர்களின் ஓட்டை நம்பியே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களின் முடிவே இங்கே சட்டமாகிறது. அதன் முன்பு நாங்களும், எங்கள் ஆசையும், மிருகங்களின் உயிர்களும் நிற்க முடியுமா என்பதே எங்கள் கேள்வி!' என்று வேதனை தெரிவித்தனர்.

சாலை அமைத்தே தீருவேன் என்று உறுதிபட சொன்ன எம்.எல்.ஏ மில்லருடன் பேசியபோது, 'எந்த வகையிலும் இந்த சாலை அமைவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. அது அடிப்படையில் பொட்டல்காடு. யானைகள் நடமாட்டமும் இருக்கிறது. அதற்காக ரோடே போடக்கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம்? வனமும் இருக்கணும்; வனவிலங்குகளும் வாழணும், மக்களும் பிழைக்கணும் அல்லவா? அந்த நோக்கத்தில் மட்டும் இந்த திட்டத்தை பார்க்க வேண்டும். நம்ம மக்களுக்காகத்தானே போராடுகிறோம். பேப்பர்ஸ் டெல்லி வரைக்கும் போயாச்சு. மக்கள் கேட்பது 18 மீட்டர் அகலச்சாலை. ஆனா 12 மீட்டர்தான் அனுமதின்னு சொல்லியிருக்காங்க. அஸ்ஸாம் காடுகளில் அவ்வளவுதான் அதிகபட்சம் அனுமதிக்கப்பட்டிருக்கு. விதியை தளர்த்த சொல்லி கேட்டிருக்கோம்!' என்று தெரிவித்தார்.

இந்த விஷயங்கள் எல்லாம் அப்போது செய்தியாக வெளியாக, மேலிடத்தில் பல்வேறு துறைகள் வரை அது எட்டியது. இங்கே சாலைபோடுவதற்கு எதிராக சூழலியாளர்களின் எதிர்ப்பும் முன்பை விட வீரியமாக எழுந்தது. அதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் குழு இந்த சாலை அமையும் பகுதியை பார்வையிடவும், ஆய்வறிக்கை தயாரிக்கவும் இங்கே வந்தது. சிறூர் தாண்டி சில பகுதிகளை பார்த்தவேகத்தில் அவர்கள் திரும்பி விட்டார்கள்.

'இங்கே சாலை அமையவே கூடாது!' என்று அழுத்தமாக தெரிவிக்க, இங்கே சாலை அமையும் திட்டத்தில் முட்டுக்கட்டை விழுந்தது. என்றாலும் கூட அடுத்தடுத்த தேர்தல்களிலும் இந்த சாலை விவகாரம் அரசியல்வாதிகளிடம், 'நான் கூடலூர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறூர் சாலையை ..!' என வாக்குறுதியாக எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

யானைகளின் பாதையான இந்த வலசையின் நிலைமை 17 ஆண்டுகளாக இப்படி அரசியல் அரிதாரம் பூசிக் கொண்டிருக்க, 2003ல் யானையின் வலசைப் பாதை ஒன்று எடுத்த எடுப்பில் போடப்பட்டு சூழலியாளர்களின் சாபத்தை வாங்கிக் கொண்டது. அதன் பெயர் தோலம்பாளையம்- கோபனாரி கிராமத்து சாலை.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x